புதன், 15 ஜூன், 2016

நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ரத் திரைப்படம், மராத்தி வரலாறு காணாத வெற்றி


நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ரத் திரைப்படம், மராத்தி திரையுலகில் வரலாறு காணாத வெற்றியடைந்திருக்கிறது. 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருக்கும் முதல் மராத்தி திரைப்படமாக புகழ் பெற்றிருக்கிறது. அவரது முந்தைய திரைப்படமான 'ஃபன்றி'-யை கண்டவர்களுக்கும், தமிழில் 'காதல்' திரைப்படத்தைக் கண்டவர்களுக்கும் இப்படம் சற்றே ஏமாற்றம் அளிக்கலாம். ஆனால் அது பிரச்சினையில்லை.
ஏனெனில், சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார்.

'ஃபன்றி'-யின் பாதிப்புகளும், 'காதல்' திரைப்படத்தின் பாதிப்புகளும், இசையில் இளையராஜாவின் பாதிப்புகளும் என பல 'பாதிப்புகளை' படம் கொண்டிருப்பது உண்மைதான். ஆனால், இவை எதுவுமே படத்தோடு நாம் ஒன்றுவதிலோ, ஒட்டுமொத்த அனுபவத்தை உள்வாங்குவதிலோ எந்த 'பாதிப்பையும்' ஏற்படுத்தவில்லை.
உதாரணமாக, நாகராஜின் மனப்பதிவில் ஆழ்ந்து பதிந்து கிடக்கிற காட்சிகளில் ஒன்று, காதலியின் பார்வையில் மனம் திறந்து, உலகம் மறந்து குத்தாட்டம் ஆடிக் களிப்பது. இது ஃபன்றியில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சாய்ரத்-இல் அதன் உச்சத்தை 'ஜிங்காத்' பாடல் தொடுகிறது. இதுவரை பார்க்காதவர்கள் கீழ்க்காணும் பாடலை பாருங்கள்.
'காதல்' திரைப்படத்திதில் இருந்த அளவிற்கு நுணுக்கமான விவரங்கள் இல்லாத போதிலும், ஏற்கெனவே கூறியது போல வணிக சினிமாவின் எல்லைகளுக்குட்பட்ட அளவில், குறிப்பிட்ட நிலப்பரப்பை போதுமான அளவிற்கு சரியாகவே நாகராஜ் பதிவு செய்கிறார்.
ஹைதராபாதில் இளம் ஜோடியினருக்கு வாழ்வளிக்கும் பெண்ணின் கதாபாத்திரம், அவர் மூலமாக தெறிக்கும் ஆழமான வசனங்கள், அதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிவுகளும், உயிரைப் பணயம் வைக்கும் பாடுகளும், உறவுச் சிக்கல்களும், வர்க்கம் மற்றும் தந்தை வழிப் பண்பாடு உருவாக்கும் முரண்பாடுகளும், உறையச் செய்து விடும் இறுதிக் காட்சிகளும்....
அர்ச்சியினதும், பர்ஷ்யாவினதுமான துயர வாழ்க்கை நம் முன் விரிந்து மனதில் தங்கி விடுகிறது. அரங்கை விட்டு வெளி வரும் தருணம், கண்ணகியினதும், முருகேசனதும், இளவரசனதும், கோகுல்ராஜினதும், சங்கரினதும், கெளசல்யாவினதுமான முகங்கள் நினைவில் எழும்பி உறைகின்றன...
துரத்துவது ஒரு கேள்விதான். 'காதல்' மற்றும் 'சாய்ரத்'தின் வெற்றியை நாம் கொண்டாட முடியமா? உண்மையில், அவை சாதி ஆணவக் கொலைகளை அம்பலப்படுத்தி சமூகத்தை உலுக்குகின்றனவா அல்லது ஆதிக்க சாதி வெறியாட்டத்தை அறிந்தும், அறியாமலும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் உண்மையில் பயத்தையும், திகிலையும், பின்வாங்குதலையும் உண்டாக்குகின்றனவா?
அப்படி இல்லையானால், முணுக்கென்றால் திரைப்படங்களை எதிர்க்கும் சமூகத்தில், பாட்டீல்களும், தேவர்களும் மேற்காணும் திரைப்படங்களுக்கு எதிராக ஏன் பெரிய எதிர்ப்பு எதனையும் வெளிப்படுத்தவில்லை? உண்மையில், அவர்கள்தான் இப்படங்களை நம்மை விட ரசிக்கிறார்களோ?
'ஃபன்றி'யில் கேமராவை நோக்கிப் பறந்த கல் போன்றதொரு கணம், அதனினும் வலிமையான காட்சிகள், சாய்ரத் போன்ற வணிக சினிமா முயற்சிகளிலும் வாய்க்காத வரை, இந்த கேள்விக்கு தெளிவான பதில் இல்லையென்றே தோன்றுகிறது.
Saravana Raja facebook

கருத்துகள் இல்லை: