வெள்ளி, 1 டிசம்பர், 2017

மதுசூதனனின் Flashback... கொலை.. அசிட் வீச்சு..அடிதடி....

tamiloneindia : தமிழகத்துக்கே ஆசிட் வீச்சு கலாசாரத்தை அறிமுகப்படுத்திய ஆர்.கே.நகர் மதுசூதனன் வரலாறு ;
அதிமுகவில் ஜெயலலிதா தலையெடுத்த பிறகு சென்னையில் அக்கட்சியினர் அரங்கேற்றிய அத்தனை அராஜகங்களிலும் அடிப்பட்டவர்தான் இன்றைய அதிமுக அவைத் தலைவரும் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளருமான மதுசூதனன். குறிப்பாக தமிழகத்துக்கே ஆசிட் வீச்சு கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர் என்கிற கடந்த கால வரலாற்றுப் பெருமை மதுசூதனனுக்கு உண்டு.
26 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் அதிமுகவின் இன்றைய அவைத் தலைவர் மதுசூதனன்.
அதிமுகவில் ஜெயலலிதா தலையெடுத்த காலங்களில் மன்னார்குடி குடும்பத்தின் திவாகரன், தினகரன் சபாரி போட்டுக் கொண்டு ஜெ.வுக்கு அருகில் இருந்திருக்கலாம். ஆனால் தொண்டர் பலத்தையும் குண்டர் பலத்தையும் திரட்டுவதற்கு அப்போது தேவைப்பட்டவர் வடசென்னை மதுசூதனன்தான்.

1989 சட்டசபை கலவரத்தின் போது சர்வபரி தியாகத்துக்குமான படையை ஜெயலலிதாவுக்காக சட்டசபை வளாகத்தில் நிறுத்தியவர் மதுசூதனன். இதன்விளைவாக 1991-ல் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்ற மதுசூதனனுக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா.
அதுவும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு அதிமுக மகளிரணியினர் என்ற பெயரில் நடத்திய ஆபாசமான அர்ச்சனைகளைத்தான் தேசம் மறந்துவிடுமா? உச்சகட்டமாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு சம்பவத்தில் மதுசூதன் பெயரும்தான் அடிப்பட்டது. அத்துடன் மட்டுமல்ல சுர்லாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுசூதனை சிபிஐ கைதும் செய்தது என்பதும் வரலாறு.
தராசு ஊழியர் படுகொலை, ப.சிதம்பரம் வாகனம் மீது தாக்குதல், அண்ணா பல்கலை. துணை வேந்தராக முனைவர் அனந்தகிருஷ்ணன் வீடு தாக்குதல், வக்கீல் விஜயன் மீதான கொலைவெறி தாக்குதல், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீதான கொலைவெறித் தாக்குதல் இவையெல்லாம் 1991-96 ஜெயா ஆட்சிக் காலத்து அராஜகத்தின் உச்சங்கள். இவற்றை செய்துதான் மதுசூதனன், ஆதிராஜாராஜம் வகையறாக்கள் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்தார்கள் என்பதும் வரலாறு. ஒரு காலகட்டத்தில் ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டு காலம்போன கடைசி காலத்தில் ஜெயலலிதாவாலேயே அதிமுக அவைத் தலைவராக்கப்பட்ட மதுசூதனன்தான் இப்போது மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு கேட்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை: