வெள்ளி, 1 செப்டம்பர், 2017

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு போராட திராவிடர் கழகம் அழைப்பு!

அனிதாவின் முடிவை வேறு எந்த மாணவர்களும் எடுக்கவேண்டாம்!*- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி* அனிதாவின் முடிவை வேறு எந்த மாணவர்களும் எடுக்கவேண்டாம் - நாம் போராடி வெற்றி பெறுவோம் என்கிற அந்தத் துணிவும், ஒரு வைராக்கிய உணர்வும், உறுதியும் தேவையே தவிர - தங்களுடைய இழக்கக்கூடாத உயிரை இதற்காக இழக்கக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனியார்
தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். பேட்டியின் விவரம் வருமாறு: அனிதாவின் தற்கொலை செய்தி நம் உள்ளத்தை வெகுவாக உலுக்குகிறது! இந்தச் செய்தி அவருடைய பெற்றோர் எவ்வளவு வேதனை அடைகிறார்களோ, அந்த அளவிற்கு சொல்லொணா துயரத்தையும், வேதனையையும் எங்களுக்கெல்லாம் ஏற்படுத்தியிருக்கிறது. அனிதா போன்ற கிராமப்புற மாணவிகள் தங்களுடைய கனவுகள் நினைவாக்கப்படவில்லையே என்பதற்காக, இப்படிப்பட்ட ஒரு இறுதி முடிவை எடுத்துவிட்டார்களே என்கிற வேதனை, தேள் கொட்டுவதுபோல கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், இதற்கு முழுக்காரணம் யார்? நம்ப வைத்து கழுத்தை அறுத்தது மத்திய அரசும் - மாநில அரசும்!


அதேநேரத்தில், இதற்குத் தீர்வு தற்கொலைதான் என்று மாணவர் உலகைத் தள்ளிவிடக்கூடாது!

அவர்கள் தங்களுக்குள் போராட்டக் குணத்தை வலுப்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர, இன்றைக்கு இல்லாவிட்டாலும், நாளைக்கு அதில் வெற்றி பெற, இன்னமும் நீட்டிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை அவர்கள் உணரவேண்டும் - அதுதான் மிக முக்கியமானது.

எனவேதான், அனிதாவின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறுகிற அதேநேரத்தில், இதற்குக் காரணமானவர்கள் இனியாவது தங்களுடைய போக்கை - நம்ப வைத்து கழுத்தறுக்கின்ற போக்கைக் கைவிடவேண்டும்.

நாங்கள் இதுவரை வலியுறுத்திக் கொண்டு வந்த கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புகள் எவ்வளவு குறைவாக இருக்கின்றன என்பதற்கு அனிதா போன்றவர்களே மிகப்பெரிய ஒரு எடுத்துக்காட்டு!
எந்தக் காரணத்தை முன்னிட்டும், அனிதாவின் முடிவிற்கு மற்ற மாணவர்கள் வரக்கூடாது. நாம் போராடி வெற்றி பெறுவோம் என்கிற அந்தத் துணிவும், ஒரு வைராக்கிய உணர்வும், உறுதியும் தேவையே தவிர - தங்களுடைய இழக்கக்கூடாத உயிரை இதற்காக இழக்கக்கூடாது.

இந்த சுவரெழுத்திலிருந்து மத்திய - மாநில அரசுகள் பாடம்பெற்று இனியாவது தங்களுடைய வறட்டுப் போக்கினைக் கைவிட்டு, நம்முடைய உரிமையை - அரசியல் சட்ட உரிமையினை காப்பாற்ற முன்வரவேண்டும். அதுதான் மிக முக்கியமானது.

இது ஏதோ ஒரு மருத்துவ மாணவியினுடைய தற்கொலை என்று அலட்சியப்படுத்தி விடக்கூடாது. பல்லாயிரக்கணக்கான மாணவ உள்ளங்களுடைய அந்தக் கொந்தளிப்புகள் அடங்கியிருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

*- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.*

கருத்துகள் இல்லை: