செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பெண்ணாக மாறிய கடற்படை வீரர் : தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை!

மின்னம்பலம : இந்திய கடற்படையில் பணியாற்றி வந்த வீரர் ஒருவர் பெண்ணாக மாறியதையடுத்து அவரைப் பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்திய கடற்படையில் கிழக்கு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் விசாகப்பட்டினம் ஐ.என்..எஸ் எக்சிளா தளத்தில் நேவி மெக்கானிக்கல் என்ற பொறியியல் பிரிவில் பணியாற்றி வந்த ஒருவர் தற்போது பெண்ணாக மாறியுள்ளார். இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக தனது விருப்பத்தின் பேரில் கடந்த ஆண்டு மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சில வெளி நபர் மூலமாகப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, அவர் கூந்தல் வளர்ப்பது, சேலை கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த கடற்படை அதிகாரிகள் ஒரு ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் கடற்படையில் பணிபுரியத் தகுதியற்றவராக கூறி அவரைப் பணியில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,கடற்படை விதிகளின் படி பெண்களுக்கு இத்தகைய பணிகளை வழங்குவதில்லை. அவரைப் பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி தற்போது அவரைப் பணியில் இருந்து நீக்கம் செய்ய இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவருக்கு தற்போது எளிதான பணிகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இதுபுது விதமான பிரச்சினை என்பதால் இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு விரிவான தகவல் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஒரு வேளை அவர் பணிநீக்கம் செய்யப்பட்டால், அவருக்கு பென்சன் உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் கிடைக்காது. சுமார் 15 ஆண்டுகள் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். அவர் 7 ஆண்டுகள் மட்டுமே பணி அனுபவம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
ராணுவத்தில் பெண்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கடற்படையில் பெண்ணாக மாறிய ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பாதிக்கப்பட்ட நபரான சபி கண்டனம் தெரிவித்துள்ளார். என்னை வேலையில் இருந்து நீக்குவதற்கு பதிலாக வேறு வேலைக்கு மாற்றலாம் என்று அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: