புதன், 19 அக்டோபர், 2016

மனநோய் மருத்துவத் துறையைக் கட்டுப்படுத்தும் என். ஜி. ஓக்கள்

thetimestamil.com |:மரு. அரவிந்தன் சிவக்குமார்<: br=""> : சென்னை. இங்கு எந்த இடத்தில் யார் வாழவேண்டும், எங்கு குடிசைவாழ் உழைக்கும் வர்க்கத்தினரை ஒதுக்கிவைப்பது?அவர்கள் வாழ்ந்த இடத்தில் நாம் திரியும் மால்கள், பெருநகர வளர்ச்சித் திட்டங்கள். யாருக்கான வளர்ச்சி, எது வளர்ச்சி என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு எல்லாவற்றுக்கும் நாம் தலையசைக்கிறோம், சரி என்கிறோம். ஒரு பொறியில் சிக்கியிருப்பது தெரியாமலேயே நகர்கிறோம்..!
அந்த ஆண்டு அக்டோபர் 10 உலக மனநல நாளின் மையக்கருத்து LIVING WITH SCHIZOPHRENIA… மனச்சிதைவு நோயுடன் என் வாழ்வு..!
எல்லா ஊடகங்களிலுமே மனச்சிதைவு நோயின் காரணிகளாக மரபணுக்களும், தீர்வாக மருந்துகளும் முன்னிறுத்தப்பட்டது. மனச்சிதைவு நோயைச் சுற்றி, பாதிக்கப்பட்டவர், அவருடைய குடும்பம் மற்றும் மருத்துவர்- மூவரின் வாழ்வும் பின்னிப் பிணைந்திருக்கிறது.
மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் தன் வாழ்வின் மீதும் தன் எண்ணங்கள், செயல்கள், சுயத்தின் மீதும் கட்டுப்பாடிழந்து தவித்து நொறுங்கிப்போவது, அவருக்கு மட்டுமல்ல, அவரது சுற்றத்திற்கும், மிகவும் சிக்கலானது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், எங்கள் மருத்துவமனைக்கு இருவர் வந்தார்கள். 45 வயது பெண்மணி, 14 வருடங்களாக மனச்சிதைவு நோய், அழைத்துவந்தவர் அவரின் தங்கை, 40 வயது. “டாக்டர், என் அக்காவை தீபாவளி முடியும்வரை மருத்துவமனையில் அனுமதியுங்கள்; பட்டாசு சத்தம் கேட்டாலே கத்த ஆரம்பிச்சுடுவா, நேற்றுகூட பக்கத்து வீட்டில் இருந்தவர் பைக் சத்தம் கேட்டாலே கத்தறா” என்றார். தன் தந்தை ஒரு தொலைபேசி நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக இருந்து பணியில் இருக்கும்போது உயிரிழந்த பிறகு, தனக்கு வேலை வழங்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகே தன் அக்காவுக்கு மனநலப் பிரச்னை தொடங்கியது; கடந்த 14 வருடங்களாக தன் வயதுமுதிர்ந்த தாய், நோயோடு போராடும் அக்கா, மணம்முறிந்து வீடுதிரும்பிய தங்கை, சென்னையில்  ஒருவர் சம்பாத்தியத்தோடு வாடகை வீட்டில், மூவர் வாழ்வையும் சுமந்துகொண்டு எப்படி இந்த பெண்மணி வாழ்கிறார் என்ற கேள்வி என் மனதைத் துளைத்தது. மனச்சிதைவு நோயில் சிக்கியுள்ளவரின் குரல் மட்டுமல்ல, அவரைப் பராமரிப்பவரின் குரல்களும் காலங்கலமாக செவிமடுக்கப்படாமலும், பதிவுசெய்யப்படாமலும் உள்ளன.

aravindan-sivakumar-copy
மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்
மனநோய்களைப் புரிந்துகொள்ள உளவியல்-சமூகவியல் பார்வை தேவையற்றது என்று புறந்தள்ளும் மனநல மருத்துவத்துறையானது, உயிரியல் பார்வையின் (Biological approach) மூலமே மனநோய்களின் புரிதல் சாத்தியம் என்று பறைசாற்றுகிறது. இதனால் மனநோய்த் தொழில்நுட்பச் சட்டகத்தின் (technological framework)  வழியே பார்க்கப்படுகிறது. இதோடு அல்லாமல், தனிமனித மூளை நரம்புகளின் வேதியியல் குறைபாடுகளே மனநோய்க்கான காரணிகள் என்றும் அதைச் சமன்செய்ய மாத்திரைகள் மட்டுமே தீர்வு என்ற குறுக்கிப்பார்க்கும் அணுகுமுறை முன்வைக்கப்படுகிறது. மரபணுக்களின் சிக்கல்களினாலேயே மனநோய் உருவாகிறது என்ற வாதமும் திணிக்கப்படுகிறது.
இந்த குறுக்கிப்பார்க்கும் அணுகுமுறையில் (bio reductionistic approach) மூழ்கி செயல்படும் ஒரு மனநல மருத்துவர், சமூகக் காரணிகள், புறச்சுழலிலின் தாக்கங்கள், சமூக விலக்கல், ஏற்றத்தாழ்வு, வறுமையின் நெருக்கடி என்ற பல்வேறுவிதமான தாக்கங்களால் மனநல  பாதிப்பும் மனநோய்களும் ஏற்படும் என்ற கருத்தியலை சுலபமாய் எரித்து சாம்பலாக்கிவிடுகிறார்.
‘ரசாயனக் குறைபாடு, அதை மாத்திரைகளின் மூலம் சமன்செய்வதே தீர்வு’ என்ற பார்வை, மனநோய்களை அரசியலற்றதாகவும் ( depoliticise) தனிமனிதப் பிரச்னைகளாகவும் மாற்றி, இங்கு நிலவுகின்ற சமூகக் கட்டமைப்பைக் காப்பாற்ற உதவியும் செய்கிறது. ஒரு மருத்துவனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மருத்துவத்துறையையே கட்டுப்படுத்தி லாபம்கொழிக்கும் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வளர்ச்சியையும் பாதுகாக்கிறது.
ஒரு மனநோயாளியின் நோயின் தன்மையைக் குறைத்து, நோயிலிருந்து மீட்பது மட்டுமா, மனநல மருத்துவ சிகிச்சையின் குறிக்கோள்? நோயாளியின் வாழ்க்கை மீது சுயகட்டுப்பாட்டை வரவழைத்து, அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்து, அதிகாரமளிப்பதே (empowerment) சிகிச்சையின் குறிக்கோள்களாக இருக்கவேண்டும்.
நோயின் தன்மை குறைந்து நோயிலிருந்து அவர் மீள்வது மட்டுமன்றி, சமூகமீட்சியை உள்ளடக்கிய முழுமையான மீட்சியே மனநல சிகிச்சையின் இலட்சியம் என்ற கருத்தியலும், முழுமையான மீட்சியை உள்ளடக்கிய மறுவாழ்வு (recovery oriented rehabilitation) என்ற கருத்தியலும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இது தேவையற்றது என்று குறுகலான பார்வையை உயிரியல் மனநல மருத்துவர்கள் (biological psychiatrists with reductionistic views) முன்வைக்கிறார்கள்.
ஒரு நோயாளியின் நம்பிக்கையை, தன்மானத்தை மேலோங்கச்செய்ய தொழில், வீடு, சமூக அங்கீகாரம், மன நோயாளி என்கிற அடையாளம் நீக்கப்பட்டு, தன்னையும் அரவணைத்துக்கொள்ளும் சமூகம் எனும் நிலை ஆகியவற்றால்தான் மனச்சிதைவு நோயிலிருந்து மீள்வது சுலபமாகவும், விரைவாகவும் நடக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.
வீதியில் அலைந்துகொண்டிருக்கும் ஒருவரை அழைத்துவந்து ஒரு மனநலக் காப்பகத்தில் சேர்த்தவுடன், குறுகலான பார்வையின் அடிப்படையில், ஒரு மனநல மருத்துவர் மருந்து மட்டும் கொடுத்தால் அந்த நோயாளின், நோய்க்குறிகள் குறையலாம். அத்தோடு என் வேலை முடிந்துவிட்டது என்று அவர் கண்ணைமூடி ஒதுங்கிநிற்கும் சிந்தனை, போக்கு நிலவுகிறது.
நோய்க்குறிகளைக் குறைப்பது மட்டும்தான் என் வேலை; அதை நான் அறிவியல்பூர்வமாகச் செய்கிறேன்; அவன் சாப்பிட்டானா, படுக்க பாயிருக்கிறதா, சாக்கடை அடைத்திருக்கிறதா, கட்டடம் இடிந்திருக்கிறதா, அவனை வீட்டிற்கு அனுப்ப என்ன செய்வது? வேலை, பயிற்சி, மறுவாழ்வு இதெல்லாம் என் வேலையில்லை என மனநல மருத்துவர்களின் குரல் பரவலாகக் கேட்கிறது. இதன் மூலம் எல்லாவற்றையும் தனியார் தொண்டு நிறுவனத்திடமும், தனியார் மறுவாழ்வு மையங்களுக்கும், அதற்கு நிதிகொடுத்து உதவும் பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்த்து விடுகிறோம்.
மன நோயாளியின் தேவையைத் தீர்மானிக்க , என்ன சிகிச்சை அவருக்கு அளிக்க வேண்டும், எந்த மருத்துவமனையில் சேர்க்கவேண்டும்  என்ற முடிவுகளை ‘நியமிக்கப்படும் பிரதிநிதிகளின்’ (NOMINATED REPRESENTATIVES) மூலம் செயல்படுத்தப்போகும் ஒரு புதிய நடைமுறை, மனநல மருத்துவச் சட்டமுன்வரைவு 2013(mental health care bill 2013)-ல் வரவிருக்கிறது. இதன்படி மன நோயளிகள், அதிகாரப்பூர்வமாக, அரசுசாரா நிறுவனங்களாலும்(ngo), தனியார் (Rehab) மையங்களாலும் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
நம்முடைய வாழ்வை பெருமுதலாளிகளின் இச்சைகளே தீர்மானித்துக்கொண் டிருக்கும் சூழலில், சமூகவிலக்கலை முன்னிறுத்தி ஒடுக்கியாளும் சமூகத்தில் வாழும் நாம், மனநோயாளியின் வாழ்வை மேம்படுத்த ngo-கள் முன்மொழியும் நுண்ணரசியல் மூலம், சிறிதளவு அதிகாரப்பகிர்வு என்ற மாயையின் மூலம், மாற்றம் கொண்டுவந்துவிட முடியுமா? நிச்சயமாக முடியாது.
சமூகம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் எதை, யாரை எதிர்த்துப் போராடினால், சமூக மாற்றத்தினூடே, ஒதுக்கி விலக்கப்பட்டவர்களும் சமூகப் பிரஜைகளாய், உரிமைகளோடு, சுதந்திரமாய் உலவும் மனிதர்களாய் வலம்வர முடியும் என்ற புரிதலோடு செயல்படவேண்டியுள்ளது. எல்லோருக்குமான சமூகத்தை கட்டமைக்க, நாம் தூக்கியெறிந்த மனநோயாளிகளோடு இணைந்தே போராட வேண்டும். மனநோயாளிகளின் கால்களில் பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலிகளை உடைக்கமுற்படும் தருணத்தில், நம்மை அடிமைகளாக்கிக் கட்டுப்படுத்தும்- கண்களுக்கு புலப்படா சங்கிலித்தொடர்களை நோக்கிய போரட்டத்தை எப்படி முன்னெடுக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு பதில் தேடியே பயணிப்போம்.
(2014 ஆம் ஆண்டு உலக மனநல நாளின் மையக்கரு ‘மனச்சிதைவு நோயுடன் என் வாழ்வு ‘2014 World mental health day Theme : Living With Schizophrenia)
அரவிந்தன் சிவக்குமார், மனநலம் மற்றும் குடிநோய் மருத்துவர்.

கருத்துகள் இல்லை: