புதன், 5 ஜூலை, 2017

தோழர் பத்மா எங்கே ? அத்துமீறி கைது செய்யபட்ட மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ....

தோழர் பத்மா அவர்களின் கைது விசயத்தில்ஆந்திர போலீசார் அத்துமீறி நடந்து கொண்டிருப்பது பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்த பிறகும் கூட தமிழக போலீசு வாய் திறக்கவில்லை.
மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த தோழர் பத்மாவை 03.07.2017 அன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் இரயில் நிலையத்தில் வைத்து ஆந்திர மாநில நக்சல் தடுப்புப் பிரிவு போலீசு கைது செய்து ஆந்திராவிற்கு காரில் அழைத்துச் சென்றதாகப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தோழர் பத்மாவும், அவரது கணவர் தோழர் விவேக்கும் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள். கடந்த 2002 -ம் ஆண்டு ஊத்தங்கரையில் மற்ற மாவோயிஸ்ட் தோழர்களோடு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்மா, 2006 -ம் ஆண்டு பிணையில் வெளி வந்தார். அதன் பின்னர் மீண்டும் அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீசு. இவ்வழக்கிலும், கடந்த 2012-ம் ஆண்டு விடுதலையானார். இவர் மீது தமிழக, கேரள மற்றும் ஆந்திரப் போலீசார் பல்வேறு வழக்குகளைத் தொடுத்துள்ளனர்.
தனது இளம் வயது முதலே புரட்சிகர அரசியலில் ஊக்கத்துடன் ஈடுபட்டு வருபவர் தோழர் பத்மா. தற்போது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றியிருக்கும் அவரை துப்பாக்கி முனையில் ஆந்திர போலீசார் கைது செய்திருப்பதாகவும், இந்த கைது குறித்து தமிழக போலீசுக்குத் தெரியாது என்றும் செய்திகள் கூறுகின்றன. சட்டத்தின் ஆட்சி என்று சொல்லப்படுவதன் யோக்கியதை இதுதான்.

இப்படிக் கள்ளத்தனமாக கைது செய்யப்படும் தோழர்கள்தான் பின்னர் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இவ்விசயத்தில் முசுலீம்களையும் தலித்துகளையும் அடித்துக் கொல்லும் பசுக்காவலர்களுக்கும், போலீசுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஆந்திர போலீசார் அத்துமீறி நடந்து கொண்டிருப்பது பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்த பிறகும் கூட தமிழக போலீசு வாய் திறக்கவில்லை.
சமீபத்தில் தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் பத்மாவின் இணையர் தோழர் விவேக், சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
மக்கள் மீது மோடி அரசு தொடுத்துவரும் பலமுனைத் தாக்குதலின் அங்கம்தான் மாவோயிஸ்டு தோழர்கள் மீதான அடக்குமுறை!
தோழர் பத்மாவின் விடுதலைக்குக் குரல் கொடுப்போம்! vinavu

கருத்துகள் இல்லை: