சனி, 8 ஜூலை, 2017

பார்ப்பன பெண்களின் உரிமையும் திராவிடமும் ,,, ஆமாம் நான் பாப்பாத்தி தான்!

kirubamunusamy: "ஆமாம் நான் பாப்பாத்தி தான், இப்ப என்ன அதுக்கு?" என்று
பார்ப்பனப் பெண்கள் திராவிடத்தை திட்டும் ஒவ்வொரு முறையும், அவர்கள் மீது கோபம் வருவதை விடவும், எப்படி இன்னமும் தங்களின் சுய வரலாறு குறித்த விழிப்புணர்வில்லாமல் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்பதையெண்ணி பரிதாபமே தோன்றுகிறது.
கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏற்றும் வழக்கமும், பின்னாட்களில் காவி புடவையுடுத்த வலியுறுத்தி மொட்டை அடிக்கும் வழக்கமும் பார்ப்பனர்களிடையே தான் இருந்தது. குழந்தைத் திருமணம் பரவலாக இருந்ததும், கைம்பெண் மறுமணம் மறுக்கப்பட்டதும் பார்ப்பன சமூகத்தில் தான். ஏன், குறிப்பிட்ட சில குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை மட்டும் தேவதாசி என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியதும் பார்ப்பன சமூகம் தான்.
ஆனால், இப்படியான கொடுமைகளுக்கெதிராக குரல் கொடுத்து, சமூக வேறுப்பாடின்றி பார்ப்பன பெண்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் காரணமாக இருந்தது திராவிடம் என்றால் அது மிகையல்ல.
நான் சிறுபிள்ளையாக இருந்த போது கூட 'மொட்டை பாப்பாத்தி' என்ற சொல்லாடலைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இந்த சொல்லாடல் இன்று வழக்கொழிந்து போயிருக்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் திராவிடம். கோயில், வேண்டுதல் என்ற பெயரில் மற்ற சமூகப் பெண்கள் மொட்டையடித்துக் கொள்வார்களே ஒழிய, பார்ப்பனப் பெண்கள் ஒருபோதும் மொட்டை அடித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதன் பின்னணி இதுவே!
விதவைகள் என்ற பெயரில் பெண்களின் எதிர்காலத்தை சிதைத்துவந்த கொடுமைகளை எதிர்த்து விதவைகள் நிலைமை, மறுமணம் தவறல்ல என்பன குறித்து பல கூட்டங்களை நடத்தி பார்ப்பனர்களின் வசவுக்கு ஆளானது திராவிடம்.

பெண்ணுரிமை என்ற ஒன்றே ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், பெண்களின் சொத்துரிமை குறித்து பேசியது திராவிடம். ஆனால், 'இவாளுக்கெல்லாம் சொத்துரிமை வந்துட்டா கண்டவனோட ஓடிருவாளே' என்று பெண்களின் மாண்பை கொச்சைப்படுத்தியது பார்ப்பனியம்.
பெண்களுக்கு சம உரிமை, பெண் விடுதலை, சொத்துரிமை, மறுமணம், கற்பு எதிர்ப்பு, காதல், மறுமணம் போன்ற அத்தனையையும் பேசிய திராவிடத்தை எதிர்த்தவாறே, அதனை செரித்துக்கொண்டு, அவையெல்லாம் சட்டமாக வந்தவுடன் பார்ப்பனப் பெண்களை வேலைக்கு அனுப்புவது, காதல் திருமணம் புரிய அனுமதிப்பது, கணவனை இழந்தப் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிறுத்தியது என்று தங்களை முன்னேறியவர்களாக காட்டிக்கொண்டாலும், இந்துத்துவ பார்ப்பனிய சனாதான ஆகம விதிகளை பாதுகாத்து அவற்றிற்குள் பெண்களை அனுமதிக்காமல் இருக்கிறார்கள்.
இவைகுறித்த அறிவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்களின் சுயசமூக பெருமைக்காக 'பாப்பாத்தி' என்று திராவிடத்தை திட்டினாலும் கூட, பார்ப்பன ஆண்களுக்கு இணையாக ஏன் பார்ப்பனப் பெண்களுக்கு பூணூல் அணிவிப்பதில்லை, கோயில் கருவறைக்குள் பெண்களுக்கு அனுமதி என்று பார்ப்பனப் பெண்களின் உரிமைகளுக்காக இன்று பேசுவதும் அதே திராவிடம் தான் என்பதை அவ்வப்போது அவர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: