வெள்ளி, 1 டிசம்பர், 2017

ஒபாமா: மன்மோகன் சிங் இந்திய பொருளாதார நவீனத்தின் அடிக்கல் ! மோடியும் மன்மோகனும் ,,,,

மன்மோகன் சிங்கைப் புகழ்ந்த ஒபாமாமின்னம்பலம்: இந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று (டிசம்பர் 1 ) நடைபெற்ற கருத்தரங்கில், பிரதமர் மோடியுடனான நட்பு குறித்து ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எனக்கு மோடியைப் பிடிக்கும், நாட்டின் எதிர்காலம் குறித்த பார்வை அவரிடம் உள்ளது. அதிகாரத்துவத்தின் கூறுகளை அவர் நவீனப்படுத்திவருகிறார்” என்று பாராட்டிய அவர், தான் மன்மோகன் சிங்கிடம் அதிகம் நட்பு பாராட்டியதாகவும் கூறினார்.
“மன்மோகன் சிங் எனது முக்கிய நண்பர். 2008ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது என்னோடு இணைந்து பணியாற்றிய முக்கியக் கூட்டாளி அவர். பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதற்காக மன்மோகன் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம், இந்தியப் பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதற்கான அடிக்கல்” என்று மன்மோகன் சிங்கை ஒபாமா பாராட்டினார்.

“மோடியும், மன்மோகன் சிங்கும் என்னிடம் நேர்மையாக நடந்து கொண்டனர். இருவரின் பதவிக்காலத்திலும் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு மேலும் வலுவடைந்தது. இருவரும் அமெரிக்காவை முக்கியக் கூட்டாளியாகப் பார்க்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
மன்மோகன் சிங்கை ஒபாமா புகழ்வது இது முதல்முறையல்ல. முன்னதாக, 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற ஒபாமா, இந்தியாவின் பிரதமர் பேசும்போது உலகின் மக்கள் அனைவரும் கவனிக்கின்றனர் என்று கூறினார்.
இதேபோல், லண்டனில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், மன்மோகன் அறிவார்ந்த, சிறந்த மனிதர் என்றும் ஒபாமா பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: