வெள்ளி, 1 டிசம்பர், 2017

சீரியலை பார்த்து தீ நடனம் ஆடிய சிறுமி உயிரழப்பு ,,, நந்தினி சீரியல் போலவே வீட்டில் நெருப்போடு விளையாடிய

“தீ நடனம்” சிறுமி பலி!  மின்னம்பலம் : கர்நாடக மாநிலத்தில் 7 வயது சிறுமி டிவி சீரியலைப் பார்த்து, அதேபோல் தீ நடனத்தை ஆட முயற்சி செய்ததில் உடல் கருகி உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹரிஹரா பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்- சைத்ரா. கூலி தொழில் செய்து வரும் இவர்களின் மகள் 7 வயது பிரார்த்தனா. இச்சிறுமி அப்பகுதியில் உள்ள தூய மேரி கான்வெண்ட் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்துவந்தாள்.
இந்நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், பிரபல தமிழ் இயக்குநரின் தயாரிப்பில் பல்வேறு மொழிகளில் ஓடிக்கொண்டிருக்கும் “நந்தினி” என்ற சீரியலை அவர்களின் தாய் மொழியான கன்னடத்தில் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சீரியலைத் தொடர்ச்சியாக பார்ப்பது பிரார்த்தனாவின் வழக்கம்.

அப்போது, சீரியலில் நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்தன. அதைப் பார்த்த பிரார்த்தனா, அதேபோல் முயற்சி செய்ய நினைத்து, கடந்த 11ஆம் தேதி, கையில் ஒரு பேப்பரை எடுத்துத் தீ வைத்துக்கொண்டு நடனமாடினாள். அப்போது எதிர்பாராத விதமாக பிரார்த்தனாவின் ஆடையில் தீப்பற்றிக்கொண்டது. தீ உடல் முழுவதும் பரவியது. எனவே, வலி தாங்க முடியாமல் அலறினாள்.
சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். உடனடியாக தாவணகெரே அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டுசென்றனர். தற்போது 15 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தாள்.

இது குறித்து பிரார்த்தனாவின் தந்தை மஞ்சுநாத் கூறுகையில், ‘‘குழந்தைகளை டிவி சீரியல் பார்ப்பதைத் தடுக்க வேண்டும். நான் என் மகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல் ஒரு சீரியலை பார்த்து நிறையப் பேர் பறப்பதாக எண்ணிக்கொண்டு கட்டிடத்தின் மேல் இருந்து கீழே விழுந்து இறந்தனர். இப்போது என் மகள் உடலில் தீ வைத்து நடனமாடி உயிரிழந்திருக்கிறாள். இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை ஹரிஹரா காவல் துறையில் புகார் கொடுத்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாவணகெரே மாவட்ட நிர்வாகம், டிவி சீரியல் தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியைத் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: