புதன், 19 அக்டோபர், 2016

ஸ்டாலின் :விவசாயிகள் தற்கொலையை தமிழக அரசு ஏன் காவிரி தொழில்நுட்ப குழுவிடம் எடுத்து சொல்லவில்லை?

தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தினமும் 2000 கன அடி காவேரி நீர் திறந்து விட வேண்டும்” என இன்று நடைபெற்ற காவேரி வழக்கின் இறுதி விசாரணையின் துவக்கத்திலேயே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசும், காவேரி இறுதி தீர்ப்பின் படி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசும் தொடர்ந்து மறுத்து தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றன.
 இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க இதுவரை ஏழு முறை தண்ணீர் திறந்து விட அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளது தமிழக விவசாயிகளுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
விவசாயத்திற்கு 134 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகின்ற நேரத்தில் இப்போது திறக்க உத்தரவிடப்பட்டுள்ள 2000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு போதாது என்றாலும் மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் செயல்படாத நிலையில், தமிழக விவசாயிகளின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து உச்சநீதிமன்றம் இது போன்ற தொடர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது தமிழக விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது.
இப்போது உச்சநீதிமன்றம் போட்டுள்ள உத்தரவை மதித்து கர்நாடக அரசு உடனடியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் காவேரி படுகையில் உள்ள கள நிலவரம் குறித்து விசாரிக்க 4.10.2016 அன்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜா தலைமையிலான தொழில் நுட்பக் குழு தனது அறிக்கையில் தமிழக விவசாயிகளின் நியாயத்தை உச்சநீதிமன்றத்தின் முன்பு எடுத்து வைக்கத் தவறி விட்டது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகள் படும் துயரம் குறித்தோ, காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்தோ தனது அறிக்கையில் எதையும் குழுவே முன் வந்து கூறாதது வேதனையளிக்கிறது. தமிழக விவசாயிகள் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறிய கருத்துக்களை மட்டும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதே தவிர, மிகுந்த தொழில் நுட்ப திறன் படைத்த மத்திய நீர்வள ஆணையத் தலைவரின் தலைமையிலான குழு தமிழக விவசாயிகளின் பாதிப்பு குறித்து குறிப்பிடாதது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசின் விளக்கத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து மத்திய நீர்வள ஆணையரே தன் அறிக்கையில் அந்த விளக்கங்களை இணைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கர்நாடகாவில் நடக்கும் விவசாயிகள் தற்கொலையை மட்டும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள காவிரி தொழில் நுட்பக் குழு, தமிழகத்தில் நடைபெற்ற விவசாயிகளின் தற்கொலைகளை சுட்டிக்காட்டாமல் புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்தமாக கர்நாடக அரசின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக மத்திய நீர்வள ஆணையத் தலைவரின் அறிக்கை அமைந்திருக்கிறதே தவிர, தமிழக விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. இந்தக் குழு வரும் முன்பே 7.10.2016 அன்று நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஆகியோரை அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தினார். “காவிரி பிரச்சினை, காவிரி தொழில் நுட்பக் குழுவின் வருகை, குழுவிடம் பரிமாற வேண்டிய தகவல்கள்” குறித்து அமைச்சர்களுடன் ஆளுனர் ஆலோசனை செய்ததாக ஆளுனர் மாளிகையில் இருந்து செய்தி குறிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் காவேரி நீர் திறந்து விடாததால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட முக்கியமான தகவலை அதிமுக அரசு காவரி தொழில் நுட்பக் குழுவிற்கு தெரிவிக்க தவறி விட்டது. தமிழக விவசாயிகள் தற்கொலை விவரங்களை மறைத்த அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

போன்ற சூழ்நிலையில் தான் தமிழக விவசாயிகளின் துயரத்தை உணர்ந்து, “மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை 2000 கன அடி காவேரி நீர் திறந்து விட வேண்டும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் உள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு முட்டுக் கட்டை போட்டு வருகிறது. அதற்கு மத்திய அரசும் துணை போகிறது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகளின் படி தமிழகத்திற்கு நீர் திறந்து விடவும் கர்நாடக அரசு மறுத்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து கர்நாடக மாநில அரசை தட்டிக் கேட்கவும் மத்திய அரசு தயங்குகிறது. ஆகவே தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்து விடுவதில் இனியும் “அரசியல்” செய்யாமல் கர்நாடக மாநில அரசு உடனடியாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு தயக்கமின்றி முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.d

கருத்துகள் இல்லை: