செவ்வாய், 28 நவம்பர், 2017

அன்புசெழியனின் கூட்டாளி பிடிபட்டார் .. அன்பு தப்பிவிட்டது?

பிடிபட்ட நண்பர்: தப்பிய அன்புச் செழியன்

மின்னம்பலம் : பைனான்சியர் அன்புச் செழியன் தலைமறைவாக உள்ள சூழலில் அவரது நண்பர் முத்துக்குமார் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் சாதிக் ஆகியோரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்‌ஷன் நிறுவனத்தின் அலுவலக மேலாளர் மற்றும் இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், நவம்பர் 21 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். கடன் பிரச்சினை காரணமாகவும் பைனான்சியர் அன்புச் செழியன் கொடுத்த மன அழுத்தத்தாலும் தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதத்தில் கூறியிருந்தார். இது தொடர்பாக சசிகுமார் அளித்த புகாரை அடுத்து அன்புச் செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் அன்புச் செழியன் தலைமறைவாகிவிட்டார். இருப்பினும் அன்புச் செழியனைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ள காவல் துறையினர் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அன்புச் செழியனின் நண்பர் முத்துக்குமாரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புச் செழியனும் முத்துக்குமாரும் இணைந்து ஹைதராபாத் சென்றது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சென்னை ஜாபர்கான்பேட்டையில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்திவரும் முத்துக்குமாரை அழைத்துச் சென்று வளசரவாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதனையடுத்து கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் சாதிக்கிடமும் வளசரவாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முத்துக்குமார், சாதிக் ஆகிய இருவரிடமும் அன்புச் செழியன் எங்கு உள்ளார் என்று தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அன்புச் செழியன் எங்கு இருக்கிறார் என்ற உண்மை வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை ஒருபுறமிருக்க, அன்புச் செழியனைக் கைது செய்ய வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட 6 தனிப்படைகளையும் திரும்ப வரும் படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், தேனியில் முக்கிய பிரமுகர் வீட்டில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலின்படி துணை கமிஷனர் தனிப்படை ஒன்றைத் தேனிக்கு அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: