வியாழன், 6 ஜூலை, 2017

பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்.. மனுஷ்ய புத்திரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியொன்றில்
நான் நுழைந்து
மூன்று வருடங்கள்
கழிந்து விட்டன
எண்ணற்ற மர்ம சம்பவங்கள்
இந்த வீட்டில் நடந்துகொண்டிருக்கின்றன
எல்லாவற்றையும்
பிக் பாஸ் கண்காணிக்கிறார்
அதன் எடிட் செய்யப்பட்ட
சில வினோதங்களை
நீங்களும் காண்கிறீர்கள்
பிக் பாஸிற்கு
தெரியாதது என்று ஒன்றுமில்லை
நான் ஒரு காண்டம் வாங்கினாலும்
அது பிக் பாஸிற்கு தெரிந்துதான்
வாங்க வேண்டும்
எனது கிரெடிட் கார்ட் எண்
என் ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்டிருக்கிறது
அதில் என் விழிப்படலத்தின் ரேகைகள்
பதியப்பட்டிருக்கின்றன

நான் இன்று தூக்கிலிட்டுக்கொள்வதற்காக
ஒரு கயிறை வாங்குகிறேன் என்பதும்
பிக் பாஸிற்கு தெரியும்
பிக் பாஸின்
கண்காணிப்புக் கேமிராக்களில்
நாங்கள் எல்லா இடங்களிலும்
பதிவாகிக்கொண்டே இருக்கிறோம்
அரசியல் பேரங்கள் பதிவாகின்றன
படுக்கையறைக் காட்சிகள் பதிவாகின்றன
மொத்த தேசமும் இப்போது
ஒரு படப்பிடிப்பு தளமாகிவிட்டது
பிக் பாஸ்
என் தொலைபேசி உரையாடல்களை கேட்கிறார்
என் ரகசிய மின்னஞ்சல்களைப் படிக்கிறார்
என் வங்கிக் கணக்கின் சில்லரைகளை எண்ணுகிறார்
என் உள்ளாடைககளின் விலைச்சீட்டை அறிந்து கொள்கிறார்
நான் இப்போது பங்கேற்றிருக்கும்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகள்
கடுமையானவை
நாங்கள் ஒரே மொழியைத்தான் பேச வேண்டும்
ஒரே உணவைத்தான் உண்ண வேண்டும்
ஒரே நம்பிக்கையைதான் ஏற்கவேண்டும்
ஒரே குரலைத்தான் கேட்கவேண்டும்
இந்த நிகழ்ச்சில் நாங்கள் தங்கியிருக்கும் வீடு
இந்த உலகத்தின் மிகப்பெரிய
பைத்தியக்கார விடுதியாக மாறிக்கொண்டிருக்கிறது
ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பார்த்து
பயப்படுகிறார்கள்
யாரோ ஒருவன் திடீரென ஓலமிடுகிறான்
தேசபக்தியைக் கற்பிக்கிறான்
தேச பக்திக்காக
அந்த தேசத்தின் குடிமக்கள் சிலரை
வெட்டிக்கொல்கிறான்
கண்டனங்கள் எழுகின்றன
பிறகு எல்லாம் அமைதியாகிவிடுகிறது
பிக் பாஸ்
ஒலிப்பெருக்கியில் கட்டளைகளை
பிறப்பித்துக்கொண்டே இருக்கிறார்
எல்லோரையும் ஒரே நேரத்தில்
தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கச் சொல்கிறார்
எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள்
யோகாசன விரிப்பில்
எல்லோரையும் ஒரே நேரத்தில் உட்காரச் சொல்கிறார்
எல்லோரும் உட்காருகிறார்கள்
இப்படி இந்த மூன்று வருடத்தில்
ஏராளமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில்
ஏராளமானோர்  பங்கேற்றிருக்கிறோம்
மற்றவர்கள் சேர்ந்து தினமும் ஒரு பொதுஎதிரியை
கண்டு பிடிக்க வேண்டும்
கடைசியில் யார் மிஞ்சுகிறார்களோ
அவர்கள்தான் வெற்றிபெற்றவர்கள்
இது ஒரு நவீன அரசியல் சித்தாந்தம்
மக்களே மக்களை அழிப்பது
மக்களே மக்களை வெளியேற்றுவது
பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின்
திரைக்கதையை தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்
யாரையெல்லாம் வெளியேற்ற வேண்டும் என்று
தெளிவான திட்டம் இருக்கிறது
அந்த வீட்டிலிருந்து
பிக் பாஸ்  முதலில்
இஸ்லாமியர்களை வெளியேறச் செய்தார்
பிறகு கிறிஸ்துவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
பிறகு மாட்டுகறி உண்பவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
பிறகு பகுத்தறிவாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
பிறகு அம்பேத்காரியர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
பிறகு பெரியாரிஸ்டுகள் வெளியேற்றப்பட்டார்கள்
பிறகு இடது சாரிகள் வெளியேற்றப்பட்டார்கள்
பிறகு கல்வியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
பிறகு பொருளாதார நிபுணர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
பிறகு மாட்டுவியபாரிகள் வெளியேற்றப்பட்டார்கள்
பிறகு சிறு வணிகர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
பிறகு விவசாயிகள் வெளியேற்றப்பட்டார்கள்
பிறகு காந்தி வெளியேற்றப்பட்டார்
பிறகு நேரு வெளியேற்றப்பட்டார்
ஐநூறு ரூபாய்- ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியேற்றப்பட்டன
நேர்மையான ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள்
நேர்மையான நீதிபதிகள் வெளியேற்றப்பட்டார்கள்
இப்படி ஒரு கொடூரமான விளையாட்டைக்
காணவே முடியாது
ஒரு தேசமே
ஒரு பிக்பாஸின் ரியாலிட்டி ஷோவா மாறிவிட்டது
நூற்றி இருபது கோடி மக்களையும்
பிக் பாஸ் கண்காணிக்கிறார்
கட்டுப்படுத்துகிறார்
சிலரை தன் விதிமுறைகளுக்கு உட்படாதவர் என
வெளியே அனுப்புகிறார்
நான் படிமங்களாலான
கவிதையை எழுதுகிறவன்
பிக் பாஸின் கேமிராக்கள் என்னை
பொருட்படுத்துவதில்லை
ஆகவே நான் இங்கு
இன்னும் இருந்துகொண்டிருக்கிறேன்
பிக் பாஸ்
நிகழ்ச்சியின்  பங்கேற்பாளர்களை
தினமும் ஒரு முறையாது
சவுக்கால் அடிப்பதை
வழக்கமாக கொண்டிருக்கிறார்
அத்ன் ரத்த விளாறுகளை
தேசத்தின் வளர்ச்சியின் குறியீடுகள்
என்று வர்ணிக்கிறார்
பிக் பாஸ் ஒருபோதும்
இந்த வீட்டில் இருப்பதில்லை
அவர் எப்போதும் ஏதாவது ஒரு நாட்டின் அதிபரோடு
பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிக்கிறார்
அவர் என்ன பேசுகிறார் என்பது
யாருக்கும் தெரியாது
அவர் எதாவது ஒரு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுகொண்டே இருக்கிகிறார்
அதை அவராவது படிக்கிறாரா என்பது
சந்தேகத்திற்குரியது
ஆனால் அவர் எங்கிருந்தாலும்
நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்
கண்காணித்துக்கொண்டிருக்கிறார்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
அந்த நிகழ்ச்சியின் வீட்டில் வசிப்பவர்கள்
ஒருவரிம் ஒருவர்பேசிக்கொள்ளலாம்
நன பங்கேற்றிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில்
ஒருவரை ஒருவர் குழுக்களாக பிரிந்து
தாக்கிகொள்கிறோம்
பிக் பாஸ் திருப்தியடைகிறார்
தான் திட்டமிட்டபடி எல்லாம்’
ஒழுங்காகப் போய்க்கொண்டிருக்கிறது
என்பதை உணர்ந்து
அடுத்த விமானத்தைப் பிடிக்க ஓடுகிறார்
இந்த நிகழ்ச்சி எப்போது முடியும் என்று
யாருக்கும் தெரியவில்லை
இந்த நிகழ்ச்சி சீக்கிரமே முடியாவிட்டால்
இந்த வீட்டிலிருக்கும்
ஒவ்வொருவரும்
மற்றவர்களை
அடித்து சாப்பிட தொடங்கிவிடுவோம்
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின்
கடைசி எபிஸோட்டில்
பிக்பாஸையும்
ஒரு பசுமாட்டையும் தவிர
யாரும் மிஞ்சப்போவதில்லை
அவர்களே வெற்றியாளர்களாக இருப்பார்கள்
பிக்பாஸ் சீசன் ஒன்று முடிவதற்குள்ளேயே
சீசன் இரண்டுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்
26.6. 2017
மாலை 4.21
மனுஷ்ய புத்திரன்

கருத்துகள் இல்லை: