சனி, 22 அக்டோபர், 2016

சிவகாசி விபத்து : கொன்றது புகையா அரசின் அலட்சியமா ?

பாதாளச் சாக்கடையோ இல்லை பட்டாசுத் தொழிலோ நம் மக்கள் சாகவேண்டுமா? தீபாவளிக்கு வெடிக்க காத்திருக்கும் உள்ளங்கள் சிந்திக்கட்டும்
fire sivakasiருடா வருடம் தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு இணையாக பட்டாசு தொழில் விபத்தில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்துவதும் அதிகரித்து வருகிறது. சிவகாசி – விருதுநகர் புறவழிச் சாலையில் உள்ள ராகவேந்திரா பட்டாசு கடையில் 20.10.2016 வியாழனன்று நடந்த விபத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
வியாபாரம் என்றால் அதில் சாமி பேர் இருக்க வேண்டும் என்ற விதிக்கு தப்பாத ராகவேந்திர கடையில் நேற்று பட்டாசுகளை வெளியூருக்கு அனுப்பும் முகமாக சிறு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். பட்டாசு பெட்டிகளில் புகையைப் பார்த்த ஊழியர்கள் அணைக்க முயன்றும் முடியவில்லை. உடனே அவர்களும் அருகாமை கடைக்காரர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

நாற்புறமும் வெடித்துச் சீறிய பட்டாசால் கடை முழுவதும் வெடிக்க ஆரம்பித்தது. அந்த சிறு லாரியும், அருகில் இருந்த 20 இருசக்கர வாகனங்களும் எரிந்து கூடுகளாகின. அருகாமைக் கடைகளும் சேதமடைந்தன.
ராகவேந்திரா கடைக்கு பின்புறம் இருக்கிறது தேவகி ஸ்கேன் மையம். கடையை ஒட்டிய பாதை வழியேதான் இந்த ஸ்கேன் நிலையத்திற்கு செல்ல முடியும். விபத்தில் எழுந்த பிரம்மாண்டமான கரும்புகை ஸ்கேன் நிலையத்தை சூழ்ந்து நிரப்பியது. உள்ளே பணியாளர்களும், மருத்துவ சோதனைகளுக்கு வந்தோரும் அதில் மாட்டிக் கொண்டு மூச்சுவிடமுடியாமல் மாட்டிக் கொண்டனர்.
கண நேரத்தில் புகை அவர்களில் எட்டு பேரை கொன்று விட்டது. ஸ்கேன் நிலையத்தின் மேலாளர் பீட்டர், ஊழியர்களான காமாட்சி, வளர்மதி, புஷ்பகலட்சுமி, ராஜா, பத்மலதா மற்றும் சோதனைகளுக்கு வந்த தேவி, சொர்ணகுமாரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். புகை சூழ்ந்த நேரத்தில் உள்ளே இருந்த 41 மக்களில் 15 பேர் வெளியேற மீதிப்பேர் அரை மற்றும் முழு மயக்கமாகியிருக்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 14 பேர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமென்று செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் மூச்சுத்திணறல் ஏற்படுத்துமளவு புகை மண்டிவிட்டது. ஏ.சி கருவி மூலம் உள்ளே புகை சென்றது, நிலையத்தின் ஒருவழிப்பாதை எல்லாம் சேர்ந்து உயிரிழப்பை அதிகப்படுத்திவிட்டன.
நிலையத்தின் அபாய ஒலிக்கருவி ஒலித்ததை வைத்தே தீயணைப்புத் துறை வந்திருக்கிறது. இருப்பினும் எட்டு பேர் பலி. பிறகு ராகவேந்திரா கடை உரிமம் வைத்திருப்பவரான ஆனந்தராஜ் மற்றுமை கடையை நடத்திய செண்பகராமன் மீது போலிசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ஊடகங்களிலும் செய்தி வெளியாகிவிட்டது. அவ்வளவுதானா?
இது விபத்தா இல்லை தொழிலாளிகள் – மக்கள் மீது அரசும் முதலாளிகளும் சேர்ந்து காட்டும் அலட்சியத்தினால் நடந்த கொலையா?
சிவகாசியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் பல 20 ஆண்டுகளுக்கு முன் உரிமம் பெற்றவை. ஆனால் 2008 வெடிபொருள் கட்டுப்பாட்டு சட்டத்தின் படி எந்த நகருக்குள்ளேயும் கடைகளோ, கிடங்குகளோ இயங்கக் கூடாது. கடைகளுக்கு அருகே குறைந்தது 100 அடி தூரத்திற்கு குடியிருப்பு பகுதியே இருக்க கூடாது என்றெல்லாம் இந்த சட்டம் கூறுகிறது.
மற்ற ஊர்களில் பட்டாசுகளை நேரடியாக விற்கும் போது சிவகாசி கடைகளில் அவற்றை வெளியூருக்கு அதிக அளவில் அனுப்புகிறார்கள். தீபாவளி நெருங்குவதால் இக்கடைகள் இரவு பகலாக அதிக நேரம் அதிக பாரத்தை அனுப்பி வருகின்றன. கொல்லப்பட வேண்டிய மாடுகளை கொண்டு செல்கிறார்கள் என்று வழக்கு போடும் போலீசும், விலங்கு ஆர்வலர்களும், அதிகாரிகளும் உள்ள நாட்டில் பட்டாசுகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்கிறார்களா என்று எவரும் பார்ப்பதில்லை.
புதிய சட்டப்படி பட்டாசு வைத்து வணிகம் செய்வோர் உரிமத்தோடு, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், இருப்பு பதிவேடு, தீ தடுப்பு கருவிகள் அனைத்தும் உரிய முறையில் வைத்திருக்க வேண்டும். இதை பல அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும்.
புதிய சட்டத்தின்படி பழைய கடைகள் உரிமம் பெற்றார்களா என்றால் இல்லை. அதிலும் இலஞ்சம் – ஊழல். இத்தகைய பண்டிகை காலங்களில் பட்டாசு குறித்த முன் எச்சரிக்கைகளை அதிக கவனத்தோடு செய்ய வேண்டிய உரிய அரசுத் துறைகளுக்கு இதே பண்டிகை காலம் அதிக பணத்தை லஞ்சமாக அள்ளிக் கொடுக்கிறது என்பதால் யாரும் கண்டு கொள்வதில்லை.
கடையோ கிட்டங்கியோ ஆலையோ யார் சான்றிதழ் பெற்றிருக்கிறார், அதை அவர் முறையாக கடைபிடிக்கிறாரா என்று ஆய்வுசெய்வதற்கு பதில் முறையாக மாமூல் வருகிறதா என்பதை பார்க்கிறார்கள். உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் அப்பல்லோ தளங்களில் தொழுதிருக்கும் போது கீழே இத்தகைய அபாயம் நிறைந்த தொழில்களில் பலி அதிகமாகத்தான் இருக்கும்.
அம்மாவோ, அமைச்சரோ வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஆயிரம், இலட்சம் சரவெடி வெடிக்கும். இந்த வெடிகளை கேட்கும் போதும் கேட்காமலேயே மாமூலையும் எதிர்பார்க்கும் அ.தி.மு.க கூட்டம் ஆளும் போது சிவகாசி உயிர்பலிகளை நரபலி என்றே குறிப்பிடவேண்டும்.
கருணாநிதி ஏன் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கண்டிக்கும் பா.ஜ.க-வின் தமிழிசை இந்த விபத்து குறித்து என்ன சொல்கிறார்? எதிர்காலத்தில் தடுக்க வேண்டும், தொழிலில் ஈடுபடுவோருக்கு உரிய தற்காப்பு பயிற்சி, விழிப்புணர்வு, பயிலரங்குகள் கொடுக்க வேண்டும், சிவகாசி மருத்துவமனையில் தீப்புண் சிகிச்சை பிரிவு வேண்டும் – இவைதான் அவரது கோரிக்கைகள். இதில் எதிலாவது மத்திய மாநில அரசுகளையோ இல்லை அரசுத் துறைகளையோ கண்டிக்கிறாரா இல்லை! இதன்படி இனி இந்துக்களுக்கு பட்டாசுகள் எனும் அஃறிணைப் பொருட்கள்தான் முக்கியமே அன்றி அதை உருவாக்கும் பாவப்பட்ட ‘இந்துக்கள்’ அல்ல.
முதலாளிகளின் கட்சியான காங்கிரசின் திருநாவுக்கரசர், இழப்பீடு 10 இலட்சம் கொடுக்க வேண்டும், சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நிறுத்திக் கொள்கிறார். ஒரு வேளை காங்கிரசு மிட்டாமிராசுகள் யாரும் கொல்லப்பட்டிருந்தால் இழப்பீடு பத்து கோடியாக இருக்கும். மேலும் அப்பல்லோவில் இருக்கும் அவரது முன்னாள் கடவுளின் மனம் நோகாமல் இருப்பதை பக்தியாக வைத்திருக்கும் காங்கிரசு தலைவர் ஏன் தமிழக அரசை கண்டிக்கப் போகிறார்?
இறந்தவர்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்துவும் இரங்கலை தெரிவித்திருக்கிறார். இதன்படி எஸ்.ஆர்.எம்-மில் சேர பணம் கொடுத்தவர்கள் அதை திரும்ப பெற முடியாது என தற்கொலை செய்து கொண்டாலும் அவர் இரங்கல் செலுத்துவார். என்ன ஒரு லேசர் பிரிண்ட் அவுட்டிற்கு பத்து ரூபாய் கூட செலவில்லையே!
அன்புமணி ஒரு படி மேலே போய் நீதி விசாரணை மற்றும் கடை வாகன சேதங்களுக்கும் இழப்பீடு கேட்கிறார். இதன்படி ஒரு நூறு வாக்குகள் கூட கிடைக்குமா என்பது அவர் கவலை. மற்றபடி சின்னையா, தமிழக அரசையோ மத்திய அரசையோ கண்டித்து ஒரு காற்புள்ளி கூட சேர்க்கவில்லை. அம்மாவின் அடிமை சரத்குமாரோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிராறாம்.
இந்த இலட்சணத்தில் தேஷ் பக்தர்களின் சார்பில் பா.ஜ.க மற்றும் அதன் ஊடகங்கள் அனைத்தும் சீன பட்டாசுகளை தவிர்த்து இந்திய பட்டாசுகளை வெடிக்கச் சொல்லி உபதேசிக்கிறார்கள். இவர்களுக்கு இந்திய பட்டாசு வெடிப்பதுதான் முக்கியமே அன்றி இந்திய மக்கள் அதே இந்திய பட்டாசுகளால் கொல்லப்படுவது முக்கியமல்ல. சீனப் போட்டியால் பாதிக்கப்படும் இந்திய முதலாளிகளைக் காப்பாற்றும் அக்கறை இந்திய தொழிலாளிகளையோ இல்லை மக்களையோ காப்பாற்றுவதில் இல்லை.
சீனாவிலோ உலகின் மற்ற நாடுகளிலோ இத்தகைய பண்டிகை கால பட்டாசுகளை தயாரிப்பதற்கும் விற்பதற்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள், விதிமுறைகளை வைத்திருக்கும் போது இந்தியாவில் ஏன் இல்லை? ஏனென்றால் இங்கே மக்களின் நலனை முதன்மையாக வைத்து அரசோ, கட்சிகளோ செயல்படுவதில்லை.
பாதாளச் சாக்கடையோ இல்லை பட்டாசுத் தொழிலோ நம் மக்கள் சாகவேண்டுமா? தீபாவளிக்கு வெடிக்க காத்திருக்கும் உள்ளங்கள் சிந்திக்கட்டும்.
– இராசவேல்
படங்கள் நன்றி: நக்கீரன்

கருத்துகள் இல்லை: