செவ்வாய், 28 நவம்பர், 2017

டிசம்பர் 12 - ரஜினி ரெடியாகிறார் ? காவி அல்லது ஆவி? எப்படியும் திமுக வரக்கூடாது ... RSS அஜெண்டா! ..

டிஜிட்டல் திண்ணை: டிசம்பர் 12 - தயாராகிவிட்டார் ரஜினி!மின்னம்பலம்: மந்த்ராலயத்தில் எடுத்த முக்கிய முடிவு;!. “ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த மந்த்ராலயத்தில் ரஜினி சட்டை அணியாமல் உட்கார்ந்து வழிபாடு நடத்திய படங்கள் கடந்த வாரம் வெளிவந்தன. மந்த்ராலயம் கிளம்புவதற்கு முன்பு ரஜினி பெங்களூரு போயிருக்கிறார். அங்கே அவரது நண்பர் ராஜ்பகதூரை அழைத்துக்கொண்டு, தான் படித்த பள்ளிக்குப் போனாராம் ரஜினி.
பள்ளிக்கூடம் புதுப்பிக்கும் பணி முடிவுறும் தறுவாயில் இருக்கிறது. டிசம்பர் 10ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் திறப்பு விழாவுக்காகத் திட்டமிடப்பட்டுள்ளதாம். கர்நாடகக் கல்வி அமைச்சர் தேதிக்காக இன்னும் அது முடிவு செய்யப்படாமல் இருக்கிறதாம்.
ரஜினி, ‘நான் அந்த ஃபங்‌ஷனுக்கு வரலை. நீங்க முடிச்சிடுங்க. ஃபங்‌ஷன் முடிஞ்ச பிறகு வர்றேன்...’ என்று சொல்லிவிட்டாராம். காரில் இருந்தபடியே பள்ளிக்கூடத்தைப் பார்த்துவிட்டு புறப்பட்டு இருக்கிறார்.
பெங்களூருவிலிருந்து காரில் மந்த்ராலயம் நோக்கிப் புறப்பட்டிருக்கிறார் ரஜினி. அவருடன் காரில் ராஜ்பகதூர், அசோக், ரகு ஆகிய நண்பர்களும் இருந்திருக்கிறார்கள். காரில் பயணிக்கும்போது நண்பர்களிடம் ரஜினி நிறைய பேசி இருக்கிறார். அதில் முக்கியமானது அவரது அரசியல் பயணம் பற்றியது.

‘இப்போ நான் மந்த்ராலயம் போகலாம்னு உங்களை கூப்பிட்டதுக்கு என்ன காரணம் தெரியுமா? ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டாருன்னு எல்லாம் சொல்றாங்க. எனக்கும்கூட சில நேரங்களில் எதுக்காக அந்த ரிஸ்க் எடுக்கணும்னு தோணும். ஆனால், இப்போ என் உள் மனசு அரசியலை பத்தியே யோசிக்குது. என்னோட பிறந்தநாளில் நான் ஏதாவது முக்கிய அறிவிப்பு வெளியிடுவேன்னு எல்லோரும் எதிர்பார்க்கிறாங்க. இந்த தடவையும் நான் ஏமாத்திட்டா, என் மேல இருக்கும் நம்பிக்கை குறைஞ்சிடும். அதனால, 12ஆம் தேதி எதாவது சொல்லித்தான் ஆகணும். இதைப் பத்தி நான் மட்டும் யோசிக்கிறதை விட, உங்ககூடவும் கலந்து பேசிட்டு மந்த்ராலயத்தில் அனுமதி கேட்டுட்டு வரலாம்னு நினைச்சேன்...’ என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர், ‘இதுவே ரொம்பவும் லேட்டுன்னுதான் நான் சொல்லுவேன். முன்னாடியே வந்திருக்கணும். எல்லோரும் உன்னை எதிர்பார்த்துட்டு இருக்காங்க. கமல் எல்லாம் திடீர்னு வந்துட்டு, ஏதேதோ பேசிட்டு இருக்காரு. நீ மட்டும் இப்போ இறங்கினா அப்படியே எல்லோரும் உன் பக்கம் வந்துடுவாங்க. அதுக்காக அரசியல் சாதாரண விஷயம் என்று நான் சொல்ல வரலை. நிறைய கஷ்டமும் இருக்கு. அதை சமாளிக்கிற திறமை உனக்கு இருக்கு. மந்த்ராலயம் போவோம். அங்கே சாமிகிட்ட கேட்போம். அப்புறம் நீ முடிவு செய். நாங்க எல்லோரும் உன்னோடு இருக்கோம்’ என்று சொன்னாராம்.
இப்படியாக பெங்களூரு டூ மந்த்ராலயம் வரை காரில் அரசியல் பற்றியே பேச்சு போயிருக்கிறது. ‘நான் வர்றது அவருக்குப் பிடிக்கலை...’ என்றுகூட, கமலைப் பற்றி சொல்லி இருக்கிறார் ரஜினி. ‘யாருக்குப் பிடிச்சா என்ன.. பிடிக்காட்டி என்ன... மக்களுக்கு உன்னைப் பிடிக்கும். நீ இறங்க வேண்டிய நேரம் வந்தாச்சு...’ என்று அவரது நண்பர் ரகு சொன்னாராம்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“மந்த்ராலயத்தில் என்ன நடந்தது?” என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்க... பதிலை அடுத்த மெசேஜ் ஆக தட்டியது வாட்ஸ் அப்.
“மந்த்ராலயத்தில் தரிசனத்துக்குப் பிறகு மடாதிபதியிடம் நீண்ட நேரம் பேசியிருக்கிறார் ரஜினி. தனது அரசியல் பயணம் பற்றியும் அவரிடம் ஆலோசித்திருக்கிறார். ‘தைரியமாக முடிவெடுங்க... எல்லாம் நல்லதே நடக்கும்’ என்று மடாதிபதி சொல்லி இருக்கிறார். அங்கே இருந்து வெளியே வந்த பிறகு நண்பர்களிடம், ‘12ஆம் தேதி பிறந்த நாள் சமயத்தில் தனிக்கட்சி என நேரடியாக அறிவிக்காமல் அரசியலுக்கு வரப் போவதைப் பற்றி பேசிடலாம். அதன் பிறகு ஒவ்வொன்றாக முடிவு செய்யலாம். எப்படியும் நம்ம டார்கெட் 2021 தேர்தல்தான். அதுக்குள் நாம ஸ்ட்ராங் ஆகிடலாம்’ எனச் சிரித்திருக்கிறார்.
அதற்கு ராஜ்பகதூர், ‘நீ மறுபடியும் கையை மேல தூக்கி ஆண்டவன் இருக்கான்னு சொன்னால், மக்கள் யாரும் நம்ப மாட்டாங்க. என்ன சொல்ல நினைக்கிறியோ அதைத் தெளிவா சொல்லிடு...’ என்று சொன்னாராம். சிரித்தபடியே தலையாட்டி இருக்கிறார் ரஜினி. அதனால், எப்படியும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியிடமிருந்து முக்கியமான அரசியல் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என அடித்துச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்”

கருத்துகள் இல்லை: