தில்லி கொடுத்த அடியை விட இந்துத்துவ கும்பலுக்கு பீகார் கொடுத்த அடி அதிகம். கிட்டத்தட்ட முதுகு தோலை உரித்து அனுப்பியுள்ளனர். இது ஓட்டுக்கட்சித் தேர்தல் என்கிற பித்தலாட்ட நாடகத்தில் கிடைத்த தோல்வி தான். என்றாலும் இத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து எப்படியும் வென்றே தீர வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா காட்டிய பிரயத்தனங்களை பார்த்தால் காவிக் கும்பலின் இரத்த வெறியைப் புரிந்து கொள்ள முடியும்.
பாரதிய ஜனதா அமைத்த தேர்தல் வியூகங்களில் அதன் அல்லக்கைகளாக செயல்படும் முதலாளிய ஊடகங்களுக்கு முக்கியமான பங்கு இருந்தது. மாட்டுக்கறி ஆகட்டும், பாகிஸ்தானாகட்டும் – இல்லாத “தேசிய விவாதங்களை” இருப்பதைப் போலவே ஊதிப் பெருக்கிக் காட்டியதில் இவ்வூடகங்களுக்கு பெரும் பங்கு இருந்தது.
ஆரம்ப கட்ட தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது பாரதிய ஜனதா முன்னிலை பெற்றதாக குதூகலித்த முதலாளித்துவ ஊடகங்கள், பின்னர் நிதிஷ் – லாலு கூட்டணியின் வெற்றி உறுதிப்பட்ட போது தோசையை அப்படியே திருப்பிப் போட்டனர். பாரதிய ஜனதா கூட்டணி கணக்குகளை தவறாக போட்டு விட்டது என்றனர் – சிலர் வளர்ச்சிக்கும் சாதிக்கும் இடையே நடந்த சண்டையில் சாதி வென்றது என்று தீர்ப்பெழுதினர் – வேறு சில ஊடகங்களோ பாரதிய ஜனதாவின் காவி செயல்திட்டங்களை இடித்துரைப்பது போல் சுட்டிக்காட்டி விட்டு, இனிமேலாவது இந்துத்துவத்தை விடுத்து வளர்ச்சியில் கவனம் செலுத்தட்டும் என்று செல்லமாக தட்டிக் கொடுத்தனர்… இந்த ’ஆய்வுகளின்’ தராதரம் என்ன?
ஐந்து கட்டங்களாக அறிவிக்கப்பட்ட பீகார் சட்ட மன்றத் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பிரச்சாரங்களில் வழக்கம் போல் பாரதிய ஜனதா “வளர்ச்சியைத்” தான் முன்னிறுத்தியது. என்றாலும் தேர்தல் பிரச்சாரங்கள் செல்லச் செல்ல தனது டீக்கடையில் வாயால் சுட்ட வடைக்கு வாடிக்கையாளர் ஆதரவு போதிய அளவு இல்லை என்பதை மோடி உணர்கிறார். ஏற்கனவே மோடியின் பாணியில் பீகாரின் வளர்ச்சி நாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்த நிதிஷ் குமாரோடு ‘வளர்ச்சி’ விசயத்தில் தன்னால் போட்டி போட முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் மோடி, ஒரு கட்டத்தில் ரூட்டை மாற்றுகிறார்.
”ஒரு வேளை ஏதேனும் விபரீதமாக நடந்து, பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா தோற்றால்…. வெற்றியும் தோல்வியும் வேண்டுமானால் பீகாருக்குள் இருக்கும்.. ஆனால், கொண்டாட்டங்கள் பாகிஸ்தானில் நடக்கும். பாரதிய ஜனதாவின் தோல்வியை பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள்” என்றார் அமித் ஷா. பாரதிய ஜனதாவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பீகார் தேர்தலை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடக்கும் போரைப் போல் வருணித்தனர். “இந்தியாவின் வரலாற்றிலேயே பாகிஸ்தானும் சீனாவும் கண்டு அஞ்சும் ஒரே இந்தியப் பிரதமர் மோடி தான்” என்றார் சுஷீல் மோடி.
அதாவது இந்தியனாக இருப்பதன் ஒரே அத்தாட்சி பாரதிய ஜனதாவுக்கு ஓட்டுப் போடுவது தான் என்பதைப் போல் பிரச்சாரங்களைக் கொண்டு சென்றனர். இதன் இன்னொரு முனையாக, இந்திய இசுலாமியர்கள் எல்லோரும் மனதால் பாகிஸ்தானியர்கள் என்றும், இவர்களே பாரதிய ஜனதா வெல்லக் கூடாது என்பவர்கள் என்றும், இசுலாமியர்கள் லாலு பிரசாத் மற்றும் நிதிஷ் கூட்டணியை ஆதரிக்கிறார்கள் என்றும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றனர். வழக்கமாக இந்துத்துவ விசமப் பிரச்சாரங்கள் வெளிப்படும் சந்தர்பங்களில் எல்லாம், ‘இது உதிரி இந்து அமைப்புகளின் வேலை’ என்று சமாளிக்கும் உத்தியைப் பின்பற்றியவர்கள் இந்த முறை நேரடியாக களமிறங்கினர். இந்தப் பிரச்சாரங்களை மோடியே முன்னின்று முடுக்கி விட்டார்.
அக்டோபர் 26-ம் தேதி பக்சார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, தலித்துகள், மகா தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டில் இருந்து ஐந்து சதவீதத்தை திருடி முசுலீம்களுக்கு வழங்க லாலுவும் நிதிஷும் சதி செய்வதாக குற்றம் சாட்டினார். இன்னொரு தேர்தல் பிரச்சாரத்தின் போது, “ஓ யதுவன்ஷிகளே.. நீங்கள் உங்கள் உழைப்பால் கொண்டு வந்த வெண்மைப் புரட்சியை (பால் உற்பத்தி) விஞ்சும் வகையிலான பிங்க் புரட்சியை (மாட்டுக்கறி உற்பத்தி) ஏற்படுத்த சதி நடக்கிறது… நீங்கள் மாட்டுக்கறி தின்பவர்கள் என்கிறார் லாலு” என்று பேசி லாலுபிரசாத் யாதவுக்குப் பின் உள்ள யாதவ சாதி வாக்குகளைக் கவர முசுலீம்களுக்கு எதிராக யாதவர்களை தூண்டி விட்டுப் பார்த்தார்.
தலைவனின் உள்ளக் குறிப்பை அறிந்த மாநில பாரதிய ஜனதா கட்சியினர் இதை அப்படியே வளர்த்தெடுத்தனர். கோமாதாவை மையமாக வைத்து தீவிரமாக போஸ்டர் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். இந்தப் போஸ்டர்கள் சமூகத்தில் ஒருவிதமான முறுகல் நிலையை தோற்றுவிக்கும் நிலைக்குச் சென்ற பின்னும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை; கடைசியில் லாலு நிதிஷ் கூட்டணியின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்ட பின் நடவடிக்கை எடுக்க முன்வந்த தேர்தல் கமிஷன், “இனிமேல் இரண்டு தரப்பிலும் போஸ்டர் அடிப்பதற்கு முன் தன்னிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்” என்கிற ’நடுநிலைத் தீர்ப்பு’ ஒன்றை வழங்கியது.
பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே பீகாரைச் சுற்றியுள்ள இந்தி பேசும் மாநிலங்களில் தாத்ரி சம்பவத்தை முன்வைத்து கோமாதா அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்தது என்பதே உண்மை. பிகார் தேர்தல் பிரச்சாரத்திற்குள் கோமாதாவை இரண்டாம் கட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் இழுத்து வந்த பின் அதற்கு பதிலளித்துப் பேசிய லாலு பிரசாத் யாதவ், ”முசுலீம்கள் மட்டுமா மாட்டுக்கறி தின்கிறார்கள்? ஏழை இந்துக்கள் கூடத் தான் மாட்டுக்கறி தின்கிறார்கள்” என்றார். உடனே களமிறங்கிய மோடி “லாலுவின் உணவுத் தட்டில் கோமாதா கறி இருப்பதாக” யாதவர்களிடம் நீலிக்கண்ணீர் வடித்தார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் கோமாதா அரசியல் பீகாரிகளிடம் செல்ஃப் எடுக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று பீறாய்ந்து வரும் பாரதிய ஜனதாவின் அல்லக்கை ஊடகங்கள், இதற்கு வண்ண வண்ணமாக ஏராளமான காரணங்களைக் கற்பித்து வருகின்றனர். இந்துத்துவம் சாதியிடம் தோற்றுப் போனது என்பதில் துவங்கி, நிதிஷ் லாலு போன்ற வட்டார பெரும் புள்ளிகளுக்கு எதிராக உள்ளூர் அரசியல்வாதி எவரையும் முன்னிறுத்தாமல் மோடியை முட்டுச் சந்துக்குள் அழைத்து வந்து சாணியடி வாங்கிக் கொடுத்து விட்டார் அமித் ஷா என்பது வரை இந்த ஆய்வுக் கட்டுரைகள் வித விதமான கோணங்களை முன் வைக்கின்றன.
இவற்றில் கடுகளவு உண்மை பொதிந்திருப்பது உண்மை தானென்றாலும், அடிப்படையில் கோமாதாவை பால் கொடுக்கும் மிருகமாக யாதவர்கள் பார்த்தார்கள் என்பதைத் தாண்டி அதன் மேல் பார்ப்பனிய ”காருண்யம்” ஏதும் அவர்களுக்கு இல்லை. இதுதான் உண்மை. இசுலாமியர்கள் மட்டுமே கசாப்புத் தொழில் செய்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை என்பதைத் தாண்டி, வயதான கோமாதாக்களைப் பராமரித்து சோறு போடும் அளவுக்கு மற்ற இந்திய விவசாயிகளைப் போல பீகாரின் யாதவர்களுக்கும் வாய்ப்பில்லை.
தாங்கள் வளர்க்கும் மாடுகள் பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் ஏதோவொரு விலைக்கு அடிமாட்டுக்கு அனுப்பி அதில் கிடைக்கும் தொகையில் புதிய கன்றுக் குட்டிகள் வாங்குவதை யாதவர்கள் பாவமாக நினைப்பதில்லை – அது ஒரு இயல்பான பொருளாதார சுழற்சி. இதன் காரணமாகவே ”மாடுகளைக் கொல்றாங்களே” என்கிற பாரதிய ஜனதாவின் கோமாதா அரசியல் பீகாரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பீகார் மட்டுமல்ல வேறெங்குமே இந்தப் பிரச்சாரங்கள் செல்லுபடியாவதற்கான முகாந்திரங்களே இல்லை.
அடுத்ததாக பாரதிய ஜனதாவின் முசுலீம்கள் – பாகிஸ்தான் நச்சுப் பிரச்சாரங்கள் நைந்து போவதற்கான எல்லா அடிப்படைகளையும் தன்னளவிலேயே கொண்டிருந்தன. சுமார் 14 சதவீத முசுலீம் மக்கள் தொகை உள்ள பீகாரில் இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்குமான முரண்பாடுகள் பெரியளவில் இருந்ததில்லை என்பதோடு இந்துத்துவ புரவலர்களான பனியா முதலாளிகளோடு போட்டி போடும் அளவுக்கு முசுலீம் வர்த்தகர்கள் பிகாரில் செல்வாக்கு மிகுந்தவர்களாகவும் இல்லை. அப்படியே இருந்தாலும் குஜராத் போன்றதொரு கலவரத்தை ஏற்பதற்கு மக்களும் தயாராக இல்லை. எனவே முசுலீம்கள் மீதான வெறுப்புணர்வை தோற்றுவிக்க பீகாரில் மோடி செய்த பிரச்சாரங்கள் வழுக்கைத் தலையர்களிடம் சீப்பு விற்ற கதையாக முடிந்தது.
இன்னொரு பக்கம் லாலுவும் நிதிஷ் குமாரும் தமக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. இட ஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதென்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் சொன்னதை தனது தேர்தல் பிரச்சார மேடைகளில் சரியாக பயன்படுத்திக் கொண்ட லாலு பிரசாத் யாதவ், அக்கூட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர் கோல்வால்கர் எழுதிய ஞான கங்கை நூலை உயர்த்திக் காண்பித்து, ”இதோ பாரதிய ஜனதாவின் பைபிள் எனது கைகளில் உள்ளது – இதில் இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று எழுதியுள்ளது” என்று ஏராளமான உண்மைகளை போட்டுடைத்தார்.
இந்தப் பிரச்சாரம் நன்றாக வேலை செய்தது. உடனடியாக முட்டுக் கொடுக்க முன்வந்த பாரதிய ஜனதா, “ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தும் தமது கருத்தும் இவ்விசயத்தில் ஒன்றல்ல” என்று சமாளிக்கப் பார்த்தது. “அப்படியென்றால், கோல்வால்கரின் ஞான கங்கை நூலை தீயிட்டுக் கொளுத்த தயாரா?” என்று பாரதிய ஜனதாவைப் பார்த்து லாலு சவால் விட, காக்கி டவுசர் எலிகளுக்கு ஓடி ஒளிய இருந்த எல்லா வாய்ப்புகளும் அடைபட்டுப் போயின.
ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதாவின் இடவொதுக்கீட்டுக்கு எதிர் அரசியலை லாலு தோண்டித் துருவிக் கொண்டிருந்த அதே சமயம், நிதிஷ் இன்னொரு முனையில் பாரதிய ஜனதாவின் குஜராத் பிரச்சார உத்தியை அதற்கு எதிராகவே பயன்படுத்திக் கொண்டிருந்தார். லாலுவின் முந்தைய ஆட்சியைக் காட்டாட்சி என்கிற மோடியின் பிரச்சாரத்திற்கு பதிலளித்த நிதிஷ் குமார் “அது பீகாரிகளுக்கு எதிரான பஹாரிகளின்(வெளியாட்களின்)” சதி என்றார். ஒட்டுமொத்த பாரதிய ஜனதா கும்பலையும் ‘பஹாரிகள்’ என்று கட்டமைப்பதில் நிதிஷ் ஓரளவு வெற்றியும் பெற்றார்.
இவையனைத்தையும் கடந்து விலைவாசியும், வேலையின்மையும், விவசாயத்தின் தோல்வியும் போட்டு வாட்டிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலத்திற்குள் வந்து மாட்டிக் கொண்ட நம்பிக்கைத் துரோகியின் நிலையில் தான் பாரதிய ஜனதா இருந்தது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடியை சர்வரோக நிவாரணியாக முன்னிறுத்தி நாடெங்கும் பிரச்சாரம் செய்தனர் இந்துத்துவ கும்பல். இந்தப் பிரச்சாரம் பீகாரில் சிறப்பாகவே எடுபட்டிருந்தது. அப்போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் (கருப்புப் பணத்திலிருந்து தலைக்கு பத்து லட்சம் உட்பட) எதுவும் நிறைவேறாத நிலையில் மீண்டும் ஒரே ஆண்டில் மோடியை இறக்கியுள்ளனர் பாரதிய ஜனதா கட்சியினர். கிராமத்து ஆலமரத்தடியில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவன் கூட ஒரு முறை ஒரு ஊருக்கு வந்தால், அடுத்து சில பல ஆண்டுகள் அதே ஊருக்குத் தலை வைத்துப் படுக்க மாட்டான் – சில்லறை எத்தர்களே இந்த விசயத்தில் உசாராக இருக்கும் இந்தக் காலத்தில் பாரதிய ஜனதா ஆட்கள், என்ன இருந்தாலும் பிகாரிகள் முட்டாள்கள் தானே என்று சல்லிசாக எடை போட்டு விட்டார்கள்.
இவ்வளவையும் கடந்து பாரதிய ஜனதா பெற்றிருக்கும் 24.8 சதவீத ஓட்டுக்கள் நமது கவனத்திற்கு உரிய ஒன்று (லாலு 18.5 சதவீதம், நிதிஷ் 16.7 சதவீதம் தான்). அதாவது நாலில் ஒரு பிகாரிகள் இந்துத்துவ பிரச்சாரங்களுக்கு செவி சாய்த்துள்ளனர். பீகாரில் லாலு-நிதீஷ் கட்சிகளை விட பா.ஜ.க, அதிக தொகுதிகளில் போட்டியிட்டபடியாலும் இந்த வாக்கு சதவீதம் கிடைத்திருக்கிறது. லாலு நிதிஷ் கூட்டணிக்கு வாக்களித்தவர்களிடம் இந்துத்துவ அரசியல் பிரச்சாரங்கள் எடுபடவில்லை என்பது உண்மை என்றாலும் இவர்கள் இந்துத்துவ அரசியலுக்கு எதிர் அரசியலை ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை என்பதும் உண்மை. அதாவது பொருத்தமான கால சூழ்நிலைமைகளில் (அயோத்தி கலவரம் போன்ற) இந்துத்துவ கும்பலால் மிக எளிதாக சமூகத்தை மத அடிப்படையில் பிளப்பதற்கான சாத்தியங்கள் உயிர்ப்போடு தான் இருக்கின்றன.
இந்த தோல்விகளில் இருந்து பாரதிய ஜனதா பாடம் படிக்க வேண்டும் என்று முதலாளிய ஊடகங்கள் சில எழுதுகின்றன. அதாவது இந்துத்துவ அரசியலை விடுத்து, வளர்ச்சியை முழு வீச்சில் கையிலெடுக்க வேண்டும் என்பது இவர்களின் பரிந்துரை. பாரதிய ஜனதாவைப் பொருத்த வரை வளர்ச்சி என்பதே ஒரு முகமூடி தான் என்பதைத் தாண்டி தேர்தல் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பதே அவர்களைப் பொருத்த வரை சிறுபிள்ளைத்தனமானது. இந்த 24 சதவீத ஓட்டுக்களை அதிகரிக்க இந்துத்துவ அரசியலை இன்னும் தீவிரப்படுத்தும் வழிவகைகளைத் தான் இந்த நேரம் அவர்கள் தேடிக் கொண்டிப்பார்கள்.
தேர்தல் அரசியலின் வரம்புகளுக்குள் நின்று பாரதிய ஜனதவையோ, பார்ப்பனிய இந்துமதவெறி பாசிச அரசியலை வீழ்த்தி விட முடியும் என்று நம்புவதே முட்டாள்தனமானது.
மக்களை சித்தாந்த ரீதியில் திரட்டி, அரசு, சமூக, பொருளாதார அமைப்புகளை பணியவைத்து கேள்விக்கிடமின்றி இந்துமதவெறியர் உருவாக்கும் அதிகாரத்தை சட்டபூர்வமாகவோ, நீதிமன்றம் மூலமாகவோ இல்லை தேர்தல்கள் மூலமாகவோ அழித்து விட முடியாது. சட்டமன்றத் தேர்தல்களில் வென்று மாநிலங்களவையில் அதிக பலம் பெற்று எதிர்ப்பின்றி மறுகாலனியாக்கத் திட்டங்களை நிறைவேற்றுவதே மோடி அரசின் இலக்கு. அதற்காகவே அவர்கள் சுலபமான வழியாக இந்துமதவெறிய அரசியலை வைத்து மக்களை திரட்டி தேர்தல்களை எதிர்கொள்கின்றனர்.
ஆகவே பீகார் தேர்தல்களில் அவர்கள் தோற்றிருப்பது ஒரு தற்காலிக பின்னடைவாக்கூட மாறலாம். மோடியை முன்னிறுத்தி முதலாளிகள் நடத்தும் கொள்ளைச் சுரண்டலுக்கு ஒரு முகமூடியாகவும், மக்களை திசைதிருப்பவும்தான் இந்துமதவெறி பயன்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை விரட்ட மக்களிடம் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைகளை விளக்குவதும், அரசியல் – பொருளாதார அரங்கில் போர்க்குணமான போராட்டங்களை நடத்துவதும் ஒன்றே மோடியை விரட்டும்.
பீகார் தேர்தல் முடிவுகள் அதை உறுதி செய்கின்றன.
– தமிழரசன். வினவு.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக