புதன், 15 ஜூன், 2016

அமெரிக்க துப்பாக்கிச்சூடு -உமர் மதீனின் மனைவி நூர் சல்மானுக்கு முன்கூட்டியே தெரியும்!


அமெரிக்காவின் ஃபுளொரிடா மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் உள்ள ஓரினச் சேர்க்கை இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒமர் மதீனின் மனைவிக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால் அவருடைய மனைவியும் இந்த பயங்கரவாத சம்பவத்தில் சேர்க்கப்படலாம் என்று அமெரிக்க சட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஒமர் மதீனின் மனைவி நூர் சல்மானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தைப் பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்று அமெரிக்க உளவுத்துறை குழுவின் செனட் உறுப்பினர் அங்குஸ் கிங் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒமர் மதீன் மனைவி இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்றும், விசாரணையில் அவரிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது 3 மணிநேர போராட்டத்துக்குப்பின்னர், துப்பாக்கிச்சூடு நடத்திய மதீன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மதீன், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு 911 என்ற அவசர எண்ணுக்குத் தொடர்புகொண்டு தன்னை இஸ்லாமிய தீவிரவாத கும்பலுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால், அமெரிக்க போலீஸாரின் விசாரணையில் ‘இந்த சம்பவத்தில் மதீனுக்கு எந்த இஸ்லாமிய அமைப்பும் உதவியோ, அறிவுரையோ வழங்கவில்லை. மதீன் அமெரிக்காவில் பிறந்தவர் என்றும், அவர் இந்த நாட்டின் ஒரு குடிமகன் என்றும் அவர் பெற்றோர்கள் ஒரு ஆப்கான் அகதிகள் என்றும் தெரியவந்துள்ளது.
மதீன் மிகவும் மனச்சோர்வு அடைந்து, ஆத்திரத்தில் இருந்ததால் அவர் இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று அமரிக்க அதிபர் பாரக் ஒபாமா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கர சம்பவத்தின்போது, அந்த விடுதியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை மதீன் மீண்டும் துப்பாக்கியால் சுட்டு அவர்கள் இறந்ததை உறுதி செய்துகொண்டார் என்று அந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த ஏஞ்சல் கொலன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஓர்லாண்டோ வட்டார மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஏஞ்சல் கொலன் கூறுகையில், “நான் மேலே பார்த்தபோது அவர் என் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை சுட்டார். கீழே விழுந்த அவர் அருகில் நான் படுத்துக்கொண்டேன். அடுத்தது நான் தான் என்று நினைத்தேன். அவர் என்னை இரண்டுமுறை சுட்டார். அதில் ஒரு குண்டு கையிலும் மற்றொன்று இடுப்பிலும் பாய்ந்தது.” என்று கூறினார்.
“மதீன் மனதளவில் பாதிக்கப்பட்டவர் என்றும், மதீன் தன்னை அடித்ததாகவும், அவர் திருமணம் முடித்து நான்கு மாதத்தில் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும்” மதீனின் முன்னாள் மனைவி சிதார யூஸபை தெரிவித்துள்ளார்.
மதீனின் மனைவி நூர் சல்மான், தனது தாயார் இக்பால் சஹி சல்மான் கலிபோர்னியாவில் ஒரு நடுத்தர நகரில் வசித்துவருபவர். அங்கு உள்ளவர்கள் நூர் சல்மான் திருமணத்துக்குப்பிறகு ஒரே ஒரு முறைதான் அவரது தாயை சந்தித்தாகத் தெரிவித்துள்ளனர்.
நூர் சல்மானின் வீட்டருகே வசிக்கும் ராஜிந்தர் சஹல் கூறுகையில், “நூர் சல்மானின் தாயாருக்கு மதீனைப் பிடிக்கவில்லை. நூர் சல்மான் அவருடைய தாய் வீட்டுக்குச் செல்வதை மதீன் விரும்ப வில்லை.” என்று தெரிவித்தார். மேலும், அந்த சம்பவத்துக்குப்பிறகு, தான் நூர் சல்மானின் தாயாரிடம் பேசியபோது அவர் மனமுடைந்து அழுதார் என்றும் கூறினார்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: