திமுக தலைவர் கலைஞர் 14.11.2015 சனிக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,கேள்வி
:- பணியிலே இருக்கும்போது இறந்து விடும் அரசு அலுவலர் குடும்பத்தின்
உடனடித் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த முன்பணம் 5000 ரூபாய் என்பதை 25
ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?
கலைஞர் :- இந்தத்
தொகை அரசு அலுவலர் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஒரு
இலட்சம் ரூபாயிலிருந்து வழங்கப்படுவதாகும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர்
மாதத்திலேயே சட்டப்பேரவையில் நிதி அமைச்சரால் தெரிவிக்கப் பட்ட போதிலும்,
அதற்கான அரசாணைதான் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அ.தி.மு.க. அரசி னால்
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த அரசில் எதற்கு முனைப்பும்
வேகமும் காட்டு கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறட்டுமா?
நெல்லை மாவட்டத்தில், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பிளாட் எண்
B-65
முதல் B-76 வரையிலும், சர்வே எண்: 1641 pt, 1903 pt, 1904 pt
(கங்கைகொண்டான் கிராமத்தில்), 36.00 ஏக்கர் பரப்பளவில், தாமிரபரணி ஆற்றில்
இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் நீரையெடுத்து அமெரிக்காவின் “பெப்சி”
நிறுவனத்திற்கு தண்ணீர் மற்றும் குளிர் பானங்கள் தயாரிக்க 20-01-2014 இல்
“பெப்சி” குளிர்பான நிறுவனம் அனுமதி கேட்டது. இதற்கு பதினைந்தே நாளில்,
தமிழக அரசு 05-02-2014 அன்று அமெரிக்காவின் “பெப்சி” நிறுவனத்திற்கு வரலாறு
காணாத வேகத்தில் அனுமதி அளித்து, 99 ஆண்டுகளுக்கு 36 ஏக்கர் நிலம் ஒதுக்கி
ஒப்பந்தம் போட்டுள்ளது. தற்போது பெப்சி நிறுவனம் அங்கு கட்டிட வேலைகளை
வேகமாகச் செய்து வருகிறது. கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் “பெப்சி”
நிறுவனத்தைத் துவக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. தமிழகத்திற்குள் வந்த
இவர்கள் ஆரம்பத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்புப் பொருளா தார
மண்டலத்தில் நிலம் கேட்டார்கள். ஆனால் அங்கு மக்களின் எதிர்ப்புக் காரணமாக
அந்தத் திட்டத்தைக் கைவிட்டனர். தற்போது சத்தமில்லாமல் கங்கைகொண்டானில் 36
ஏக்கர் நிலத்தை வாங்கி பூமிபூஜை போட்டு வேலைகளை வேகமாகச் செய்து
வருகின்றனர். அரசு மதிப்பீட்டின்படி சிப்காட் வளாகத்தில் உள்ள 36 ஏக்கர்
நிலத்தின் மதிப்பு ரூ.5,40,00,000/- (ஐந்து கோடியே நாற்பது இலட்சம்
ரூபாய்). ஆனால் சந்தை மதிப்பின்படி இந்த 36 ஏக்கர் நிலத்தின் மதிப்பு
பதினைந்து கோடி ரூபாய் ஆகும். இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த
நிலத் திற்கு அமெரிக்க “பெப்சி” குளிர்பான நிறுவனம், குத்தகைத் தொகையாக
ஏக்கர் ஒன்றுக்கு, ஒரு ரூபாய் வீதம், 36 ஏக்கருக்கும், ஆண்டு ஒன்றுக்கு
வெறும் முப்பத்தி ஆறு ரூபாய் மட்டுமே என 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு
விட்டிருக்கிறார்கள். இதிலே வேடிக்கை என்னவென்றால், 98 ஆண்டு களுக்குப்
பிறகும்; 99ஆம் ஆண்டில், குத்தகைத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய்
வீதம் ஆண்டுக்கு 72 ரூபாய் குத்தகை; 36 ஏக்கருக்கு செலுத்த வேண்டும் என
பெப்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ‘மாபெரும்' ஒப்பந்தம் போட்டுள்ளது.
பதினைந்து
கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு மேலான காலத்
திற்கு குத்தகைக்கு அமெரிக்க “பெப்சி” நிறுவனம் செலுத்தும் குத்தகைத் தொகை
என்பது வெறும் ரூ.3,600/= (மூவாயிரத்து அறுநூறு ரூபாய்) மட்டுமே ஆகும்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு பல்வேறு
நீரேற்றும் பம்புகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர், நெல்லை கங்கை
கொண்டான் சிப்காட் வளாகத்தில் அமையும் “பெப்சி” குளிர்பான ஆலைக்கு
வழங்கப்படும். தினமும் 15 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் வழங்க அரசுடன்
ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது படிப்படி யாக ஒரு கோடி லிட்டர் வரை கூட
அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் வாரம் ஒரு நாள் மட்டுமே குடிதண்ணீர்
பெற்று வரும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட
மாநகராட்சிப் பகுதிகளுக்கும், தாமிரபரணி ஆற்றின் மூலம் சுற்றியுள்ள பல்வேறு
கிராமங்களுக் கும் கிடைத்து வரும் குடிநீரும், பல்வேறு கூட்டுக்
குடிநீர்த் திட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளன.
பெப்சி
குளிர்பான நிறுவனம் ஒரு லிட்டர் அக்வாபினா குடிநீர் பாட்டிலை ரூ.20/=
ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர். ஒரு லிட்டர் குளிர் பானத்தை ரூ.60/=
ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர். வரையறை அற்ற இந்த நீர்வளக் கொள்ளையால்
தாமிரபரணி மூலம் நெல்லை -தூத்துக்குடியில் விவசாயம் நடந்து வரும் 86,000
ஏக்கர் விவசாய நிலமும் கடுமையாகப் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே
தாமிரபரணி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையால் நீர்ப்பிடிப் புப் பகுதிகள்
குறைந்து போய் வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து
போன நிலையில், பெப்சி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆற்று நீரை தினமும் பல
லட்சம் லிட்டர் அளவுக்கு உறிஞ்சினால், தாமிரபரணியை நம்பி வாழும்
விவசாயிகளின் எதிர்காலம் அழிந்தே போய் விடும். இதற்கான ஒப்பந்தத்தைத்தான்
அ.தி.மு.க. அரசு பதினைந்தே நாட்களில் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில்
முதலமைச்சர் 110வது விதியின் கீழ் பேரவையில் செய்த அறிவிப்புகள் எல்லாம்
நாட் கணக்கில் அல்ல, மாதக்கணக்கில் தூங்குகின்றன. விவசாயத்தையும்,
குடிநீர்த் தேவையையும் காவு கொடுத்து, “பெப்சி”யைக் கைதூக்கி விடும் ஆட்சி
அல்லவா தமிழகத்திலே நடைபெறுகிறது!
கேள்வி
:- அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரே பொது நிகழ்ச்சி ஒன்றில், அவருடைய கட்சியைச்
சேர்ந்த நகரத் தலைவர் ஒருவர் 100 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருப்பதாகச்
சொல்லியிருக்கிறாரே?
கலைஞர் :-
அவர் அதை மட்டுமா சொல்லி யிருக்கிறார்? ஏடுகளில் வந்த செய்திப்படி, அந்த
அ.தி.மு.க. அமைச்சர், “ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க முடியாமல், அவர் மீது
சொத்துக் குவிப்பு வழக்குப் போட்டு முடக்கப் பார்க்கிறார்கள். ஜெய
லலிதாவுக்கு 1000 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகப் பிரச்சாரம்
செய்கிறார்கள். இன் றைக்கு 100 கோடி ரூபாய் சொத்து என்பது சர்வ சாதாரணம்.
இந்த மேடையில் இருக்கும் நகரத் தலைவர் அமுதாவுக்கு 100 கோடி ரூபாய் சொத்து
இருக்கிறது. பாலசுப்பிரமணி, மதியழகனுக்கு பல கோடி ரூபாய் சொத்து
இருக்கிறது. எங்களுக்கே இவ்வளவு சொத்து இருக்கும் போது ஜெயலலிதா வுக்கு
இருக்கக் கூடாதா?” என்று பேசியதாகச் செய்தி வந்துள்ளது. அமைச்சரின் இந்தத்
தன்னிச் சையான வாக்குமூலத்தை வருமான வரித் துறையும், புலனாய்வுத் துறையும்
குறிப்பெடுத்துக் கொண்டு, இந்தத் தொகை எவ்வாறு வந்தது என்பதைப் புலன்
விசாரணை செய்து கண்டறிய வேண்டும். மேலும் முதல் அமைச்சரின் சொத்து பற்றி
அவரது அமைச்சரவையிலே பணியாற்றும் ஒருவரின் ஒப்புதலை அலட்சியமாகக் கருதாமல்
மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய சொத்துக் குவிப்பு பற்றி,
தமிழகத்திலே உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் விரிவாக எடுத்துச்
சொல்லியும், அதற்கு இதுவரை உரியவர்களிட மிருந்து பதிலேதும் இல்லை.
எதிர்க்கட்சிகள் எடுத்துரைத்ததெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகி
விட்டதா?
கேள்வி
:- புதுக்கோட்டையில் அமைச்சர் ஒருவர் சமூக அமைதியை சீர்குலைக்க முயலும்
வகையில் கருத்துத் தெரிவித்து, அதன் விளைவாக போராட்டம் எல்லாம்
நடைபெற்றிருக்கிறதே?
கலைஞர் :- ஏடுகளில்
எல்லாம் அந்தச் செய்தி பெரிதாக வந்துள்ளது. ஆனால் அ.தி.மு.க. தலைமை,
குறிப்பிட்ட ஒரு பிரிவினரை இழிவு படுத்திப் பேசிய அந்த அமைச்சர் மீது
நடவடிக்கை எடுக்காமல், போராடிய தரப்பினரை கைது செய்த தோடு, அவர்களுக்குத்
தலைமை வகித்த ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதே நடவடிக்கை எடுத்துள்ளது.
இதிலிருந்து ஒரு தரப்பினரை தரக் குறைவாகப் பேசிய அந்த அமைச்சருக்கு
ஆளுங் கட்சியும், இந்த அரசும் ஆதரவு தெரிவிக்கிறதோ என்ற சந்தேகம்தான்
அனைவருக்கும் ஏற் பட்டுள்ளது.
கேள்வி
:- அரசின் பல்வேறு துறைகளுக் கிடையே நல்லுறவு இல்லாத காரணத்தால்
முக்கியமான பல கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக “இந்து” ஒரு
பக்கத்திற்கு செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறதே?
கலைஞர் :- “A
number of key infrastructure projects are in a limbo due to lack of
coordination among various Government Departments. Residents who have
been waiting for ages to avail of these facilities, are a disappointed
lot - As Departments pass the buck, projects languish” என்ற தலைப்பில்
முழுப் பக்க அளவுக்கு அந்த ஆங்கில நாளிதழ் “இந்து” இந்தச் செய்தியினை
புள்ளி விவரங்களோடு அளித்துள்ளது. அந்தக் கட்டுரையில் திராவிட முன்னேற்றக்
கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒரு சில திட்டங்கள் முடிக்கப்படாமல்
தாமதப்படுத்தப் பட்டிருப்பது பற்றி புகைப்படங்களோடு செய்தி
வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் அந்தத் தாமதம் எத்தனை நாட்களாக, என்ன
காரணங்களுக்காக இந்த ஆட்சியினரால் செய்யப்படுகிறது என்பது பற்றியும்
விரிவாக எழுதியிருக்கிறார்கள். தியேட் டர்கள் விவகாரத்திற்கே
விளக்கமளிக்காதவர்கள், “இந்து”வின் இந்தக் கட்டுரையைப் பார்த்தா
கவலைப்படப் போகிறார்கள்?
கேள்வி
:- “இந்தியா டுடே” வார இதழிலும், “தி இந்து” நாளேட்டிலும் அ.தி.மு.க.
ஆட்சி பல பிரச்சினைகளில் அகில இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது
என்பதை விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்களே?
கலைஞர் :-
இதைப் பற்றி பல கட்சிகளின் தலைவர்களும், கழகத்தின் பொருளாளர் தம்பி
ஸ்டாலினும் ஏற்கனவே எடுத்துக்காட்டியிருந்த காரணத்தால் நான் கூற
வேண்டாமென்று இருந்தேன். இந்தியா டுடே வார இதழ் எழுதும்போது, “நவீன்
பட்நாய்க் தலைமையிலான ஒடிசா மாநிலம் 16வது நிலையிலிருந்து 5வது
இடத்திற்கும், அஸ்ஸாம் மாநிலம் 19வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கும்
வந்துள்ளது. தமிழ்நாடு இந்த ஆண்டு 20வது இடத்திற்கு வந்துள்ளது. 2003ஆம்
ஆண்டுக்குப் பிறகு தமிழகத்திற்கு இப்படிப்பட்ட ஒரு தாழ்வு நிலை எப்போதும்
ஏற்பட்டதில்லை. வேளாண்மையில் 21வது இடத்திற்கும்; கல்வியில் 13வது
இடத்திற்கும், கட்டுமானப் பணியில் 17வது இடத்திற்கும் தமிழகம் வந்துள்ளது.
வேளாண்மை யைப் பொறுத்து, 9வது இடத்திலே இருந்த மத்தியப் பிரதேசம் முதல்
இடத்திற்கு வந்துள்ளது. ஆனால் தமிழ்நாடு இந்த ஆண்டு 21வது இடத்திற்கு
வந்துள்ளது. கட்டுமானத் துறையை எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டு 7வது
இடத்திலே இருந்த அஸ்ஸாம் இந்த ஆண்டு முதல் இடத்திற்கு வந்துள்ளது.
கட்டுமானத் துறையில் 2013ஆம் ஆண்டு 7வது இடத்திலே இருந்த தமிழ்நாடு, கடந்த
ஆண்டு 11வது இடத்திற்கு வந்து, இந்த ஆண்டு 17வது இடத்திற்குச்
சென்றுள்ளது.” இந்தப் புள்ளி விவரங்களை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
அதுபோல
13-11-2015 அன்று "இந்து" ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழகம் தொழில் முதலீட்டில் 12வது இடத்திலே இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
"ஏ, தாழ்ந்து போய்க் கொண்டிருக்கும் தமிழகமே!" என்று வேதனையோடு
விளிப்பதைத் தவிர, வேறு வழியில்லை!
கேள்வி :- சென்னை மாநகராட்சியில் பல பணிகள் டெண்டரோ ஏலமோ இல்லாமல் தனிப்பட்ட முறையிலே தரப்படுவதாகக் கூறப் படுகிறதே?
கலைஞர் :- உண்மைதான்!
கடந்த வாரம் 6-11-2015 அன்று வெளி வந்த "தி இந்து" ஆங்கில நாளிதழில்
“Road Contracts given without bids - This is in violation of rules;
re-laying will be taken up by those who worked on 194 roads earlier”
(ஏலம் இல்லாமல் சாலைப் பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றன - இது
விதிகளை மீறிய செயலாகும்; ஏற்கனவே 194 சாலைப் பணிகளை நிறைவேற்றியவர்களே
இந்தப் பணி களையும் மேற்கொள்வார்கள்) என்று “இந்து” எழுதியுள்ளது. அந்தச்
செய்தியில் 59 சாலைப் பணிகளை டெண்டர் கோரப்படாமல், விதிகளை மீறி, சென்னை
மாநகராட்சி ஒப்படைக்க முடிவு செய்துள்ளது என்றும், உலக முதலீட்டாளர்
மாநாட்டின் போது 194 சாலைப் பணிகளை நிறைவேற்றிய ஒப்பந்தக்காரர்களிடமே
தற்போது 48 கோடி ரூபாய்க்கான பணிகள் ஒப்படைக்கப்பட விருப்பதாகவும்
கூறப்பட்டுள்ளது. பேருந்து சாலைகளைப் புதுப்பிக்க அரசு வழங்கிய நிதியில்
சேமிப்பு உள்ளதால், அந்தப் பணியினைச் செய்ய புதிதாக டெண்டர் கோர
அவசியமில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்தபோதிலும்,
அடிப்படை விதிகளில் இவ்வாறு செய்யக் கூடாது என்று உள்ளது. இப்படிச்
செய்வதால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படுமென்றும் அந்த நாளேடு
எழுதியுள்ளது. ஆனால் விசாரித்தபோது, சென்னை மாநகராட்சி அளித்துள்ள
விளக்கத்தில், இந்த 59 சாலைப் பணிகளுக்கான கோப்பு அரசின் ஒப்புதலுக்காக
அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அரசு ஒப்புதல் பெற்ற பிறகுதான்,
சென்னை மாநகராட்சியாரிடம் இந்தப் பணிகளை வழங்கப் போகிறது என்ற உண்மை
தெரியும். அ.தி.மு.க. ஆட்சியில், விதிமுறைகளுக்கும் விடை கொடுத்து
விட்டார்கள்; நிதி இழப்பு குறித்தும் எவ்வித நெருடலும் இல்லை. எப்படியோ
அவரவர் பைகளை நிரப்பிக் கொண்டால் சரி என்று கடைசிக் கட்டப் பயணம் வேகமாய்
நடந்து கொண்டிருக்கிறது!
இவ்வாறு கூறியுள்ளார்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக