புதன், 5 ஜூலை, 2017

Ramesh Praba : TV பூனைகளுக்கு மணி கட்டிய கவண்!

ஊடகங்களை விமர்சித்து
இன்னொரு துணிச்சலான படத்தை
இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இந்தமுறை அவர் தேர்ந்தெடுத்திருப்பது தொலைக்காட்சியை. அவர் எந்தெந்த தொலைக்காட்சிகளை மனதில் வைத்து விமர்சித்திருக்கிறார் என்பதை ரசிகர்களால் சுலபமாக ஊகிக்க முடிகிறது.
தொலைக்காட்சியில் டிராமா பிரபலமாக இருப்பது பரவாயில்லை... ஆனால் எல்லா நிகழ்ச்சிகளையும் டிராமா ஆக்குவது சகிக்க முடியாத ஒன்று என்பதும், சேனல்கள் பரபரப்புக்காக செய்திகளை, நாட்டு நடப்புகளை இருட்டடிப்பு செய்து எப்படி ஒருதலைபட்சமாக காண்பிக்கின்றன என்பதும்தான் படத்தின் சாராம்சம்.
எல்லாவற்றையும் டிராமா ஆக்குவது வடக்கத்திய சேனல்களின் கலாச்சாரம். அந்த சேனல்களின் தமிழ் வரவுக்குப் பின் இங்கும் அது தொற்றிக்கொண்டது. பாட்டுப் போட்டி என்று சொல்லி இளம் பிஞ்சுகளை வரவழைத்து பாடவைத்து அந்த இளம் வயதிலேயே சிறப்பாக பாடுபவர்களை, நடுவர்கள் என்ற பெயரில் சினிமாவில் ஒரு பாட்டு பாடி காணாமல் போனவர்கள் கண்டபடி விமர்சித்து அழ வைப்பதும், வெளியேற்றுவதும், திறமையை தாண்டி குலம் கோத்திரம் பார்த்து பரிசு கொடுப்பதும், பாடவரும் சிறுமிகளை கட்டாயப்படுத்தி கவர்ச்சி உடை அணிய வைப்பதும், மேட்ச் பிக்சிங் போலவே இங்கும் யாருக்கு பரிசு என முடிவு செய்துவிட்டு நிகழ்ச்சியை நடத்துவதும் என அத்தனை விஷயங்களையும் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

சேனல்களின் நிகழ்ச்சிகள் எப்படி விளம்பரதாரர்களால் முடிவு செய்யப்படுகின்றன, கட்டுப்படுத்தப்படுகின்றன என்கிற யதார்த்தத்தை அப்பட்டமாக்கியிருக்கிறது இந்தப் படம்.
சமூகத்தைப் புரட்டிப் போடவேண்டும் என்கிற நினைப்பில் ஒரு சேனலில் வேலைக்கு சேரும் இளைஞர்கள், அரசியல்வாதியின் கூட்டோடு அநியாயத்துக்கு துணைபோகும் சேனல் முதலாளியை எதிர்ப்பதால் வேலையை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் இன்னொரு போட்டி சேனலில் சென்று சேர்ந்து சாதிப்பதுதான் கதை. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல்வாதியின் தொழிற்சாலைக்கு எதிராகப் போராடும் பெண்ணை, அரசியல்வாதியின் கைக்கூலிகள் மானபங்கப்படுத்துவது, போராட்டத்தை முன்னெடுக்கும் இளைஞன் அப்துல் என்கிற முஸ்லிம் என்பதால் உடனே அவனை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி என முத்திரை குத்துவது போன்ற விஷயங்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுபடுத்தின.இங்கிலீஷ் நியூஸ் சேனலில் மற்றவர்களை பேசவே விடாத அர்னாப் கோஸ்வாமியை கிண்டலடித்திருப்பதை கைதட்டி ரசிக்கிறார்கள். ஒருவரின் இறப்பு, விபத்து, குண்டு வெடிப்பு போன்ற துக்கமான விஷயங்களைக்கூட EXCLUSIVE, FIRST ON OUR CHANNEL என்று அசிங்கமாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நியூஸ் சேனல்களை நேரடியாக சாடியிருக்கிறார்கள்.
வழக்கம்போல விஜய்சேதுபதியின் இயல்பான நடிப்பு, பெரிய சேனல் முதலாளியாக வரும் ஸ்கைவாக்கர், அதன் நிகழ்ச்சிப் பிரிவு தலைவியாக வரும் பெண்மணி, அரசியல் தலைவராக போஸ் வெங்கட் என மூவருமே சரியான தேர்வு.
போட்டி சேனல் அதிபராக வரும் டி.ராஜேந்தர் கலகலப்பூட்டுகிறார். பாரதியார் பாடலை வெவ்வேறு விதமாக இசை அமைத்திருப்பது ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு அல்வா மாதிரி. சுபா-கபிலன்வைரமுத்து கூட்டணியில் வசனங்கள் தியேட்டரில் தொடர்ந்து கைதட்டல் வாங்குகிற அளவுக்கு கூர்மை. இடைவேளைக்கு முன்பு ஒப்பிடும்போது பின்பு கொஞ்சம் இழுக்கிறதோ என்கிற ஐயப்பாடு பரவலாக இருந்தாலும் கமர்ஷியல் சினிமாவுக்கான எந்தக் குறைகளையும் வைக்கவில்லை இயக்குனர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் துணிந்து மணி கட்டியிருக்கும் கே.வி.ஆனந்த் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்.

கருத்துகள் இல்லை: