சனி, 7 நவம்பர், 2015

கேரள உள்ளாட்சி தேர்தல்களில் 6 இடங்களில் அதிமுக வெற்றி!

கேரள உள்ளாட்சித் தேர்தலில் 6 இடங்களில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி, இனி பெறப்போகும் வெற்றிகளுக்கு அச்சாரம் என தமிழக முதல்வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
கடந்த செப்டம்பர் 20-ம் தேதி அந்தமானில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்தொடர்ச்சியாக கேரள மாநிலத்தில் கடந்த 2, 5 தேதிகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 6 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 3-வது வார்டில் எஸ்.ஹெலன் அமலோற்பவமேரி, 7-வது வார்டில் ஜெ.ஸ்ரீரஞ்சனி, எருத்தேன்பதி பஞ்சாயத்து 7-வது வார்டில் எம்.சரஸ்வதி, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பஞ்சாயத்து 1-வது வார்டில் பாக்கியலட்சுமி, மறையூர் பஞ்சாயத்து 1-வது வார்டில் எல்.பாலகிருஷ்ணன், பீர்மேடு பஞ்சாயத்து 1-வது வார்டில் எஸ்.பிரவீணா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 5 பேர் பெண்கள் என்பது மிகுந்த மன நிறைவைத் தருகிறது.

கேரளத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி, அதிமுக வரலாற்றில் மேலும் ஒரு சகாப்தமாகும். அதிமுக இனி பெறப்போகும் வெற்றிகளுக்கு அச்சாரமாக இது அமைந்துள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கேரள மாநில அதிமுக செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு என பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலம் அதிமுக தொண்டர்களுக்கு தீபாவளி இனிப்பாக மலர்ந்துள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: