செவ்வாய், 22 டிசம்பர், 2015

சிம்புவுக்கு முன்ஜாமீன் கிடையாது....கொம்பு சீவி தறுதலையாக வளர்த்த ராஜேந்தரும் குற்றவாளிதான்

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு முன் ஜாமீன் வழங்க தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது ஆபாச சொற்களுடன் கூடிய பீப் பாடல் பாடி அதனை வெளியிட்ட குற்றத்திற்காக சிம்பு, அனிருத் ஆகியோருக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால் இருவருமே கோவை போலீசார் சொன்ன தேதியில் நேரில் ஆஜராகவில்லை. இதனால் வருகின்ற ஜனவரி 2 ம் தேதி சிம்பு, அனிருத் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை

போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.
இந்த வழக்கில் நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கில் சிம்புவுக்கு முன்ஜாமீன் வழங்க பெண் வக்கீல் சங்கம் மற்றும் அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
சிம்புவின் நடவடிக்கைகள் எப்போதுமே சர்ச்சைக்குரியதாக உள்ளது என்றும், சிம்புவின் பாடல் சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினை என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. சிம்புவை இந்த வழக்கில் விசாரிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று போலீஸ் தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த வழக்கில் பெண் வக்கீல் சங்கம் இணை மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜேந்திரன், 'பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் சமூகப் பொறுப்புடன் இருக்க வேண்டும். வார்த்தையை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். திரைப்பட பாடல்கள் குழந்தைகளிடம் செல்ல கூடியவை என்பதால் எச்சரிக்கை தேவை. மேலும் இதுபோன்ற பாடல்களை எழுதும் முன் யோசிக்க வேண்டும். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் பரவுவதைத் காவல் துறை தடுக்க வேண்டும்," என உத்தரவிட்டார்
காவல்துறையினர் சிம்புவின் பீப் பாடலை ஒருமுறை முழுவதுமாக கேட்டுவிட்டு தீர்ப்பு வழங்குமாறு நீதிபதி ராஜேந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். காவல் துறையினரின் இந்த கோரிக்கையை செவிமடுத்த நீதிபதி தான் இந்தப் பாடலை ஒருமுறை கேட்டுவிட்டு தீர்ப்பு வழங்குவதாக கூறி பிற்பகலுக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.
பிற்பகலுக்குப் பின் சென்னை உயர் நீதி மன்றத்தில் மீண்டும் தொடங்கிய விசாரணையில், சிம்பு முன்ஜாமீன் கோரிய வழக்கை ஜனவரி 4 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் சிம்புவின் முன்ஜாமீன் மனுவுக்கு பதில்மனு ஒன்றை போலீஸ் தாக்கல் செய்யவும், ஜனவரி 2 ம் தேதி சிம்பு ஆஜராக வேண்டும் என்பதன் கால அவகாசத்தை நீட்டிக்குமாறும் போலீஸ்க்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more at://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: