சட்டங்கள் புத்தகங்களில் அடக்கப்பட்ட எழுத்துக்களாகவே
இருந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக, மனிதக் கழிவுகளை
மனிதர்களே அகற்றுவதைத் தடைச் செய்யும் சட்டத்தைச் சொல்லலாம். 1993 ஆம்
ஆண்டில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர்
கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. 2000ஆம்
ஆண்டைக் கடந்த போதிலும் கையால் மலம் அள்ளுவது வடமாநிலங்களில் தீவிரமாகவே
தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தன்னார்வலர்கள், தனிநபர்களின் நீதிமன்ற
வழக்குகள் காரணமாக ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தத்
தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம்’ என்கிற புதிய சட்டம் 2013-ஆம்
ஆண்டும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இந்தச் சட்டம் திருத்தங்களுடன் 2014ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 2016-ல்தான் நடைமுறைக்கு வந்தது.>இவ்வளவு நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பின்னும் அடுத்தவரின் மலம் மிதக்கும் குழிக்குள் சக மனிதன் இறங்குவதைத் தடுக்க அரசுகள் முனையவில்லை. சமூகமும் அதுகுறித்து வெட்கப்படுவதில்லை. தன் வீட்டின் அடைப்பை நீக்க, மலக்குழிக்குள் இறங்கி உயிரை விட்டவரை தியாகி ஆக்குவதில்லை இந்தச் சமூகம்; விலங்கினும் கீழாகவே அவர் உயிர் அங்கே மதிக்கப்படுகிறது. கடக்கக்கூடிய சாகவாகவே அது இருக்கிறது.
ஆனால் இந்தச் சட்டம் திருத்தங்களுடன் 2014ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 2016-ல்தான் நடைமுறைக்கு வந்தது.>இவ்வளவு நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பின்னும் அடுத்தவரின் மலம் மிதக்கும் குழிக்குள் சக மனிதன் இறங்குவதைத் தடுக்க அரசுகள் முனையவில்லை. சமூகமும் அதுகுறித்து வெட்கப்படுவதில்லை. தன் வீட்டின் அடைப்பை நீக்க, மலக்குழிக்குள் இறங்கி உயிரை விட்டவரை தியாகி ஆக்குவதில்லை இந்தச் சமூகம்; விலங்கினும் கீழாகவே அவர் உயிர் அங்கே மதிக்கப்படுகிறது. கடக்கக்கூடிய சாகவாகவே அது இருக்கிறது.
இத்தகையதொரு சமூக-அரசியல் சூழலில் மலக்குழிக்குள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் கதைகளைத் தேடி ஆவணமாக்கிக் கொண்டிருக்கிறார் திவ்ய பாரதி. சமூக செயற்பாட்டாளராக அறியப்பட்ட திவ்யபாரதியின் இந்த முயற்சி, சுயபரிசோதனையைப் போன்றது. ஏனெனில் சுயமான முனைப்பின் பேரில், துப்புரவு பணியாளர்களின் மேல் உள்ள அக்கறையின் பேரில் அவர் இதைச் செய்துகொண்டிருக்கிறார்.
திவ்யபாரதியுடன் நடத்திய உரையாடலின் தொகுப்பு இங்கே:
ஆவணப்பட முயற்சியை எப்படித் தொடங்கினீர்கள்?
“சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் எட்டு வருடங்களுக்கும் மேலாக இருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் துப்புரவுப் பணியாளர்களின் அவல வாழ்க்கையை கவனித்ததே கிடையாது. நான் சார்ந்த இயக்கத்திலும்கூட தொழிற்சங்கங்களால் இவர்களை அணிதிரட்ட இயலவில்லை. 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையில் இரண்டு பேர் மலக்குழிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி இறந்தார்கள். அவர்கள் இருவரும் மாநகராட்சி பணியாளர்கள், அவர்களை இந்தப் பணியைச் செய்யச் சொன்னது மாநகராட்சி நிர்வாகமே.
ஆனால், இந்த மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்தார்கள். பணி நிர்பந்தம் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நான் சார்ந்த அமைப்பு (சிபிஐ ம லே (விடுதலை)) உள்ளிட்ட 7 அமைப்புகள் சேர்ந்து மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் பிணங்களை வாங்காது போராட்டம் செய்தோம். முதல் கோரிக்கை, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும். இரண்டாவது 2014ல் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மலக்குழியில் இறங்கி உயிர்விட்டவர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மூன்றாவது கோரிக்கை சட்டத்துக்கு புறம்பான பணியைச் செய்யச் சொன்னவர்களை கைது செய்ய வேண்டும். மூன்று கோரிக்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு அவசர அவசரமாக பிணங்களை உறவினர்களிடம் ஒப்படைத்தார்கள்.
மலக்குழிக்குள் சிக்கி, மூன்று நாள் பிணவறையில் கிடந்து உடல்கள் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிட்டன. வேறு வழியில்லாமல் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை வாங்கிக் கொண்டோம். ஈமச் சடங்கு செய்யக்கூட அந்தக் குடும்பத்தினரிடம் பணம் இல்லை. தோழர்களிடம் இருந்ததை எடுத்துக் கொடுத்து சடங்குகளை முடித்தோம். இந்தக் குடும்பத்தினருடன் இறுதிச் சடங்கு வரை இருந்தது நான்கைந்து பேர் மட்டுமே. விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களில் ஒருவரின் இளம் மனைவி, அவர் பெயர் மகாலட்சுமி. அவர் புறண்டு புறண்டு அழுததை என்னால் மறக்க முடியாது. இன்னும் அந்தக் காட்சி என் கண்களில் இருக்கிறது.
இந்தச் சம்பவங்கள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்து சென்னை தலப்பாகட்டு கடையில் நடந்த தொழிலாளிகளின் மரணம். ஊடகங்களில் வராத நடுவில் ரெண்டு, மூன்று சம்பவங்கள்.
இப்படி மலக்குழி மரணங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. இந்த மரணங்களை பின் தொடர வேண்டும் என அப்போது தீர்மானித்தேன்.
ஆவணப் பட அனுபவங்கள் எப்படி இருந்தன?
மதுரை, தலப்பாகட்டு, நெய்வேலி போன்ற இடங்களில் நடந்த ஒரு சில மரணங்கள் மட்டுமே ஊடகங்களில் பதிவாயுள்ளன. அக்டோபரில் தொடங்கி இதுவரைக்கும் எனக்குத் தெரிந்து 16 மலக்குழி மரணங்கள். மறைக்கப்பட்ட மரணங்கள் இன்னும் இருக்கலாம்.
ஒவ்வொரு மரணத்தின் பின்னணியையும் படமாக்கும் பொருட்டு 15 மாவட்டங்களுக்குப் பயணமானோம். மலக்குழி இறப்புகளை மட்டுமல்லாது, துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அதையும் செய்திருக்கிறோம்.
இந்த ஆவணப்படமாக்கலில் நாங்கள் அறிந்த முக்கியமான விஷயம், தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகளில் உள்ளவர்களுக்கே துப்புரவுப் பணியாளர்கள், மலக்குழி மரணங்கள் குறித்த சரியான அறிதல் இல்லை.
ஆனால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் தகவல்கள் இருக்கின்றன. எல்லோரிடமிருந்தும் கருத்துகளை பெற்றிருக்கிறோம். இவர்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனத்தையும் வைத்திருக்கிறோம்.
மலக்குழி அடைப்பு நீக்கும் பணிகளுக்கு தமிழக தொழிலாளர்களைப் பயன்படுத்துவது போய், வட இந்திய தொழிலாளர்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
வட இந்திய தொழிலாளர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கேட்பதற்கு நாதியில்லை என்பது அவர்களை பணிக்கு அமர்த்துபவர்களுக்குச் சாதகமான அம்சமாக இருக்கிறது. சமீபத்தில் விருதுநகரில் இறந்த வட இந்திய தொழிலாளர்களை மறுநாளே எரித்துவிட்டார்கள்.
மலக்குழிக்குள் இறங்கும் தொழில் வேண்டாம் என்றால் வேறு என்ன தொழில் செய்வது என்பது குறித்து யாருக்குமே ஒரு மாற்றுத்திட்டம் இல்லை. தலித் சாதிகளுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி வசைபாடுவதுதான் அதிகமாக இருக்கிறது.
ஏன் தொழிற்சங்கங்களாலும் இவர்களைத் திரட்ட முடியவில்லை. சம்பள உயர்வு, வேலை நிரந்தரம் இதைத் தவிர, மலக்குழியில் இறங்கும் தொழிலாளர்கள் நிலையை அவர்களும் கவனத்தில் எடுக்கவில்லை. இதையெல்லாம் ஆவணப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.
ஆவணப்படத்துக்கான நிதியுதவி யார் செய்கிறார்கள்?
நானும் ஒளிப்பதிவாளர்களாக குமார், கோபால் என மூவருமாக மட்டுமே தமிழகம் முழுக்க சுற்றி இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள், தோழர்கள், முகநூல் மூலமாக நிதி திரட்டினோம். நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். என்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போகும்போது குறைந்த பட்சம் ரூ. 3 ஆயிரமாவது செலவாகும். இத்தனைக்கும் ஒரு நண்பர் கேமராவையும் இன்னொரு நண்பர் மைக்கையும் ஆவணப்படம் முடியும்வரை பயன்படுத்தக் கொடுத்தார்கள். கிடைத்ததை சாப்பிட்டோம்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியைப் பெற்றிருக்கிறீர்களா?
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதை ஒரு வியாபாரமாகத்தான் பார்க்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏகப்பட்ட தொண்டு நிறுவனங்கள் துப்புரவு தொழிலாளர்களுக்காக தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதை ஒரு ‘புராஜெக்ட்’ஆக காசு கொழிக்கும் தொழிலாகத்தான் பார்க்கிறார்கள். எங்களை ஒரு தொண்டு நிறுவனம் அணுகி, எடுத்தவரை எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என விலை பேசினார்கள். மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தை தனது இணையதள தலைப்பில் வைத்திருக்கும் அந்த நிறுவனத்திடம் விலைபோக நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் இதை ‘சிம்பதி’ ஆக மாற்றுவார்கள். ஆனால் நாங்கள் அரசியாக்கப் பார்க்கிறோம். மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கவே இந்த என் ஜி ஓக்கள் என்பது என் கருத்து.
ஆவணப்பட வேலை எதுவரைக்கும் வந்திருக்கிறது..?
படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இப்போது எடிட்டிங் வேலையை செய்துகொண்டிருக்கிறோம். இசைகோர்வை சேர்க்கும் பணியும் டிவிடியாக மாற்றும் பணியும் செய்ய ரூ. 30 ஆயிரம் வரைக்கும் தேவைப்படுகிறது. இசைக்கு, இசைக்கோர்வை சேர்க்கும் ஸ்டுடியோவுக்கு பணம் தர வேண்டும். அடுத்து குறைந்தபட்சம் ஆயிரம் டிவிடியாவது போட வேண்டுமென்றால் ரூ. 20 ஆயிரம் ஆகும். இதுவரைக்கும் தனிநபர்களின் உதவிகளை வைத்துத்தான் ஆவணப்பட வேலைகளைப் பார்தேன். இனியும் அப்படித்தான். தனிநபர்களின் உதவிகளை வரவேற்கிறேன், இந்தப் பணியில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறேன்.
இந்த ஆவணப்படம் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும். 16 பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆவணமாக்கியிருக்கிறோம் இதில். இதைவிட நேரத்தை குறைப்பது கடினம்தான். அதற்கும் முயல்கிறோம்.
இந்தியா முழுக்க உள்ள மலம் அள்ளும் தொழிலாளர்கள் பற்றி 15 வருடங்களாக ஆய்வு செய்து பாஷாசிங், அதை நூலாக்கியிருக்கிறார். விடியல் பதிப்பகம் அதை ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். இந்த ஆவணப் பட பயணத்தின் போது நான்கூடவே எடுத்துச் சென்றது இந்த நூலைத்தான். எனக்கு கள வழிகாட்டியாக இருந்தது இந்த நூல். ஆவணப்பட வெளியீட்டுக்கு இவரை அழைத்திருக்கிறேன். நீதிபதி அரி பரந்தாமன் போன்றவர்களையும் அழைத்து வெளியிட திட்டமிட்டிருக்கிறேன்.
திவ்யாவின் உழைப்பும் போராட்டமும் நம்பிக்கை அளிக்கிறது. ஆவணப்பட வேலைகளோடு நின்றுவிடாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிமன்றம், போராட்டங்கள் மூலமாக நீதியைப் பெற்றுத் தருவதையும் தனது பணியின் ஒரு பகுதியாக வைத்திருக்கிறார் thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக