திங்கள், 13 ஜூன், 2016

எழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; வன்கொடுமை செய்யும் போலீசார்

இந்த படத்தை பார்த்ததும் கண் கலங்கி நிற்கிறேன்.எழுத்தாளர் துரை குணா காவல் நிலையத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் காட்சியை பாருங்கள்.பூபதி கார்த்திகேயனும் துரை குணாவும் தன்னை கத்தியால் குத்தினார்கள் என்று புகார் கொடுத்ததாக சொல்லபடுகிற சிவானந்தம், தனக்கு துரை குணா யார் என்று கூட தெரியாது.போலிஸ் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி அவர்களாகவே புகார் எழுதி இருக்கின்றனர் என்கிறார்.அது மட்டும் அல்ல சிவானந்தம் மீது சின்ன கீறல் கூட இல்லை.இன்று அப்பகுதிக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டு இப்போதுதான் திரும்பி இருக்கிறேன்.நாளை விரிவாக எழுதுகிறேன்.பல அதிர்ச்சி தகவல்கள் உண்டு.( பட உதவி திரு.கண்ணன்)

____
மனித உரிமை ஆர்வலர் பூபதி கார்த்திகேயன், எழுத்தாளர் துரை குணா ஆகிய இருவரையும் கரம்பக்குடி போலிஸ் நேற்று கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது.சிவானந்தம் என்பவரை இருவரும் 09.06.2016 அன்று இரவு 8.00 மணி அளவில் கத்தியால் குத்தினார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.கத்தியால் குத்த பட்டதாக சொல்லபடுகிற சிவானந்தம் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.அவரிடம் இன்று 11.06.2016 காலை 09:07 மணிக்கு 20 நிமிடம் தொலைபேசியில் பேசினேன். பூபதி கார்த்திகேயன் கரம்பகுடியில் பர்னிச்சர் கடை வைத்து இருக்கிறார்.நான் அவரிடம் 50,000 ரூபாய் கடனுக்கு பொருள் வாங்கினேன்.அதில் 42,000 ரூபாய் செலுத்திவிட்டேன்.
இந்நிலையில் கடந்த 09.06.2016 அன்று இரவு 8.00 மணி அளவில் நான் இரண்டு சக்கர வாகனத்தில் பூபதி கார்த்திகேயன் பர்னிச்சர் கடைக்கு முன்பு சென்று கொண்டு இருந்தேன்.அப்போது என்னை வழிமறித்த பூபதி கார்த்திகேயன் என்னிடம் மீத பணம் கேட்டு இழிவாக பேசினார்.தாக்கவும் செய்தார்.அருகில் இருந்த துரை குணா சின்ன கத்தியால் என் கையில் குத்தினார்.அப்போது அங்கு யாரும் இல்லை என்றார்.நான் அவரிடம் என்ன மாதிரியான கத்தி என்றேன்.இருட்டில் நடந்தினால் கத்தியை பார்க்கவில்லை என்றார்.
பூபதி கார்த்திகேயன் கடை அருகில் நிறைய கடைகள் இருக்கின்றன.பெட்ரோல் பங் இருக்கிறது.சம்பவம் கடைக்கு முன்பு நடந்து இருக்கிறது.அதுவும் 20 நிமிடம் தகராறு நடந்ததாம்.ஆனால் அங்கு யாரும் இல்லை என்று சிவானந்தம் சொல்லுவது நம்பும்படியாக இல்லை.என்ன கத்தி என்று கூட சிவானந்தத்திற்கு தெரியவில்லை.
நான் ஆலங்குடி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டேன்.அங்கு மெய்யப்பன் என்கிற போலிஸ் என்னிடம் வாக்குமூலம் வாங்கினார் என்று கூறினார்.மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு போலிஸ் என்னை அழைத்து வந்து இருக்கின்றனர் என்றார் சிவானந்தம். காயத்திற்கு எத்தனை தையல் போடப்பட்டு இருக்கிறது என்று கேட்டேன்.தையல் போடுகிற அளவிற்கு காயம் இல்லை.சிறிய அளவில் கீற பட்டு இருக்கிறது என்றார்.எனக்கு மனசு சங்கடமாக இருக்கிறது.அவர்களை போலிஸ் கைது செய்வார்கள் என்று எதிர்பார்கவில்லை.விசாரித்து விட்டு, விட்டுவிடுவார்கள் என்று கருதினேன்.பூபதி கார்த்திகேயன் எனது நெருங்கிய உறவினர்.நாங்கள் இருவரும் தலித் சமூகத்தினர்.வழக்கினை நடத்த விருப்பம் இல்லை என்றார்.நான் அவரிடத்தில் உங்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்களில் பிரச்னை இருந்து இருக்கு என்று தெரிகிறது.உங்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருக்கலாம்.ஆனால் கத்தியால் உங்களை குத்தினார்களா என்று கேட்டேன்.நான் பொய் சொல்லவில்லை சார் என்றார்.உங்களை போலிஸ் பயன் படுத்தி இருக்கிறது என்று பலரும் சொல்லுகிறார்கள்.இது குறித்து என்ன சொல்ல வரிங்க என்று கேட்டேன்.அமைதியாக இருந்தார்.உங்களுக்கு தாக்குதல் நடந்து இருந்தால் அது கண்டிக்கதக்கது.ஆனால் இரண்டு தலித்துகளை மோத விட்டு போலிஸ் தங்களது பழிவாங்கும் உணர்ச்சியை பயன்படுத்தி இருப்பது உங்களுக்கு தெரிகிறதா? என்று கேட்டேன்.ஆமாம் சார்..பூபதி கார்த்திகேயன் அண்ணன் இங்கு உள்ள கள்ள சாரத்திற்கு எதிராக போலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போராடி வந்தார் என்றார்.
பூபதி கார்த்திகேயன் மீதும் துரை குணா மீதும் போலிஸ் ஏன் வன்மம் கொள்ள வேண்டும்? கரம்பக்குடி காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு மீது சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளையில் மட்டும் 5 வழக்குகள் நடந்து வருகிறது.இந்த வழக்கினை நடத்தி வருபவர்கள் பெரியார் அம்பேத்கர் பண்பாட்டு மயத்தின் பொறுப்பாளர் செல்வம்,பூபதி கார்த்திகேயன் துரை குணா உள்ளிட்ட தோழர்கள்.காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு பல தலித்துகளை விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து வருபவர்.இவரின் அத்து மீறலை தொடர்ந்து இந்த தோழர்கள் எதிர்த்து வந்தனர்.கள்ள சாராயமும் சாதியமும் இந்த பகுதியில் தாண்டவம் ஆடுகிறது.கள்ள சாராய கும்பலிடம் சகாயம் அன்பரசு பணம் வாங்கி கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் என்கிற குற்றசாட்டுக்கு ஆளானவர்.
கரம்பக்குடி காவல் நிலையத்தில் பூபதி கார்த்திகேயன் மீதும் துரை குணா மீதும் குற்ற என் ; 187/2016 பிரிவுகள் 341,294(b),323,324,506(2) இ.த.ச.கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.சமிபத்தில் உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெறுகிற குற்றத்தில் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.ஆக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அது மட்டும் அல்ல எம்.எல்.சி.வழக்காக பதிவு செய்யப்பட்டு 10.06.2016 அன்று காலை 6.00 மணி அளவில் இருவரையும் அவர்களது வீட்டில் போலிஸ் கைது செய்து இருக்கின்றனர்.
போலிஸ் அடித்து சித்ரவதை செய்து இருக்கின்றனர் என்று நூற்று கணக்கான வழக்குகள் எம்.எல்.சி.போடப்பட்டும் ஒரு வழக்கில் கூட போலிஸ் கைது செய்யப்பட்டது கிடையாது. வேண்டும் என்றே போலிஸ் இவர்கள் இருவரையும் கைது செய்து இருக்கிறது.இதற்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யும் உடந்தை.நேற்று முழுவதும் கரம்பக்குடி காவல் நிலைய தொலைபேசி என்னை போலிஸ் டி ஆக்டிவ் செய்து வைத்து இருந்தனர்.நேற்று 10.06.2016 அன்று எஸ்.பி.இடம்.இதுபோன்ற சம்பவமே நடக்கவில்லை.காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு பல மீறல்களை செய்து வருபவர்.இது திட்டமிட்டு போடப்பட்டு பொய் வழக்கு என்று எடுத்து கூறினேன்.அப்படியா நான் விசாரிக்கிறேன் சார் என்றார்.காவல் ஆய்வாளர் மீது பல புகார் இருந்தும் அவர் மீது ஏன் எஸ்.பி.இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்று கேட்டேன்.அதற்கு அமைதியாக இருந்தார்.
ஆக..கரம்பக்குடி காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு மீதும் புதுகோட்டை எஸ்.பி.மீதும் வேண்டும் என்றே கடமையை புறகணித்த வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்திற்காக வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.எஸ்.பி.மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய இருவரும் பனி இட நீக்கம் செய்யப்படவேண்டும்.   thetimestamil.com/

கருத்துகள் இல்லை: