செவ்வாய், 3 நவம்பர், 2015

அம்மா பிரசாரத்தை தூள் தூளாக்கிவிட்ட கோபன் பாட்டு....யானையின் தும்பிக்கையில் நுழைந்த எறும்பு?

மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சார்ந்த கோவனின் பாடல்களை இப்பொழுது தமிழகத்தில் முக்கால்வாசிப் பேராவது கேட்டிருப்பார்கள். பெங்களூரில் இருக்கும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பாடலைக் கேட்டிருக்கும் வாய்ப்பே இருக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால் கேட்டிருக்கிறார்கள். எப்படி என்று கேட்டால் எதிர்வீட்டு முதியவருக்கு வாட்ஸப்பில் வந்திருக்கிறது. அரட்டையின் போது ஒலிக்கவிட்டிருக்கிறார். ‘அது யாரு கோவன்?’ என்கிறார்கள். டிஜிட்டல் வடிவத்தில் இருக்கும் எந்த விஷயத்தையும் பரவலாக்காமல் விட வேண்டுமானால் அப்படியே விட்டுவிட வேண்டும். ‘அய்யோ இவன் என்னை விமர்சிக்கிறான்’ என்று புலம்பினால் நான்கு பேருக்கு நாமாகவே அடையாளம் காட்டிவிட்ட மாதிரி ஆகிவிடும். இது ஜெயலலிதா மோடிக்கு மட்டுமில்லை- நமக்கும்தான் பொருந்தும்.

இப்பொழுதெல்லாம் எல்லோரும்தான் கருத்து சொல்கிறார்கள். எல்லோரும்தான் விமர்சிக்கிறார்கள். எல்லோரையும்தான் கிழிக்கிறார்கள். இதில் ஜெயலலிதாவை விமர்சித்தால் கைது செய்கிறார்களாம். குற்றமுள்ள நெஞ்சு. டாஸ்மாக்கை மூடச் சொல்லி ஒழுங்காகத்தான் போராடினார்கள். ‘ஜெயலலிதாவையும் மோடியையும் ஆபாசமாக பேசினார் இளங்கோவன்’ என்று சொல்லி திசை மாற்றினார்கள். அப்படியே டாஸ்மாக் போராட்டம் நமுத்துப் போனது. பிறகு விஜய்யின் புலி, அஜீத்தின் வேதாளம் என்று தமிழகம் இன்பத்தில் திளைத்திருந்தது. மாநிலமே சுபிட்சமாக இருக்கிறது என்று கொடநாட்டில் முகாம் அமைத்து ‘அங்கே இருந்தாலும் வேலையைச் செய்கிறேன் தெரியுமா?’ என்று காணொளி மூலம் நலத்திட்டங்களைத் திறந்து வைக்கிறார் என்று படங்களாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியே விட்டிருந்தால் நாமும் கபாலி நயன்தாரா என்று சந்தோஷத்தை தொடர்ந்திருப்போம். திடீரென்று இந்தக் கைது. ‘ஆமா அந்தப் பாட்டுல ஒண்ணும் தப்பில்லையே...டாஸ்மாக்கை மூடுனாத்தான் என்ன?’ என்று கொஞ்சம் பேரையாவது பேச வைத்திருக்கிறார்கள்.

ஊரில் ஒரு பழமொழியுண்டு. ஒருவருக்கு கெட்ட நேரம் வரத் தொடங்கினால் நாய், நரி, பன்றி என்று வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டேயிருக்குமாம். தேர்தலுக்கு இன்னமும் ஆறு மாதம்தான் இருக்கிறது. உருள்பெருந்தேரின் சக்கரத்துக்கு முட்டுக் கொடுக்க கோவன் ஒரு கையைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். தெரிந்தோ தெரியாமலோ ஜெயலலிதாவின் அரசு இரண்டாவது கையைக் கொடுத்திருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
 .................................................................

நாம் வாழும் காலத்தில் ஒன்றை வெகுவாகப் பிரபலப்படுத்த வேண்டுமானால் அரசாங்கத்தின் கை கால்களில் விழுந்தாவது தடையுத்தரவை வாங்கிவிட வேண்டும் இல்லையென்றால் அப்படியொரு வதந்தியைக் கிளப்பிவிட்டுவிட வேண்டும். அதன்பிறகு சமூக ஊடகம் பார்த்துக் கொள்ளும். சூப்பர் ஹிட் அடித்துவிடலாம். டிஜிட்டலாக்கப்பட்ட விஷயத்தை தடை செய்வது என்பதெல்லாம் சாத்தியமே இல்லாத காரியம். எப்படித் தடுத்தாலும் கசிந்துவிடும். சில மாதங்களுக்கு முன்பாக Unfreedom என்றவொரு படம் வெளியானது. அமெரிக்கவாழ் இந்தியரான ராஜ் அமித்குமார் இயக்கிய படம். இந்தியாவில் சென்சார் செய்வதற்கு விண்ணப்பித்திருக்கிறார். ஏகப்பட்ட இடங்களில் கத்தரி போடச் சொல்லியிருக்கிறார்கள். ‘உன்கிட்ட என்ன பேச்சு’ என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையிடம் பேசினாராம். கத்தரியெல்லாம் போட வேண்டியதில்லை, மொத்தமாகத் தடை செய்துவிடலாம் என்று சட்டியைத் தலையில் கவிழ்த்தி திருப்பி அனுப்பிவிட்டார்கள். 
படத்தில் இரண்டு கதைகள் இருக்கின்றன. ஒன்று இசுலாமிய பயங்கரவாதம். இன்னொன்று பாலியல் சுதந்திரம். இரண்டுமே இந்தியாவில் பற்றிக் கொள்ளக் கூடிய விவகாரங்கள்தான். ஹூசைன் பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு வருகிறான். அமெரிக்காவில் வசிக்கும் ஒரு மிதவாத இசுலாமியரைக் கடத்திக் கொல்வதுதான் அவனுடைய நோக்கம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவரைக் கடத்தி வதைக்கிறான். அது ஒரு கதை. தில்லியில் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அவளுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. அவள் லெஸ்பியன். ஒரு பெண் ஓவியரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். அவளுடன் ஏற்கனவே பழக்கம் உண்டு. ஆனால் அந்த ஓவியர் வேறொரு ஆடவனுடன் டேட்டிங்கில் இருக்கிறாள். குறுக்கே நிற்பவனைக் கொன்றுவிட்டு ஓவியரைக் கடத்துகிறாள். விடுவார்களா? அப்பன்காரன் போலீஸ் படையுடன் துரத்திக் கொண்டு வருகிறான்.
இரண்டு கதைகளுக்குமான காட்சிகள் மாறி மாறி வருகின்றன என்றாலும் இரண்டு கதைகளுக்கும் வெளிப்படையான தொடர்பு எதுவுமில்லை. படத்தில் அதீத வன்முறை, நிர்வாணக் காட்சிகள் என்று நிறைய உண்டு. நல்ல படம்தான். ஆனால் சில காட்சிகள் குழப்புகின்றன. யதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்று சற்று மிகைப்படுத்தியிருக்கிறார்களோ என்று தோன்றியது. இருக்கட்டும். படத்தைப் பற்றி எழுதுவதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை. இன்று அலுவலகத்திற்கு மட்டம் அடித்துவிட்டேன். இன்னமும் இருபது விடுமுறை தினங்கள் மிச்சமிருக்கின்றன. டிசம்பருக்குள் தீர்த்தால் தீர்த்துக் கொள்ளலாம் இல்லையென்றால் வீணாகப் போய்விடும் என்றார்கள். ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட படங்கள்’ என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். unfreedom அதில் ஒன்று.
படம் வெளியாகி ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. யுடியுப்பில் கிடைக்கிறது. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பாக Fifty shades of Grey என்றொரு படத்தைத் தடை செய்திருந்தார்கள். அது ஒரு ஆகாவழிப்படம்தான். ஆனால் இவர்கள் தடை செய்கிறேன் என்று ஆரம்பிக்க ஊடகங்கள் அதைப் பற்றிப் பேச இப்பொழுது இணையத்தில் சர்வசாதாரணமாகக் கிடைக்கிறது. 
தடையெல்லாம் சாத்தியமா?
நம்முடைய காலம் Big data காலம். உலகம் தோன்றியதிலிருந்து உருவாக்கப்பட்ட தகவல்களைவிடவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் தகவல்களின் எண்ணிக்கை அதிகம். தகவல்கள் என்றால் சகலமும் அடங்கும்- நம்முடைய பிறந்த தேதி, படிப்பு விவரம், சம்பளம், பெண்டாட்டி பிள்ளைகளின் கணக்கு, கடன் விவரம், எவ்வளவு வட்டி கட்டுகிறோம், எத்தனை வாகனங்கள் வைத்திருக்கிறோம், என்ன மாத்திரைகளை விழுங்குகிறோம், பருப்பு விலை என்ன, சாம்பார் பொடி ரசப்பொடி எங்கே தயாரிக்கிறார்கள், ஜெயலலிதாவுக்கு சொத்து எவ்வளவு, கருணாநிதிக்கு எத்தனை சொந்தக்காரர்கள், மோடி எவ்வளவு நாடுகள் சுற்றினார்- எல்லாவற்றையும் தகவல்களாக்கி குவித்துக் கொண்டிருக்கிறோம். 
இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட நூற்றைம்பது கோடி செல்போன்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. முக்கால்வாசி ஃபோனில் இணையமும் நிழற்படக் கருவியும் உண்டு. தகவல்கள் ஏன் குவியாது? கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட நிழற்படங்களின் எண்ணிக்கை மட்டும் தோராயமாக ஒரு லட்சம் கோடி இருக்கும் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதில் பாதிக்கும் மேலாக இணையத்தில் ஏற்றப்படுகின்றன. ஒரு நாளில் உருவாக்கப்படும் இணையத் தளங்கள், ஒவ்வொரு நிமிடமும் பரிமாறப்படும் பல மில்லியன் மின்னஞ்சல்கள், இணையத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்கள், பாடல்கள், டப்மாஷ், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், பின்னூட்டங்கள், ட்விட்டர், கூகிள் ப்ளஸ், வலைப்பதிவுகளில் எழுதித் தள்ளப்படும் செய்திகள் - பொறுமையாக யோசித்துப் பார்த்தால் தலை கிறுகிறுத்துவிடும்.
தகவல் சுனாமி யுகம் இது. அடித்து சுழற்றி வீசிச் சென்று கொண்டேயிருக்கிறது. இன்று இருக்கும் விவகாரம் நாளைக்கு கேட்பாரற்று போய்விடுகிறது. பிறகு இன்னொன்றைப் பற்றி பேசுவோம். அடுத்த நாள் அதை மூழ்கடிக்க வேறொரு சுனாமி வரும். அதனால் விமர்சனங்களையும் கதறல்களையும் அப்படியே விட்டுவிடுவதுதான் உசிதம். அதைவிட்டுவிட்டு படத்தை தடை செய்வேன், பாடலைத் தடை செய்வேன் என்பதெல்லாம் அபத்தம். nisaptham.com

கருத்துகள் இல்லை: