வெள்ளி, 21 அக்டோபர், 2016

என்னோட வீட்டுக்காரர் டாக்டர்தான. அவரும் டாக்டர்ஸ்கிட்ட பேசிட்டுதான் இருக்காரு. ஆனால் நீங்க சொல்ற மாதிரி இல்லை

minnambalam.com .“நேற்று அமைச்சர்கள் எல்லோரும் கோட்டையில் இருந்தார்கள். பன்னீர்செல்வம் பேசினார். அதன்பிறகு மற்ற அமைச்சர்கள், தங்கள் துறைசார்ந்த விஷயங்களை தங்களது அறையில் அமர்ந்தபடி பேசினார்கள். அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்கள்.
ஜெயலலிதா மருத்துவமனைக்குப் போனபிறகு நேற்றுதான் கோட்டை பிசியாக இருந்தது. இன்று வழக்கம்போல அமைச்சர்கள் யாரும் அந்தப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. எல்லோரும் காலையிலேயே அப்பல்லோவுக்கு வந்துவிட்டார்கள். அமைச்சர்கள் யாருக்குமே தற்போது இரண்டாவது தளத்துக்கு அனுமதி இல்லை என்பதால், எல்லோரும் முதல் தளத்தில்தான் காத்திருந்தார்கள். தம்பிதுரையை மட்டும் மதியம் 1.30 மணியளவில் ஒருமுறை இரண்டாவது தளத்துக்கு அழைத்திருக்கிறார்கள்.
இரண்டாவது தளத்தின் ரிசப்சனில் நின்றவரிடம் டாக்டர்.சிவக்குமார் மட்டும் வந்து சில நிமிடங்கள் ஏதோ சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அதன்பிறகு தம்பிதுரையும் முதல் தளத்துக்கு வந்துவிட்டார். அவர் கீழே வரவும், இந்து மக்கள் கட்சித் தலைவரான அர்ஜுன் சம்பத் மருத்துவமனைக்கு வரவும் சரியாக இருந்தது. அவரிடம் தம்பிதுரைதான் பேசினார். ‘அம்மா குணமடைந்து வர்றாங்க. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்’ என்று சொல்லியிருக்கிறார் தம்பிதுரை. அதன்பிறகு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோருடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தார் அர்ஜுன் சம்பத். பிறகு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
நேற்று இரவு, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் கார்டனுக்குப் போனதாக சொல்கிறார்கள். போயஸ் கார்டனில் உள்ள லிஃப்ட் மாற்றியமைக்கும் பணிகள் நடந்துவருவதாக நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டன. அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போன ஆம்புலன்சில் மூவிங் டைப்பிலான ஸ்ட்ரெச்சர் இருந்ததாம். அதை போயஸ் கார்டனில் தற்போது புதிதாக தயாராகியிருக்கும் லிஃப்டில் கொண்டு போய் ட்ரையல் பார்த்ததாகச் சொல்கிறார்கள். அதாவது, முதல்வரை 27ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்து போயஸ் கார்டனுக்கு அழைத்துவந்தால், எப்படி முதல் தளத்துக்கு அவரைக் கொண்டுசெல்ல முடியும் என்பதற்கான ஒத்திகை நடந்ததாகச் சொல்கிறார்கள். அதற்காகத்தான் நேற்று இரவு ஆம்புலன்ஸ் ஒன்று போயஸ்கார்டன் பக்கம் போய் வந்தது என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அந்த நேரத்தில் கார்டனில் முதல்வரின் உதவியாளர் பூங்குன்றனும், டாக்டர் சிவகுமாரும் மட்டும் இருந்தார்களாம். முதல் தளம்வரை போன லிஃப்டில் இருந்து, ஸ்ட்ரெச்சர் இறக்கப்பட்டு மீண்டும் தரைத் தளத்துக்கு வந்துவிட்டது. ஆக, தீபாவளிக்குமுன்பு டிஸ்சார்ஜ் என்பதில் சசிகலா தரப்பு உறுதியாக இருப்பது தெரிகிறது.” என்பதுதான் தயாராக இருந்த ஸ்டேட்டஸ். அதற்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.
அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து மெசேஜ் ஒன்றை அனுப்பியது.
“முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபிறகு அவரைப் பார்க்க கவர்னர் வித்யாசாகர் ராவ் வந்தார். முதல்வர் இருக்கும் வார்டுக்குள் அவர் சென்றதாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் சொல்லப்பட்டிருந்தாலும் அவர் முதல்வரைப் பார்க்கவில்லை. அமைச்சர்களுடனும் மருத்துவர்களுடனும் பேசிவிட்டுத் திரும்பிவிட்டார். அதன்பிறகு கவர்னரை சந்திக்கப்போயிருந்தார் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர். அவர், கவர்னரிடம் முதல்வரின் உடல்நிலை பற்றி பேசியிருக்கிறார். அதற்கு கவர்னர், ‘மேடம் நல்லா இருக்காங்க. நான் விசாரிச்சேன். எதுவும் பிராப்ளம் இல்லை..’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் போன அரசியல்வாதியோ, ‘என்னோட வீட்டுக்காரர் டாக்டர்தான். மேடம்க்கு அவரையும் தெரியும். அவரும் டாக்டர்ஸ்கிட்ட பேசிட்டுதான் இருக்காரு. ஆனால் நீங்க சொல்ற மாதிரி இல்லை.’ என்று சொல்லியிருக்கிறார். அதைக்கேட்ட கவர்னரோ, ‘அப்படியா.. அப்புறம் என்கிட்ட ஏன் அப்படிச் சொன்னாங்க…?’ என்று அதிர்ச்சியடைந்தவர், ‘என்னை ச்சீட் பண்ணிட்டாங்க..’ என்று வருத்தத்துடன் சொன்னதாகச் சொல்கிறார்கள்.
அதன்பிறகு இந்த விவரங்களை எல்லாம் கவர்னர் மத்திய அரசுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார். அதனால் உளவுத்துறை போலீஸாரும் இதுபற்றி தினமும் விசாரித்து கவர்னருக்கும், மத்திய அரசுக்கும் ரிப்போர்ட் அனுப்பியபடியே இருக்கிறது. இந்த விஷயத்தில் பன்னீர் மீது கவர்னர் வருத்தத்தில் இருப்பதாகவே தெரிகிறது” என்பதுதான் அந்த மெசேஜ்.

கருத்துகள் இல்லை: