புதன், 5 ஜூலை, 2017

ஆண்களுக்கு இருக்கும் பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு இருப்பதில்லை

Lulu Deva Jamla :*கற்பு-உதாசீனம்-பெண்மை*
பெண்மையை பேதையாய் பதுமையாய் மென்மையாய் சித்தரிக்க ஆணாதிக்க சமூகம் உபயோகிக்கும் அத்தனை அணிகலன்களையும் தூக்கி எறிந்து தன் பிறப்பை உணரும் வீரப்பெண்மையே என்னைப் பொறுத்தவரையில் உண்மையான பெண்மை!
வீரப்பெண்மணிகள் தூக்கியெறிய வேண்டிய முதல் காப்பு "புனிதம்" என்ற பெயரில் காக்கப்படும் "கற்பு".
கற்பு என்ற வார்த்தையிலேயே ஒரு முரண்பாடு உண்டு.. கற்பு என்பது வெறும் பெண்ணுறுப்பில் மட்டுமே இருப்பது போல் இந்த ஆணாதிக்கச் சமூதாயம் சித்தரித்து வைத்திருக்கிறது. கற்பு என்ற ஒன்று கற்பனையே என்னைப்பொறுத்த வரை! அப்படி ஒன்று இருக்கிறது என்பீர்களாயின் ஆணோ பெண்ணோ இரு பாலினர்க்கும் எல்லா உறுப்புகளிலும் கற்பு இருக்கிறது என்பேன். பெண் உடலால் உறவு கொண்டால் அது கற்பு இழப்பது என்று கூறி அவளை வதைக்கும் ஆண் வர்க்கம் தன் கண்ணாலேயோ உடலாலோ கற்பை இழப்பது மட்டும் எப்படி தப்பில்லாமல் போகும்?

இதை படிக்கும் போதே உங்களில் பலருக்கும் கோபம் வரலாம். ஆதியில் தாய்வழி சமூகமாய் இயங்கியது இவ்வுலகம் என்பதை அனைவரும் அறிந்து கொண்டாலே போதும், யாருக்கும் கோபம் வராது. விருப்பத்தேர்வு இணை என்ற இயற்கை நிலையே கண்ணகிக்கு முன் உலகம் முழுக்க, ஏன் தமிழகத்திலும் இருந்தது. கண்ணகியின் வரவே பெண்ணை இயற்கைக்கு மாறாக அடிமை படுத்துதலின் தொடக்கம் என இலக்கிய வரலாறு பேசுகிறது!
காட்டுமிராண்டியாக சொல்லுகின்றாய் என்று யாரும் கம்பு சுத்த வர வேண்டாம். நிதர்சன இயற்கை அவ்வாறே உள்ளது.
பெண்களை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க ஆண் இனம் செய்த செயற்கையான ஏற்பாட்டு உத்தியே இங்கு பலராலும் வலியுறுத்தப்படும் கண்ணியம், கலாச்சாரம், பண்பாடு.... ஆண்களுக்கு அந்த கட்டுப்பாடு கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற தேவை இல்லாமல் தான் தங்களுக்கு வசதியாக ஆணாதிக்க சமூகத்தை அமைத்து வைத்திருக்கிறது மதங்கள் அனைத்தும்...
ஆணுக்கு இருக்கிற பாலியல் சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை... அதைப் பெண்களே எடுத்துக்கொண்டால் எவ்வளவு இழிவு படுத்த வேண்டுமோ எவ்வளவு அடக்குமுறைகள் வேண்டுமோ அவை தாராளமாக நிகழ்த்தப்படும் இங்கு.... அந்த அடக்குமுறைகளுக்கு அடங்கி போகும் பெண்ணை தங்க தாம்பாளத்தில் வைத்து போற்றுவதும் அடங்காபிடாரிகளை ஓட ஓட விரட்டி கல்லடிப்பதும் தானே இங்கு வழக்கம்!
ஆனால் எதிராளிகளுக்கு எள்ளளவும் மதிப்பு கொடுக்காமல் திமிராய் தனக்கான பாதையை உருவாக்கிக்கொண்டு அதில் தடைகளைத் தாண்டி முன்னேறுபவளே வீரப்பெண்! அடக்குமுறைகளை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் தன் வழியில் போவதே உண்மையில் வலிமையான பெண்மை! போகணும்... பொருட்படுத்தாமல் போவதென்பது ஒரு வகையில் உதாசீனம் என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தல்... பெண்ணின் உதாசீனம் ஆண் இனத்தை வெகுவாய் காயப்படுத்தும்! ஏன்னா அதான் டிசைனே!
எதிராளிகளை வெலவெலத்துப்போக வைக்கும் ஒரு மிகப் பலமான ஆயுதம் "உதாசீனம்"... தாக்க வரும் பகைவரை நிலைகுலைய வைக்கும் ஆயுதம் "அலட்சியம்"
உதாசீனம் என்பதற்கு கண்டுகொள்ளாமல் இருத்தல், கவனிக்காமல் விட்டுவிடுதல், பாராமுகம் காட்டுதல், மதிக்காமல் நடந்து கொள்ளுதல், அலட்சியம் செய்தல், அக்கறையற்ற நிலை என பொருள் கொள்ளலாம்!
(Ignoring, showing negligence or indifference or apathy)
முயற்சி செய்து பாருங்கள் பெண்களே!!! நிச்சயம் வித்தியாசம் காண்பீர்கள்! நான் கண்டிருக்கிறேன்! 💪💪💪
பெண்மை போற்றுவோம்!!
லுலு தேவ ஜம்லா

கருத்துகள் இல்லை: