வியாழன், 30 நவம்பர், 2017

அகிலா என்கிற ஹாதியா... .savukkuonline.com

Savukku : ஹாதியா.  இந்தப் பெயர் கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிக் கொண்டிருக்கிறது. ஹாதியாவுக்கு ஆதரவாக ஒரு புறம் இஸ்லாமியர்கள் கச்சைக் கட்டுகிறார்கள்.  லவ் ஜிகாத் என்ற பெரும் சதிக்கு எதிராக இந்துக்கள் திரள வேண்டும் என்று சங் பரிவார் அமைப்புகள் கொதிநிலைக்கு செல்கிறார்கள்.   இது சரியா தவறா என்று ஆராய்வதற்கு முன், ஹாதியாவின் வரலாறை பார்ப்போம்.
கேரள மாவட்டம், கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் என்ற இடத்தில் பிறந்தவர்தான் அகிலா.    அகிலாவின் தந்தை அசோகன் ஒரு கடவுள் மறுப்பாளர்.   ப்ளஸ் டூவில் ஒரு முறை தோல்வியடைந்த அகிலா, மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற்றபின், சேலத்தில் உள்ள சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில், ஹோமியோபதி மருத்துவம் பயில்வதற்காக செல்கிறார்.  அங்கே ஹாஸ்டலில் தங்காமல், வெளியில் தனியாக வீடெடுத்து இரு பெண்களோடு தங்குகிறார். அவரோடு தங்கியிருந்த இரு பெண்கள் ஃபசீனா மற்றும் ஜசீனா.    இவர்கள் இருவருமே இஸ்லாமியர்கள்.
6 ஜனவரி 2016 முதல் திடீரென்று அகிலா காணாமல் போகிறார்.  ஃபசீனா மற்றும் ஹசீனாவின் தந்தை அபுபக்கர் ஆகியோர் தன் மகளை இஸ்லாமியராக மாற்றி கடத்தி வைத்துள்ளனர் என்று அகிலாவின் தந்தை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்கிறார்.  வழக்கும் பதியப்படுகிறது. ஆனால் அகிலாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

அகிலாவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்கிறார்.    19 ஜனவரி 2016 அன்று, கேரள உயர்நீதிமன்றத்தின் முன் ஆஜரான அகிலா,  தன் அறையில் தன்னோடு தங்கியிருந்த ஃபசீனா மற்றும் ஹசீனாவின் வாழ்வியல் முறைகளை பார்த்து மிகுந்த தாக்கமடைந்தேன் என்றும், அவர்களின் நேரம் தவறாத தொழுகை, நல்ல பண்புகள் ஆகியவை தன்னை அவர்கள் பக்கம் ஈர்த்தது என்றும், பல இஸ்லாமிய நூல்கள் மற்றும் இணையதளத்தில் காணொளிகளை கண்டு இஸ்லாத்துக்கு மாற முடிவெடுத்தேன் என்றும் கூறுகிறார்.  தன் பெயரை ஹாதியா என்று மாற்றிக் கொண்டதாகவும் கூறுகிறார்.   2 ஜனவரி 2016 அன்று தன்னுடைய சொந்த வீட்டில் இருந்தபோது, தொழுகை செய்ததாகவும், அதை பார்த்த அவர் தந்தை அசோகன் அவரை கண்டித்ததாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியேறி, ஹசீனா மற்றும் ஃபசீனாவின் வீடு இருக்கும் பெரிந்தால்மன்னா என்ற இடத்துக்கு சென்று விட்டதாகவும் கூறுகிறார்.
ஹசீனா மற்றும் ஃபசீனாவின் தந்தை அபுபக்கர் கேஐஎம் என்ற ஒரு மத நிறுவனத்தில் ஹாதியாவுக்கு அனுமதி கோருகிறார்.  அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள்.   அதையடுத்து, தர்பியாத்தூல் இஸ்லாமிய மையம் என்ற நிறுவனத்தில் ஹாதியா சேர்க்கப்படுகிறார்.   அது ஒரு இஸ்லாமிய படிப்பகம்.   அந்த நிறுவனத்தில் சேரும் முன்னர் ஹாதியா, தான் மனம் விரும்பி இஸ்லாத்துக்கு மாறுவதாக ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்கிறார்.   அந்த நிறுவனத்தில் எங்கே தங்குவீர்கள் என்று கேட்டபோது, அவர் அபுபக்கரின் வீட்டில் தங்குகிறேன் என்று கூறுகிறார்.  ஆனால் அபுபக்கர் அவரை அவர் வீட்டில் தங்க வைக்க மறுக்கிறார்.  அதன் பின், அபுபக்கர் சத்யா சாரணி என்ற நிறுவனத்தில் சேர்க்கப்படுகிறார்.   மலப்புரத்தில் அமைந்துள்ள அந்த நிறுவனம் தனது பிரதான பணியாக, இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடம் இஸ்லாத்தை பரப்புவதை தனது பிரதான கொள்கையாக வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.     அங்கே சேர்ந்தபின், அந்த நிறுவனத்தின் மூலமாக, சைனபா என்ற சமூக சேவகரின் கட்டுப்பாட்டில் ஹாதியா அனுப்பப்படுகிறார்.   இந்த சைனபா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்  ஜனவரி 7 முதல் நான் சைனபாவின் கட்டுப்பாட்டில்தான் வாழ்ந்து வருகிறேன்.
ஹாதியா மதமாற்ற சான்றிதழ்

சைனபா
என் முழு விருப்பத்தோடு நான் சைனபாவோடு இருக்கிறேன். யாருடைய மிரட்டலோ தூண்டுதலோ இதற்கு காரணமல்ல என்று ஹாதியா கேரள நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து,  ஜனவரி 25 அன்று கேரள உயர்நீதிமன்றம், ஹாதியாவின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது.
ஆறு மாதங்கள் கழித்து, ஹாதியா என்கிற அகிலாவின் தந்தை அசோகன், தன் மகளை ஒரு இஸ்லாமிய இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுத்து, சிரியாவுக்கு அனுப்ப திட்டம் தீட்டப்பட்டு வருகிறது என்று 17 ஆகஸ்ட் 2016 அன்று மற்றொரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்கிறார்.

ஹாதியாவின் தந்தை அசோகன்
மனு விசாரணைக்கு வந்தபோது, கேரள உயர்நீதிமன்றம், ஹாதியா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.  ஆனால் இந்த உத்தரவுக்கு பிறகு, ஹாதியா சைனபா வீட்டிலிருந்து காணாமல் போகிறார்.  ஆனால் திடீரென்று, கேரள உயர்நீதிமன்றத்தில் ஹாதியாவும், சைனபாவும் சேர்ந்து, ஹாதியா ஆட்கொணர்வு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்கிறார்கள்.
மனு விசாரணைக்கு வருகிறது.  நான் சைனபாவோடுதான் இருப்பேன்.  என் பெற்றோர் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று நீதிமன்றத்தில் கூறுகிறார் ஹாதியா.  நீதிமன்றம், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மகளிர் விடுதிக்கு ஹாதியாவை அனுப்புகிறது.   செப்டம்பர் மாதம் மீண்டும் மனு விசாரணைக்கு வருகிறது.
எந்த விதமான தவறும் செய்யாத, தன்னை ஒரு ஹாஸ்டலில் அடைத்து வைப்பது சரியல்ல என்றும், தனக்கு விருப்பமான இடத்தில் தன்னை தங்க வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஹாதியா வாதிடுகிறார்.  மேலும், தன்னிடம் பாஸ்போர்ட் இல்லை என்றும், சிரியாவுக்கு செல்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார்.   நீதிமன்றம், பெரிந்தலமன்னா டிஎஸ்பியிடம் தங்கும் இடத்தை மாற்றினால் ஹாதியா தகவல் கூறி விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
நவம்பர் மாதம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகையில் சைனபாவோடு தொடர்ந்து வாழ்ந்து வரும் ஹாதியாவுக்கு என்ன வருமானம் என்று கேள்வி எழுப்புகையில், தான் ஒரு மருத்துவ மாணவி என்றும், அதை வைத்து மாதம் 2,000 சம்பாதித்துள்ளதாகவும் கூறுகிறார்.  இந்த நேரத்தில், ஹாதியாவின் பெற்றோர், அவர் மூளைச்சலவை செய்யப்படுவதாக தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.   ஹாதியா ஹோமியோபதி படிப்பில் நான்காம் ஆண்டு முடிக்காமல் மருத்துவர் பயிற்சி செய்ய முடியாது என்பதும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
டிசம்பர் 19 அன்று, ஹாதியாவிடம் மருத்துவப் படிப்பை முடிக்குமாறும், அது வரை, கல்லூரி விடுதியில் தங்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்துவதை கேட்ட ஹாதியா, தனது சான்றிதழ்கள் பெற்றோரிடம் உள்ளன என்று கூறவே, திங்களன்று, டிசம்பர் 21 அன்று, சான்றிதழ்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைக்கின்றனர்.
திங்களன்று, டிசம்பர் 21 அன்று,  நீதிமன்றத்துக்கு ஒரு புதிய நபரோடு ஆஜராகிறார் ஹாதியா.   தனக்கு திருமணம் நடந்து விட்டதாகவும் இவர்தான் தனது கணவர் என்றும் தெரிவிக்கிறார்.   நீதிபதிகள் கடும் கோபமடைகிறார்கள்.   இந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த டிசம்பர் 19 அன்றே இந்த திருமணம் நடந்திருக்கிறது என்று எரிச்சலடைகிறார்கள்.  ஹாதியாவின் வழக்கறிஞர் திருமணம் சைனபாவின் வீட்டில், புத்தூர் ஜும்மா மசூதியின் ஹாஜி முன்னிலையில் இந்தத் திருமணம் நடந்தது என்று கூறுகிறார்.

ஹாதியாவோடு திருமணத்துக்கு தயாராக ஷபீன்
இந்தத் திருமணம், ஹாதியாவை வெளிநாட்டுக்கு கடத்திச் செல்வதற்கான யுத்தியா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  சுரேந்திர மோகன் மற்றும் ஆப்ரஹாம் மேத்யு ஆகியோர், ஹாதியாவை திருமணம் செய்த ஷபீன் ஹாதியாவோடு எப்படி தொடர்பு ஏற்பட்டது, திருமணம் எந்த சூழலில் நடந்தது, சைனபாவின் வீட்டில் திருமணம் நடந்ததற்கான காரணம் என்ன,  திருமணச் சான்றிதழ் வழங்கிய நிறுவனம் பதிவு செய்யப்பட்டதா, திருமணம் குறித்து ஏன் ஹாதியாவின் பெற்றோருக்கு தகவல் கூறப்படவில்லை என்று சராமரியாக கேள்வி எழுப்புகின்றனர்.
ஹாதியாவுக்கு பாதுகாப்பு அளித்துள்ள சைனபா இதே போல மற்றொரு இஸ்லாம் மத மாற்றத்திலும், சம்பந்தப்பட்டுள்ளார் என்றும், அதிலும் இதே போல அவசரத் திருமணம் நடந்துள்ளது என்று அரசு வழக்கறிஞர் கூறுகிறார்.
நீதிமன்றம், திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  ஹாதியாவை, எர்ணாக்குளத்தில் உள்ள எஸ்என்வி சதானம் என்ற ஹாஸ்டலில் தங்க வேண்டும் என்றும், அவர் மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
ஹாதியாவை திருமணம் செய்த, ஷபீன் ஜஹான் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல்  செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடுகின்றனர்.  காவல்துறையின் விசாரணையில், ஷபீன் கொல்லத்தை சேர்ந்தவர் என்றும், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் பிரிவான சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டியின் உறுப்பினர் என்றும்,  அவரின் தாயார் சவுதிப் பகுதியில் வசிப்பதால், ஹாதியாவை திருமணம் செய்து அங்கே அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்றும் கூறியது அந்த அறிக்கை.   மேலும், மதமாற்றத்தில் ஈடுபடும் சத்ய சாரணி என்ற அமைப்போடு ஷபீனுக்கு தொடர்பு இருந்தது என்றும், எஸ்டிபிஐ கட்சியின் தலைமைக் குழு நடத்தும் தனல் என்ற வாட்ஸப் குழுவில் ஷபீன் உறுப்பினர் என்றும் அறிக்கை கூறியது.  இவர் மீது ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது என்றும், தன் வாழ்வில் ஒவ்வொரு நகர்வையும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யும் ஷபீன், ஹாதியாவுடனான திருமணம் குறித்து எந்த பதிவையும் செய்யவில்லை என்று கூறியது.
ஹாதியா தரப்பில், இஸ்லாமியர்களுக்கான திருமண இணைய தளத்தில் பதிவு செய்திருந்ததாகவும், அதில் வந்த ஒரு விண்ணப்பத்தை பரிசீலித்து ஷபீனை மணந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
24 மே 2017 அன்று, கேரள உயர்நீதிமன்றம், ஹாதியாவின் திருமணத்தை போலி என்றது.   “அகிலாவை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே நடந்த நாடகத்தில், ஷபீன் ஒரு பாத்திரம்.  அவர்களின் நோக்கம் ஹாதியாவை வெளிநாட்டுக்கு கடத்திச் செல்வதே.  இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது.   அவசர கோலத்தில் இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறி, திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

கணவர் ஷபீனோடு ஹாதியா
இந்த திருமணத்தில் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்த ஒரு கைக்கூலியே ஷபீன்.  ஒரு பெண், ஒரு இளைஞனோடு இயல்பாக காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக இதை கருத முடியாது.
இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு பெண், ஒரு மருத்துவப் படிப்பை படிக்கும் ஒரு பெண், தன் படிப்பை துறந்து விட்டு, ஒரு மதத்தின் பின்னால் செல்கிறார் என்பதை நம்ப முடியவில்லை.  ஒருவருக்கு ஒரு மதத்தின் மீது திடீரென்று பிடிப்பு ஏற்படலாம்.  அதற்காக அவர் படிப்பை மேற்கொள்ளலாம். ஆனால் அகிலா, சத்ய சாரணி நிறுவனத்தில் வெறும் இரண்டு மாதம் மட்டுமே படித்துள்ளார்.
அகிலா பலவீனமான மனதுடையவர்.  அவருக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை.  இந்த மத மாற்றத்தின் பின்னணியில், ஒரு பெரிய சதிக் கூட்டமே இருப்பதாக கருதுகிறோம்” என்று கூறிய நீதிமன்றம், ஹாதியா ஷபீன் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.  ஹாதியா, அவர் பெற்றோரோடு வசிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஹாதியாவின் கணவர், ஷபீன் உச்சநீதிமன்றத்தில் கேரள உயர்நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறார்.   ஷபீன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடுகின்றனர். ஆகஸ்ட் 2017ல், மதமாற்றம் தொடர்பாகவும், ஹாதியா மதமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாகவும், தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிடுகிறது.
அதன் பின்னர் கடந்த வாரம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம், ஹாதியா, சேலம் சித்த மருத்துவக் கல்லூரியில் தனது படிப்பை தொடரலாம் என்றும், பெற்றோர் மட்டுமே அவரை நேரில் சந்திக்கலாம் என்றும் கூறி, வழக்கை ஒத்தி வைத்துள்ளது.  அன்றைய விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹாதியாவிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது “எனக்கு சுதந்திரம் வேண்டும்.  என்னை சுதந்திரமாக நடமாட விடுங்கள்” என்று கூறினார்.

தற்போது ஹாதியா சேலம் கல்லூரியை வந்து சேர்ந்துள்ளார்.   இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
கேரள உயர்நீதிமன்றம் ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்தது ஒரு ஆட்கொணர்வு மனுவில்.   ஆட்கொணர்வு மனு என்பது, அரசியல் சட்டம் பிரிவு 21 வழங்கியுள்ள வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்யும் ஒரு மனு.  ஒருவர் காணாமல் போகிறார்.   அவரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை என்றால், ஹேபியஸ் கார்ப்பஸ் என்னும், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம்.
காவல்துறை ஒருவரை அழைத்து செல்லும்போது, அவரை நீதிமன்றத்தின் முன் ஆஜராக்காமல் இருந்தால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும்.   காவல்துறையினர் வந்து, அவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த நீதித்துறை நடுவர் முன் நேர்நிறுத்தப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவித்தால் அந்த வழக்கு முடித்து வைக்கப்படும்.
சில நேர்வுகளில், எனது மகளை காணவில்லை என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும்.   காவல்துறை அந்த பெண்ணை கண்டுபிடிக்கையில் அவருக்கு திருமணம் ஆகியிருக்கும்.   நீதிமன்றத்தின் முன் ஆஜராக்கப்படும் அந்தப் பெண் உரிய வயது வந்தவராக இருந்தால், நீதிபதிகள், அந்தப் பெண்ணை  அழைத்து, பேசுவார்கள்.  சம்பந்தப்பட்ட பெண், நான் என் விருப்பத்தில் எனக்கு பிடித்தவரோடு வாழப் போகிறேன் என்று கூறினால், நீதிமன்றத்தால் வேறு எதுவுமே செய்ய முடியாது.
ஹாதியாவின் வழக்கில், கேரள உயர்நீதிமன்றம், எங்களுக்கு தெரிவிக்காமல், எப்படி திருமணம் செய்யலாம் என்று கோபப்படுகிறது.  நீதிமன்றத்தின் முன் ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகவே ஹாதியா திருமணம் செய்யக் கூடாதா என்ன ?  அவர் தேர்ந்தெடுத்த நபர் சரியானவரா, தவறானவரா என்பதை முடிவு செய்ய வேண்டியது ஹாதியாதானே தவிர நீதிமன்றம் அல்ல.
எங்களிடம் சொல்லாமல் திருமணம் செய்து விட்டீர்கள் என்ற ஒரு புள்ளியில் தொடங்கிய கேரள உயர்நீதிமன்றம், 1608ல் உருவான ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் ஹாதியாவின் திருமணத்தில் தலையிடுகிறது.  பேரன்ஸ் பேட்ரியே (parens patriae) என்ற லத்தீன் பிரயோகத்தின்படி, குடிமக்கள் அனைவருக்கும் கருணையின் அடிப்படையில் அரசன் பெற்றோர் ஸ்தானத்தில் உள்ளான்.  அரசனின் கட்டளையை நிறைவேற்றும் காரணத்தால், நீதிமன்றங்கள், குழந்தைகள் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு, திருமணங்களில் கூட தலையிடலாம் என்பதே இந்த கோட்பாடு.
இந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே கேரள உயர்நீதின்றம் தலையிட்டு திருமணத்தை ரத்து செய்தது.  உச்சநீதிமன்றம் இப்போது விசாரித்து வருகிறது.  பேரன்ஸ் பேட்ரியே கோட்பாட்டின் அடிநாதம் குழந்தைகள் நலன்.
இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், ஹாதியாவை குழந்தையாக கருதுவதுதான் அடிப்படைச் சிக்கல். ஹாதியா குழந்தை அல்ல என்ற கபில் சிபலின் வாதத்தை உச்சநீதின்றம் ஏற்கவில்லை.
திருமணத்தை ரத்து செய்வதோ, அல்லது விவாகரத்துக்காகவோ குடும்ப நீதிமன்றங்களை நாட வேண்டும்.   கணவனோ அல்லது மனைவியோ, திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.  ஒருவர், ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண்ணை மோசடியாக திருமணம் செய்துள்ளார் என்று நமக்கு தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம்.  அப்போது கூட நாம் குடும்ப நீதிமன்றத்தை அணுகி, திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோர முடியாது.  பெண்ணின் பெற்றோரும் மனு செய்ய முடியாது.  சம்பந்தப்பட்ட கணவர் அல்லது மனைவி மட்டுமே இத்தகைய மனுவை தாக்கல் செய்ய முடியும்.
திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டதன் மூலம், கேரள உயர்நீதிமன்றம், சிவில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்பதை காண முடிகிறது.

அடுத்ததாக மதமாற்றத்துக்கு வருவோம்.   ஹாதியா தன்னோடு அறையில் தங்கியிருந்த ஃபசீனா மற்றும் ஹசீனாவை பார்த்து, அவர்கள் வாழ்கை முறையை பார்த்து வசீகரிக்கப்பட்டு இஸ்லாத்துக்கு மாறினேன் என்று கூறுகிறார்.   இணையதளத்தில் பல்வேறு வீடியோக்களை பார்த்தேன் என்றும் கூறுகிறார்.
ஒருவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றுவது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை.   அதை யாரும் தடுக்க முடியாது.  ஹாதியா இஸ்லாத்தால் கவரப்பட்டு, அந்த மதத்துக்கு மாறுகிறார் என்பதை தடுக்க எந்த சட்டமும் கிடையாது.  அடுத்த வாரமே, ஹாதியா கிறித்துவ மதத்துக்கு  மாறினாலும் அது அவரது அடிப்படை உரிமை.
ஹாதியா மதம் மாறியதை கட்டாய மதமாற்றம் என்று கூறுகிறார்கள்.  ஹாதியாவின் மாற்றத்தை கட்டாய மதமாற்றமாக கருதவே முடியாது.  ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்தோ, அல்லது மிரட்டியோ மதம் மாற்றுவதைத்தான் கட்டாய மதமாற்றம் என்று கூற முடியும்.
ஹாதியாவுக்கு செய்யப்பட்டது மூளைச்சலவை.   இஸ்லாமிய அமைப்புகளில் சில மூளைச்சலவை செய்கின்றனவா என்றால் நிச்சயம் செய்கின்றன.   ஹாதியா மத மாற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ள சத்ய சாரணி அமைப்பு தன் கொள்கைகளில் ஒன்றாக, இஸ்லாமியர் அல்லாதவர்களை இஸ்லாத்துக்கு மாற்றுவது என்பதை வெளிப்படையாகவே கூறுகிறது.

இது தவிர ஒவ்வொரு இஸ்லாமியரின் அடிப்படை கடமை தவா. தவா என்றால், அல்லாவை நோக்கிய அழைப்பு.   இஸ்லாத்தை பரப்பி மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்து வருவது, ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமை.   மொத்த உலகையே இஸ்லாமியமயமாக்க வேண்டும் என்றே பல இஸ்லாமிய அரசுகள் விரும்புகின்றன.
இந்த மதமாற்றத்துக்காக சவுதி அரசு பல மில்லியன் டாலர்களை செலவிடுகிறது.  இந்தியாவிலும் இதற்காக பல கோடிகள் செலவிடப்படுகின்றன.    இந்தப் பணத்தில் பல்வேறு மசூதிகள் கட்டப்படுகின்றன.  மதமாற்றத்துக்கும் இத்தொகை செலவிடப்படுகிறது.
மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் இது குறித்து பேசுகையில், “கேரளாவில் உள்ள மவுனத்துல் இஸ்லாம் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானோரை மதமாற்றம் செய்கிறது.      கேரளாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மதமாற்ற மையங்கள் செயல்படுகின்றன.   வேலூர் மாவட்டத்தில், வாணியம்பாடி, மேல்விசாரம், ஆம்பூர், தூத்துக்குடியில் பாளையங்கோட்டை போன்ற இடங்களில் மதமாற்ற மையங்கள் செயல்படுகின்றன.
1996ம் ஆண்டில், பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் ஒரு பிரிவான மனித நீதிப் பாசறை என்ற அமைப்பு, ஆண்களுக்கான மதமாற்ற மையத்தை அறிவகம் என்ற பெயரில், தேனி மாவட்டம், முத்துதேவன்பட்டியில் தொடங்கியுள்ளது.  இதே அமைப்பு, நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பெண்களுக்கான மதமாற்ற மையத்தை தொடங்கியது.
இவ்வாறு புதிதாக மதம் மாறியவர்கள், தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளர்கள்.
பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா மதமாற்றத்துக்காகவென்றே தனி பிரிவை நடத்தி வருகிறது.  இதற்கான நிதி சவுதி மற்றும் அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து வருகிறது” என்று கூறினார்.
இப்படி மதமாற்றம் செய்வது சரியா தவறா என்ற தார்மீக ரீதியான கேள்விக்கு செல்வதற்கு முன், இது சட்டபூர்வமாக சரியா என்றார் சரியே.   இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 25 இதற்கான உரிமையை உத்தரவாதப் படுத்துகிறது.  ஒருவர், மற்றாருவரை அணுகி, கிறித்துவம்தான் சிறந்த மதம், நீங்கள் மதம் மாறுங்கள் என்றோ, அல்லது இஸ்லாத்தில் சேர்ந்தால், நேரடியாக சொர்கத்துக்கு செல்லாம் என்றோ பிரச்சாரம் செய்வதற்கு சட்டபூர்வமாக எந்தத் தடையும் கிடையாது.
இப்படி மதமாற்றம் செய்யப்படுபவர்கள், தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.   அது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
ஹாதியாவை, திருமணம் செய்து வைத்து, சிரியாவுக்கு அழைத்துச் சென்று, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்க முயற்சி நடக்கிறது என்ற கூற்றில் உண்மை இருக்கலாம்.   அதையும் சட்டபூர்வமாக தடுக்க இயலாது.   ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவரை நான் விரும்பி திருமணம் செய்கிறேன் என்று அவர் கூறுவாரேயானால், 23 வயதான அவரை தடுக்க சட்டத்தில் இடமில்லை.
ஆனால் ஹாதியா சிரியாவுக்கு செல்ல முயல்கையில், விமான நிலையத்திலேயே அவரை கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.   அதை செய்யவும் வேண்டும்.   ஹாதியா, இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அவர் தீவிரவாதியாகவே இருந்தாலும், வாழ்வதற்கான உரிமை அவருக்கு உண்டு. ஆனால் அவர் தன் கணவரோடு சேர்ந்து, தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால், சட்டம் தன் கடமையை செய்யும், செய்ய வேண்டும்.
ஆனால், அவர் சிரியாவுக்கு போகப் போகிறார் என்ற ஊகத்தின் அடிப்படையில், ஒரு உயர்நீதிமன்றம், அவரை கட்டாயமாக ஒரு ஹாஸ்டலில் தங்க வைத்து, அவர் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கூறுவது கடுமையான மனித உரிமை மீறலா இல்லையா ?    அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டியது, ஒவ்வொரு நீதிமன்றத்தின் கடமை.  அந்த நீதிமன்றங்களே அந்த உரிமைகளை பறிக்கும் உத்தரவை பிறப்பிப்பது நிச்சயமாக ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கை.
மதம் தொடர்பான பிரச்சாரங்களை அனைத்து மதங்களும் செய்கின்றன.  இஸ்லாம் மதத்தை பரப்ப முன்னெடுக்கப்படும் தீவிர பிரச்சாரரங்கள் போல, கிறித்துவ மதத்துக்கான பிரச்சாரங்கள், பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன.  கிறித்துவர்கள் மதப் பிரச்சாரத்துக்காக இந்தியா வராமல் இருந்திருந்தால், இந்தியாவில் பிளேக் நோய் பீடித்து ஆயிரக்கணக்கானோர் இறந்திருப்பார்கள்.  திருக்குறள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்காது.  பல மலைவாழ் கிராமங்கள் நாகரீக தொடர்பே இல்லாமல் இருந்திருக்கும்.  16ம் நூற்றாண்டு முதல், கிறித்துவ மதப் பிரச்சாரங்கள் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இஸ்லாமிய அமைப்புகளும் கிறித்துவ அமைப்புகளும் மதப் பிரச்சாரம் செய்வது தவறென்றால், இந்து அமைப்புகள் கர் வாப்சி நடத்துவதும் தவறுதானே ?  அதன் மீது ஏன் விமர்சனம் எழவில்லை ?
மேலும், இஸ்லாமியர்களிடமும், கிறித்துவர்களிடமும், புத்த மதத்தினரிடமும், இந்து மதத்தின் பெருமைகளை எடுத்துக் கூறி, அவர்களை மதமாற்றம் செய்வதற்கு இந்தியாவில் எந்தத் தடையும் இல்லை.   அப்படி மதம் மாறி வந்தால், அவர்களை சாதிய அடுக்கில் எந்த இடத்தில் பொருத்துவது என்ற சிக்கலை தவிர.   இப்படியொரு மதப் பிரச்சாரத்தை இந்து அமைப்புகள் முன்னெடுக்க வேண்டாம் என்று யாரும் தடுக்கவுமில்லை.
மதமாற்றம் கட்டாயமானதாக இல்லாத வரை, அதை சட்டம் அனுமதிக்கவே செய்கிறது.   அந்த அடிப்படை உரிமை அரசியல் சாசனத்தில் திருத்தப்படாத வரை, இதை கேள்வி கேட்க நீதிமன்றங்களுக்கும் உரிமை இல்லை.
டெல்லியை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில் “ஹாதியாவை மற்றொருவர் கட்டுப்பாட்டுக்கு அனுப்புவதோ, அல்லது அவர் திருமணத்தை ரத்து செய்வதற்கோ எவ்விதமான சட்ட அடிப்படையும் இல்லை.  ஒரு வயது வந்தவராக, அவருக்கு அவர் காதலரையோ, கணவரையோ தேர்ந்தெடுக்க முழு உரிமை உள்ளது.  அப்படி தேர்ந்தெடுப்பவர் தீவிரவாதியாக இருந்தாலும்.
சிறையில் ஆயுள் தண்டனை பெற்றவரும், மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவரும் கூட திருமணம் செய்து கொண்டதை நாம் கண்டிருக்கிறோம்.
வாழும் உரிமையை உத்தரவாதப் படுத்தக் கூடிய ஒரு ஆட்கொணர்வு மனுவில், அதே வாழும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது வேதனையானது.    நீதிமன்றமும் தவறிழைக்கும் என்பதற்கான மற்றொரு உதாரணம்தான் ஹாதியா வழக்கு” என்றார்.
மூத்த பத்திரிக்கையாளர் டிஎன்.கோபாலன் பேசுகையில் “இந்தப் பிரச்சினை பூதாகார உருவம் எடுத்திருப்பதற்கு முக்கிய காரணம் மோடி ஆட்சியே. இந்து மத மேலாதிக்க உணர்வுகள் பொதுவாழ்வின் அனைத்து அம்சங்களையும் உக்கிரமாக அரித்துக் கொண்டிருக்கின்றன. நீதிமன்றங்களும் இதற்கு விலக்கில்லை. ஹாதியா திருமணத்தை ஒரு நீதி மன்றம் தடாலடியாக ரத்து செய்கிறது, இன்னொன்று ஆமை வேகத்தில் சென்று மூன்று நான்கு மாதங்கள் கழித்தே அப்பெண்ணை அழைத்து என்ன விவரம் என கேட்கிறது, நீதிபதி ஒருவர் கடத்தப்படுவோருடன் ஒன்றிப்போகும் மனநிலை (stockholm syndrome)ல் ஹாதியா தன்னை இழந்துவிட்டாரா எனக் கேட்கிறார். பிறகு முன் பின் தெரியாத டீனை கார்டியனாக நியமித்து அவரை சேலத்துக்கு அனுப்புகின்றனர். அவர் கார்டியன் வேண்டும், பாதுகாப்பு வேண்டும் என்றா கேட்டார், சுதந்திரத்தை அன்றோ கோரினார்.
கேரள அரசும்  காதல் ஜிஹாத் சதி நடக்கிறதா என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசியப் புலனாய்வு முகமை (National Investigation Agency) விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.
மதச்சார்பற்ற சக்திகளின் குறிப்பிடத்தக்க பிரதிநிதியாகக் கருதப்படும் சி பி எம் தலைமையிலான அரசு ஏன் இப்படிச் சொல்லவேண்டும்? உண்மை என்னவெனில் ஹாதியா தொடர்பில் கேரள இடது சாரிகள் காட்டமாக எதையும் சொல்லிவிடவில்லை, பாஜகவை, இந்துத்துவ சக்திகளைக் கண்டிக்கவில்லை.  விசாரித்ததில் பி எஃப் ஐ, சத்ய சாரணி இரண்டைப் பற்றியுமே எல்லோருக்கும் ஐயங்கள் பல எனத் தெரியவருகிறது. வெறும் மதமாற்றம் மட்டுமல்ல, சிரியாவுக்கு உண்மையிலேயே ஆள் பிடிக்கிறார்களோ என்ற கவலை. ஆனால் வெளிப்படையாகவும் சொல்லமுடியவில்லை, எனவேயே மென்று விழுங்குகின்றனர். 
அதெல்லாம் ஒருபுறமிருக்க, தீவிரவாதக் குற்றங்களில் இறங்கும்/இறங்குவதாக சந்தேகிக்கப்படும் அமைப்புக்கள்/நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும், யாரும் ஆட்சேபிக்கப்போவதில்லை. ஆனால் அதற்காக 24 வயதான ஒரு பெண்ணை வெறும் ஊகங்களின்பேரில் இப்படி சிறை வைப்பது அநீதி.
அப் பெண்ணின் மன உறுதி அபாரமானது. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் கதையாக, தடைகள், குறுக்கீடுகள் அவரை இன்னமும் வேகங்கொள்ளவே வைக்கிறது. இனியும் அவர் விரும்பும்படி தன் கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க மறுப்பது வட இந்திய காப் பஞ்சாயத்து அடாவடிக்கொப்பாகும்.
மதமாற்ற நடவடிக்கைகளில் இறங்க அனைவர்க்கும் உரிமை இருக்கிறது, மாறவும் தான், ஆனால் இன்றைய சூழலில்  இஸ்லாம் குறித்த அவநம்பிக்கை பரவலாக எழுந்திருக்கும் நிலையில், இஸ்லாமிய அமைப்புக்களும் இந்திய யதார்த்தங்களை உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும்”  என்றார் டிஎன்.கோபாலன்.
ஷரியத் சட்டத்தை பின்பற்றும் இஸ்லாமிய நாடு அல்ல இந்தியா.   பன்முகத் தன்மை கொண்ட, பல மொழி மற்றும் மதங்களைக் கொண்ட, ஒரு ஜனநாயகக் குடியரசு.   இஸ்லாமிய நாடாக தன்னை வரித்துக் கொண்ட பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இதுதான் வேறுபாடு. இதுதான் இந்தியாவின் தனித்தன்மை.  அத்தனை மதங்களுக்கான உரிமைகளையும் பாதுகாக்கும் உத்தரவாதம் செய்யும் ஒரு அரசியல் அமைப்புச் சட்டம்தான் நம்மை வழி நடத்துகிறது.  வழி நடத்த வேண்டும்.
இதை மனதில் வைத்து, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் உயர்ந்த பணியை நீதிமன்றங்கள் செய்யும் என்று நம்புவோம்

கருத்துகள் இல்லை: