புதன், 23 டிசம்பர், 2015

கமிஷன் அதிகரிப்பால் அலறும் கான்ட்ராக்டர்கள் இயற்கை சீற்றங்களாலும் அடிக்குது யோகம்



தேனி: ரோடு, கட்டுமான பணிகளுக்கு 45 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க வேண்டி உள்ளதால், ஒப்பந்த பணிகளை எடுக்க விருப்பம் இல்லாமல் கான்ட்ராக்டர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். இயற்கை சீற்றங்கள் மூலம் பேரழிவு ஏற்பட்டால் கூட, அங்கு நடக்கும் வளர்ச்சிப்பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் பெரிய அளவில் ஆதாயம் பார்த்து விடுகின்றனர் என கான்ட்ராக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் பல கோடி ரூபாய் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளதாக அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன. குறிப்பாக மழைசேதத்திற்கு மத்திய அரசு 1980 கோடி ரூபாய் ரூபாய் ஒதுக்கி உள்ளது. தமிழக அரசு மத்திய அரசிடம் கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்கிறது. இந்த நிதி கிடைத்து விட்டால், அத்தனை பேருக்கும் வீடுகள் கிடைக்கப்போகின்றன. தமிழகம் முழுவதும் ரோடுகள் ஒளிரப்போகின்றன என செய்திகள் வெளிவருகின்றன.ஆனால் இந்த நிதியில் மக்களுக்கோ, கான்ட்ராக்டர்களுக்கோ எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளுமே வருவாய்
அள்ளிக் குவிக்கப்போகின்றனர்.
குறிப்பாக தற்போதைய நிலையில் தங்களை விட்டால் போதும் என்ற நிலையில், தப்பித்து ஓடும் நிலையில் கான்ட்ராக்டர்கள் உள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு கான்ட்ராக்டர்கள் கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை பணிகள் அனைத்தையும் யாருக்கு கொடுப்பது என்பதை அமைச்சர்களே தீர்மானிக்கின்றனர். எந்த பணிகளை கான்ட்ராக்ட் எடுத்தாலும் அதில் அமைச்சர்களுக்கு 20 சதவீதம் வழங்க வேண்டும். இதில் 5 சதவீதம் “மேலே” தர வேண்டும், 8 சதவீதம் “உள்ளூரில் செலவாகும்” என கேட்டு வாங்கிக் கொள்கின்றனர்.பலநிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கு எல்லாம் சேர்த்து மொத்தம் 15 சதவீதம் வழங்க வேண்டும். ரெக்கவரி பணம் 10 சதவீதம் கட்ட வேண்டும். இதில் வருமான வரி 2 சதவீதம், விற்பனை வரி 2 சதவீதம், லேபர் வெல்பர் பண்ட் ஒரு சதவீதம், டெபாஸிட் 3 சதவீதம், டெண்டர் செலவு 3 சதவீதம் ஆக 56 சதவீதம் போக மீதி 44 சதவீதத்தில் எப்படி பணிகளை முழுமையாகவும், தரமாகவும் மேற்கொள்ள முடியும். இந்த கமிஷன் தொகையை டெண்டர் முடிவதற்கு ஒரு மாதம் முன்னரே வழங்கி விட வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே டெண்டர் கிடைக்கும் பில் முறைப்படி பாஸ் ஆகும். இல்லாவிட்டால் எடுத்தகான்ட்ராக்டருக்கு பணமே வராது.

நகராட்சி, பேரூராட்சிகளை பொறுத்தவரை 'பேக்கேஜ்' நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஒரு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் முழுவதற்கும் பணிகளை ஒரே ஒப்பந்ததாரருக்கு

வழங்குவது. இதிலும் எல்லா நடைமுறைகளையும் கடந்து பணிக்காக வரும் பணம் 50 சதவீதம் கூட கிடையாது. தவிர பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகளில் தலைவராக இருப்பவர் தங்களது பினாமி பெயர்களிலும், உறவினர்கள் பெயரிலும் ஒப்பந்தங்களை எடுத்துக் கொள்கின்றனர்.தலைவரே ஒப்பந்த பணிகளை எடுத்து செய்தாலும், இதில் தலைவர் கமிஷன் 15 சதவீதம், அலுவலக செலவு 10 சதவீதம், வருமான வரி, விற்பனை வரி, லேபர் வெல்பர் பண்ட், டெபாசிட், டெண்டர் செலவு எல்லாம் போக மீதம் 50 முதல் 55 சதவீதம் ரூபாய்க்கு தான் வேலை செய்ய முடியும். இந்நிலையில் இந்த சூழலை மற்ற கான்ட்ராக்டர்காரர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும். இதில் பணிகளில் தரக்குறைவு ஏற்பட்டால் நடவடிக்கை வேறு பாயும். இதனால் பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி 90 சதவீத கான்ட்ராக்டர்கள் பணிகளை எடுக்காமல் ஓட்டம் பிடிக்கின்றனர்.அமைச்சருக்கும், உள்ளூர் தலைவர்களுக்கும் வேண்டிய அ.தி.மு.க.,வினர் மட்டுமே பணிகளை தற்போது செய்து வருகின்றனர். இவ்வாறு கூறினர்.dinamalar.com

கருத்துகள் இல்லை: