புதன், 19 அக்டோபர், 2016

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 94 குழந்தைகள் ... வட்டியுடன் இழப்பீடு!

2004ஆம் ஆண்டு, ஆடி மாதம் 16ஆம் தேதியன்று கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்கள். இந்நிலையில், கும்பகோண பள்ளி விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சேர்த்து நான்கு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில், கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இது சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.6 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கத்தின் செயலாளர் இன்பராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுத்தொகை போன்று இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21–ன் கீழ் அதாவது, பொதுச்சட்டத்தின்கீழ், தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.25 லட்சமும், கடுமையாக காயம்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ.20 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை சம்பவம் நடைபெற்ற 2004ஆம் ஆண்டு முதல் 2011 வரை 8 சதவிகித வட்டியும், 2011ஆம் ஆண்டு முதல் 2012 வரை 8.6 சதவிகித வட்டியும் 2012-2016 வரை 8.7% வட்டியும் கணக்கிட்டு 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும். மேலும் காயமடைந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஆறு லட்சம் வரை இழப்பீடு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பின்படி, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு 9.53 லட்ச ரூபாயும், அதிக காயமடைந்தவர்களுக்கு 11.45 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 95 ஆயிரம் கொடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: