வெள்ளி, 21 அக்டோபர், 2016

வீரமணி :சமூகநீதிக்கு எதிரான புதிய கல்வித் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்காதது ஏன்?

கி.வீரமணி | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத்கி.வீரமணி | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத்
சமூகநீதிக்கு எதிரான புதிய கல்வித் திட்டத்தை தமிழக அரசு அதிகாரபூர்வமாக எதிர்க்காதது ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வித் திட்டம் குறித்து தமிழக அரசு இன்னும் திட்டவட்டமான கருத்தை தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சிக்குரியது. புதிய கல்வித் திட்டத்துக்கு எதிராக மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் என தொடர் நிகழ்ச்சிகள் நடக்கும் நிலையிலும் மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான, ஆபத்தான புதிய கல்விக்கொள்கை பற்றி தமிழக அரசு அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
குலக்கல்வி முறை, இந்தி, சமஸ்கிருத திணிப்பு, கல்வி தனியார்மயம், இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து, மாநில அரசின் முடிவில் தலையீடு என ஏராளமான பாதக அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி வரை கல்வி நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனால், இந்தியாவின் பன்முகத்தன்மை, பண்பாடு, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும். நுழைவுத்தேர்வு முறை கொண்டுவரப்படும்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதுதான் பிசி வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தப் பிரச்சினையில் அதிமுக அரசுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. ஆனாலும், புதிய கல்வித் திட்டம் குறித்து அதிகாரபூர்வமாக எதிர்ப்புக்குரல் கொடுக்காதது ஏன்?
இன்னும் காலம் கடந்துவிடவில்லை. வருகிற 25-ம் தேதி டெல்லியில் மத்திய அரசின் கல்வி ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து கல்வி அமைச்சரோ முக்கிய அமைச்சரோ பங்கேற்கவில்லை. மாறாக துணைச் செயலாளர் நிலையில் உள்ளவர்தான் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்தமுறை அதுபோன்று இல்லாமல் கல்வி அமைச்சரோடு அத்துறையின் செயலாளர் அளவில் உள்ளவர்கள் கலந்துகொண்டு புதிய கல்வித் திட்டத்தை முற்றாக நிராகரிக்க தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை உறுதிசெய்ய வேண்டும்'' என்று வீரமணி கூறியுள்ளார்  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: