ஞாயிறு, 2 ஜூலை, 2017

BBC: தமிழகத்தில் 1,000 திரையரங்குகள் மூடப்படுகின்றன.. GST இரட்டை வரி'க்கு எதிர்ப்பு!

ஜுலை மாதம் அமலுக்கு வந்த ஜி எஸ் டி வரி என்ற சரக்கு மற்றும் சேவை வரியுடன் தமிழக அரசு விதித்துள்ள மாநில வரி என இரட்டை வரிகளை செலுத்தமுடியாத காரணத்தால் தமிழகத்தில் திங்கட்கிழமை (ஜூலை 3) முதல் 1,000 திரையரங்குகள் காலவரையின்றி மூடப்படும் என்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
இரட்டை வரி தொடர்பான செய்தியாளர் சந்திப்பை சென்னையில் நடத்திய தமிழ் திரைப்பட வர்த்தக சபையினர், தங்களது அமைப்பு ஜி எஸ் டி வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினர். தமிழக அரசின் புதிய வரியின் கீழ், உள்ளூர் நகராட்சிகள் திரையரங்குகளுக்கு வரியை விதிக்க முடியும் என்று முறையை உருவாகியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.


 ''சினிமா துறைக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதம், அதற்கு மேல், மாநில அரசின் புதிய வரி 30 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. கூட்டாக மத்திய, மாநில அரசுகள் 58 சதவீத வரி விதித்தால், திரையங்குகளை தொழில் முறையில் நடத்துவது சாத்தியமற்றது என்பதால் திரையரங்குகளை மூட முடிவெடுத்துள்ளோம்.
சில திரையரங்குகள் முன்னதாவே மூடும் நிலையும் தமிழகத்தில் ஏற்பட்டது", என்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார். தமிழக அரசு தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் கோரிக்கையை ஏற்கும்வரை போராட்டம் தொடரும் என்றார் ராமநாதன். ''ஒரு டிக்கெட்டின் விலை 100 ரூபாய் என்றால், அதில் வரியாக 58 ரூபாய் அரசுக்கு செலுத்தினால், இந்த தொழிலை எவ்வாறு நடத்தமுடியும்?

சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் இந்த துறையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொருவரின் நிலையும் மோசமடையும்,'' என்றார். அவர் மேலும் தமிழக அரசு புதிய மாநில வரியை எந்தவித ஆலோசனையும் இன்றி, சம்பந்தப்பட்ட துறையினரிடம் கருத்து கேட்காமல் அறிமுகம் செய்துள்ளது என்று குற்றம் சாட்டினார். ''ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் இந்திய திரைப்படங்களில் தமிழகம் மற்றும் பிற தென் இந்திய திரைப்படங்கள்தான் கணிசமாக வெளியிடப்படுகின்றன. ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு தமிழ் படங்கள் வெளியாகின்றன. இந்த நிலையில் பெருமளவு வரியை செலுத்தினால் திரைப்பட துறைக்கு அதிக நஷ்டம் ஏற்படும் என்று ஒரு திரைப்பட அரங்கு உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: