புதன், 19 அக்டோபர், 2016

BBC : சௌதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

சௌதி அரேபியத் தலைநகர் ரியாதில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு
வாய்ச்சண்டையில் ஒருவரை சுட்டுக்கொன்றதற்காக, சௌதி அரேபிய இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக , உள்துறை அமைச்சகம் கூறியது. சௌதியில் மரண தண்டனைகள் பொதுவாக சிரச்சேத முறையிலேதான் நிறைவேற்றப்படுகின்றன இளவரசர் துர்க்கி பின் சௌத் அல்-கபீருக்கு ரியாதில் நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டோர் பொதுவாக சிரச்சேதம் செய்யப்படுவது வழக்கம்.
இளவரசர் கபீர் இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டோரில் 134வது நபர் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆனால் , சௌதியில் அரச குடும்பத்தைச் சேர்ந்தோர் மரண தண்டனைக்குள்ளாவது பொதுவாக அபூர்வமாகவே நடக்கிறது.
இளவரசர் கபீர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று உள் துறை அமைச்சக அறிக்கை கூறியது.
``பாதுகாப்பையும் நீதியையும் பாதுகாக்க `` அரசு ஆர்வமுடன் இருப்பதை மக்களுக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றம் உறுதிப்படுத்தும் என்று உள்துறை அமைச்சகம் கூறியது.
கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர்,குற்றவாளிக்கு மரண தண்டனையை வலியுறுத்தாமல் இருக்க நிதி இழப்பீடாக சௌதியில் தரப்படும் ``ரத்தப் பணத்தை` ஏற்க மறுத்துவிட்டதாக அல் அரேபியா செய்தி நிறுவனம் கூறியது.
சௌதியில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிரபலமான ஒரு சம்பவம், 1975ல் சௌதி மன்னரும் தனது மாமாவுமான, மன்னர் ஃபைசலை படுகொலை செய்த ஃபைசல் பின் முசைத் அல் சௌதுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையாகும்.

கருத்துகள் இல்லை: