வெள்ளி, 7 ஜூலை, 2017

செம்மொழி தன்னாட்சி அமைப்பை சிதைக்கும் முயற்சியில் சங்பரிவார் ஆட்சி!

மின்னம்பலம் : செம்மொழியாம் தமிழ் மொழிக்கான மேம்பாட்டு ஆய்வுகள் நடத்துவதற்காக
தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வரும், செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அதிகாரமற்ற அமைப்பாக மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
 கனிமொழி
தலைவர் கலைஞர் அவர்களின் முயற்சியால் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது செம்மொழித் தமிழாய்வு மையம். இதை திருவாரூருக்கு மாற்றி அங்கு இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கின்ற முயற்சி 'செம்மொழி தமிழாய்வு மையத்தின்' தனித்தன்மையைக் குலைக்கும் முயற்சி. இதை அவர்கள் நிச்சயமாகக் கைவிட வேண்டும். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான இதை மத்திய அரசு கைவிட வேண்டும்!.
 பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
இந்தியாவில் இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்த பிற மொழிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நடுவண் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முயற்சியில் நடுவண் அரசு ஈடுபட்டிருக்கிறது. திட்ட ஆணையத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு தான் இதற்கான பரிந்துரையை நடுவண் அரசுக்கு வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பொருளாதாரம் சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்கான அமைப்பான நிதி ஆயோக்கிற்கு மொழி சார்ந்த ஆய்வுகளின் முக்கியத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதையும் பொருளாதாரக் கண் கொண்டு பார்க்கும் நிதி ஆயோக் அமைப்பு இதையும் அதே கண் கொண்டு பார்த்திருக்கக்கூடும். இது தங்களுக்கு சாதகமாக இருப்பதால் நடுவண் அரசும் இதை செயல்படுத்தத் துடிப்பதாகத் தெரிகிறது. இதை ஏற்க முடியாது.
செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் என்பது நடுவண் பல்கலைக் கழகத்தை விட உயர்ந்த அமைப்பு ஆகும். தமிழக முதலமைச்சர் தான் இதன் ஆட்சிக்குழுத் தலைவர் என்பதிலிருந்தே இதன் பெருமையை உணர முடியும். இந்நிறுவனத்தை எப்போது வேண்டுமானாலும் நடுவண் பல்கலைக்கழகமாக மாற்ற முடியும். அவ்வாறு மாற்றினால் அது திருவாரூரில் உள்ள நடுவண் பல்கலைக்கழகத்தை விட உயர்ந்த நிலை அமைப்பாக திகழும். அப்படிப்பட்ட அமைப்பை நடுவண் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது ஒரு மாநிலத்தை இன்னொரு மாவட்டத்துடன் இணைப்பதற்கு சமமான செயலாக அமையும். இதனால், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் தன்னாட்சி உரிமை பறிபோகும். இந்த நிறுவனத்தின் ஆய்வுகள் முற்றிலுமாக முடங்கி விடும். சிறு செலவுகளுக்கு கூட துணைவேந்தரை சார்ந்திருக்க வேண்டும்.
சென்னையில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே அதை முடக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிறுவனம் அமைக்கப்பட்ட நாளிலிருந்தே அதற்கு நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படவில்லை. இது நடுவண் நிறுவனம் என்பதற்காக தமிழகத்திலுள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி., அஞ்சல்துறை போன்ற ஏதோ ஒரு நடுவண் நிறுவனத்தின் அதிகாரியை பொறுப்பு இயக்குனராக நியமிப்பதை நடுவண் அரசு வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த அதிகாரிக்கு தமிழே தெரியாது என்பதால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சொல்லிக்கொள்ளும்படியாக எதையும் செய்வதில்லை. இந்த நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக தமிழறிஞர் இராமசாமி பணியாற்றிய காலத்தில் தான் ஓரளவு தமிழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் அந்த பணிகளும் கிட்டத்தட்ட முடங்கிவிட்டன.
கடந்த 2014 ஆம் ஆண்டில் முனைவர் பாலசுப்பிரமணியன் என்பவர் இந்த நிறுவனத்தின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நடுவணில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவருக்கு பணி ஆணை வழங்க இப்போதுள்ள நடுவண் அரசு மறுத்து விட்டது. அதுமட்டுமின்றி, இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 120-க்கும் மேற்பட்ட பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டனர். இந்த நிறுவனத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு 41 நிரந்தர பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இன்று வரை அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இவ்வாறாக செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதன் உச்சகட்டமாக இந்நிறுவனத்தை நடுவண் பல்கலைக்கழகத்துடன் இணைக்க நடுவண் அரசு துடிக்கிறது. இந்நடவடிக்கை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் அடையாளத்தை அழித்துவிடும்.
எனவே, செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை திருவாரூர் நடுவண் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்.


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
’’பல்லாண்டு கால காத்திருப்புக்குப் பின்னர் 2004 ஆம் ஆண்டில்தான் தமிழ் மொழிக்கு இந்திய அரசு ‘செம்மொழி’ எனும் சிறப்பை நல்கியது.
செம்மொழி தமிழின் தொன்மையையும், தனித்தன்மையையும் நன்கு புலப்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுப் பணிகளை செம்மொழி ஆய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு, பழந்தமிழ் நூல்களை மொழி பெயர்த்தல், வரலாற்று முறைத் தமிழ் இலக்கணம் வகுத்தல், தமிழின் தொன்மை -பன்முக ஆய்வு, தமிழ் திராவிட பிற மொழிக் குடும்பங்கள் ஒப்பாய்வு, தமிழ் வழக்காறுகள் ஆய்வு, பழந்தமிழ் ஆய்வுக்கான மின் நூலகம், இணையவழிச் செம்மொழித் தமிழ்க் கல்வி, பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம், செம்மொழித் தமிழ்க் காட்சிக் குறும்படங்கள் தயாரிப்பு போன்ற பணிகளைத் தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனம் நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு முழு நேர இயக்குநரை நியமிக்காமல் அதன் செயற்பாட்டை முடக்கியுள்ளது. தற்போது சென்னை தரமணியில் இயங்கி வரும் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தின் ஓர் உறுப்பாக இணைத்துவிட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தின் தன்னாட்சி உரிமையைப் பறித்து, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல வகைகளில் அந்நிறுவனத்தின் ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்தும் உள்நோக்கத்துடன் அந்நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கு மத்திய அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் சமஸ்கிருத மொழி, இந்தி மொழித் திணிப்பைத் தீவிரப்படுத்தி வருவதுடன், தொன்மை சிறப்பு மிக்க தமிழ்த் தேசிய இனத்தின் மொழி, இன மற்றும் பண்பாட்டு அடையாளங்களைச் சிதைப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துடன் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தை இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசின் இம்முயற்சியைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஜல்லிக்கட்டுக்காக நடந்ததைப் போன்று தமிழகம் பொங்கி எழுந்து போராடும்

மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
திடீரென்று நிதிஆயோக் ஆலோசனையின் அடிப்படையில் மத்திய அரசு சென்னையில் சுயேச்சையாக இயங்கி வரும் மத்திய செம்மொழி ஆய்வு மையத்தை மூடிவிட்டு இதை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகின்றன.
இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசு அடுத்தக்கட்டமாக தமிழ் வளர்ச்சியை பாதிக்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சென்னையில் உள்ள ஆய்வு மையத்தை திருவாரூரில் உள்ள பல்கலைக்கழகத்தோடு இணைத்தால் ஆய்வு மையத்தின் சுயேச்சையான பணி பாதிப்புக்குள்ளாகும். சென்னையில் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூர் பல்கலைக்கழகத்திற்கு மாற்றுகின்ற முயற்சியை கைவிடுமாறு மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும் சென்னையில் இம்மையம் சிறப்பாக செயல்பட மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது’’ என்று கூறியுள்ளார் ஜி.ராமகிருஷ்ணன்.

ஓ.பன்னீர்செல்வம்
சென்னையில் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலைகழகத்துக்கு மாற்றும் சூழல் ஏற்பட்டால் அது கண்டிக்கத் தக்கது.

கருத்துகள் இல்லை: