திங்கள், 28 ஆகஸ்ட், 2017

எடப்பாடி கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள்

1. சசிகலா, தினகரனால் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது. 
2. நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி. மீடியாக்களைக் கட்சியே நடத்த வேண்டும். 3. செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும். 
 4. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்க முடிவெடுத்துத் தீர்மானம்.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அணிகள் இணைப்பு, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.பி, எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 28) கூடியுள்ளது.
அணிகள் இணைந்ததும் சசிகலா நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் தினகரன் கட்சியிலும், ஆட்சியிலும் தனது அதிரடியைத் தொடர்ந்தார். கடந்த 22ஆம் தேதி முதல்வருக்கான ஆதரவைத் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 21 ஆக இருந்துவருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதுகுறித்து ஆளுநரிடம் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்சியிலும் தினகரன் அதிரடி தொடர்ந்தது. இதுவரை முதல்வர், அமைச்சர்கள் உள்படப் பல்வேறு முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளைப் பறித்துள்ளார்.
இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், சம்பத், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நேற்று தினகரனுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து, திரும்ப எடப்பாடி அணிக்கு வந்த எம்எல்ஏ ஏ.கே.போஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தினகரனுக்கு ஆதரவளித்த 21 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை.
கூட்டத்தில் 19 பேர் அளித்துள்ள வாபஸ் மனு, சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கடிதம் அளித்துள்ள நிலையில் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30 எம்எல்ஏக்கள் வரை கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், விரைவில் பொதுக்குழு கூட்டி சசிகலா மற்றும் தினகரனைக் கட்சியில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மற்றும் ஜெயா டிவியை மீட்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள்:
1. சசிகலா, தினகரனால் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது.
2. நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி. மீடியாக்களைக் கட்சியே நடத்த வேண்டும்.
3. செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும்.
4. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்க முடிவெடுத்துத் தீர்மானம். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: