வெள்ளி, 26 டிசம்பர், 2014

கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ 21வயது – நீதி கேட்டு போராட்டம்

jeyashree-sliderவியாசர் பாடி – (யானைக்கவுனி) வால்டாக்ஸ் டு, உட்வார்பு பகுதியில் வசிக்கும் திருமதி சாந்தா என்பவரின் வளர்ப்பு மகள் ஜெயஸ்ரீ கடந்த 24.11.2014 முதல் காணாமல் போனார்.
ஜெயஸ்ரீ 21 வயதான கலகலப்பான பெண். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடிய பெண். யானை கவுனி அருகே ஒரு சிறு பட்டறையில் வேலை செய்திருக்கிறாள்.  ஆணுக்கு நிகராய் அத்தனை வேலைகளையும் செய்யக்கூடியவள்.

ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடிஅலைந்து விசாரித்த பின்னரும் அவர் பற்றி தகவல் தெரியாத நிலையில் 27.11.2014 அன்று ஏழுகிணறு காவல் நிலையத்தில், செல்வி ஜெயஸ்ரீ காணாமல் போனது பற்றி புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது பணியில் இருந்த ஏழுகிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் மேற்படி புகாரை பெற்றுக்கொள்ளாமல், அவரை கண்டுபிடித்து தருவதாக சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார். மேலும், ஜெயஸ்ரீயை அப்பகுதியில் உள்ள பிரான்சிஸ், சங்கர் மற்றும் முரளி ஆகியோர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்த பிறகும் அது பற்றி பின்னர் விசாரிப்பதாக தெரிவித்துவிட்டார்.
காதல் என்ற வலையில் வீழ்த்தி அந்த பெண்ணை சென்னையை விட்டு வெளியூருக்கு அழைத்துபோயிருக்கிறான் ஒருவன்.  அங்கே பல வெறிபிடித்த மிருகங்கள் பல நாட்கள் அந்த இளம்பெண்ணை சிதைத்திருக்கிறார்கள்.
2.12.2014 அன்று ஜெயஸ்ரீ கள்ளக்குறிச்சியில் இருப்பதாக அங்கிருந்து அண்ணாமலை என்பவர் தகவல் தெரிவித்தார். இதுபற்றியும் ஏழுகிணறு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மோகன்தாஸிடம் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அப்போதும் இதுபற்றி தீர விசாரணை செய்யாமல் கள்ளக்குறிச்சிக்குச் சென்று ஜெயஸ்ரீயை அழைத்து வர இரண்டு காவலர்களை மட்டும் அனுப்பி வைத்தார். கள்ளக்குறிச்சியில் செல்வி ஜெயஸ்ரீ உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மிக மோசமான நிலையில் நடக்ககூட இயலாத நிலையில் இருந்தார். அவருக்கு ‘அடைக்கலம் வழங்கி’ வைத்திருந்ததாக தெரிவித்த அண்ணாமலையிடம் ஜெயஸ்ரீ எப்படி அவர் வீட்டிற்கு வந்தார் என்பது பற்றியோ, கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக அவரது வீட்டில் ஜெயஸ்ரீ இருப்பது பற்றிய விபரம் பற்றி தகவல் கொடுக்காமல் இருந்தது பற்றியோ காவல்துறை எவ்வித விசாரணையும் செய்யவில்லை.
ஜெயஸ்ரீயை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க முயன்ற போது, காவல்துறை உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் அவ்வாறு அரசுமருத்துவமனையில் ஜெயஸ்ரீயை சிகிச்சைக்குச் சேர்த்தால் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விபரம் ஊடகங்களுக்கு தெரிந்து அவரது பெயர் கெட்டுப்போய்விடும் என்றும், தொலைக்காட்சியில் போட்டு அவரை அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்றும் கூறி வீட்டிலேயே சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்வதாக குடும்பத்தை மிரட்டி நிர்ப்பந்தம் செய்து ஜெயஸ்ரீயை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்வதை தடுத்து நிறுத்தி விட்டார். இந்நிலையில் கடந்த 04.12.2014 அன்று ஜெயஸ்ரீயின் உடல்நிலை மோசமாக ஆனதால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் ஜெயஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் செய்தி அறிந்து, மருத்துவமனைக்குச் சென்ற பொழுது, ஜெயஸ்ரீயின் உடல் மார்ச்சுவரியில் இருந்தது.  காதுகளில் காயம், இரு கைகளிலும் இறுக்கமாய் கட்டப்பட்டிருந்த கயிறால் தடமாய் பதிந்திருந்தன.  உடல் முழுவதுமே அங்காங்கே காயங்கள். பாலியல் வெறிபிடித்த மிருகங்கள் அந்த பெண்ணை மோசமாக குதறியிருந்தார்கள்.  அந்தப் பெண்ணின் அக்கா “பிறப்புறுப்பையே சிதைந்திருந்தார்கள்” என  அழுதுகொண்டே சொன்னார்.
jayashree_dinakaranஜெயஸ்ரீயின் சாவுக்கு நீதிகேட்டும், அதற்கு காரணமானவர்களைத் தண்டிக்கக் கோரியும் பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு தோழர்களும், மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞரும் பகுதிவாழ் பொது மக்களும் மறியல் போராட்டம் செய்த பிறகே 04.12.2014 அன்று ஏழுகிணறு காவல் நிலையத்தில் பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கின் முதல் தகவல் அறிக்கையிலும் திருமதி சாந்தா 04.12.2014 அன்றுதான் புகார் கொடுத்தார் என்று தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயஸ்ரீ கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பற்றி  எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், கடந்த 27.11.2014 அன்று இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டது பற்றியோ, 02.02.2014 அன்று கள்ளக்குறிச்சிக்கு ஜெயஸ்ரீயை மீட்டு வர காவலர் சென்ற விபரம் பற்றியோ எவ்வித விசாரணையுமின்றி கண்துடைப்பான முறையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்றுவரைக்கும் கூட முதல் தகவல் அறிக்கையில் உள்ள குற்றவாளிகளில் சங்கர், முரளி ஆகியோர் கைது செய்யப்படவில்லை.
தற்போது இந்தப்பிரச்சினையில் மேற்கொண்டு எதுவும் செய்யக் கூடாதென்றும், ஜெயஸ்ரீயின் சாவுக்கு காரணமான சமூக விரோதிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் வகையிலும், காவல்துறையினரே மறைமுகமாக செயல்பட்டு நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். தங்களின் கண்முன்பாகவே தமது மகள் கொடூரமான முறையில் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட பின்னரும் அதற்கு நியாயம் கேட்கும் வகையில் எதுவும் பேசக்கூடாதென்று காவல்துறையினர் சொல்வதும், குற்றவாளிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கினை முடித்துவைக்கும் வகையில் கட்டப்பஞ்சாயத்து செய்வதும் சட்டவிரோதமானதும், மனித உரிமை மீறலுமானதாகும்.
  1. கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஜெயஸ்ரீயின் வழக்கினை விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டுமென்றும்
  1. ஜெயஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமென்றும்
  1. இவ்வழக்கினை முறையாக விசாரணை செய்யாமல் மேற்படி சமூக விரோதிகளை காப்பற்றும் வகையில் செயல்பட்ட ஏழுகிணறு காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்
  1. ஜெயஸ்ரீயின் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க ஆவன செய்ய வேண்டுமென்றும்
நான்கு கோரிக்கைக்களை முன்வைத்து, பெண்கள் விடுதலை முன்னணி போராடி வருகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது, அரசு தரப்பில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வாதாடாமல், ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார் என வழக்கை ஊத்தி மூட முயன்றார்கள்.  மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்  ஜெயஸ்ரீ  கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார் என்றும், குற்றவாளிகளை தப்புவிக்க அரசு தரப்பு முயல்கிறது என்றும் வாதிட்டு, கைது செய்யப்பட்டுள்ள பிரான்சிஸ்க்கு ஜாமீன் கொடுக்க இருந்ததை போராடி நிறுத்தி வைத்துள்ளனர்.
ஒரு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி, மயக்க நிலையில் குடும்பத்தினருக்கு கிடைத்து, மயக்கம் திரும்பாலே இறந்தும் போய்விட்டார். காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், காப்பாற்றியிருக்கலாம். ஆனால், துவக்கத்திலிருந்தே காவல்துறை மெத்தனமாகவும், அலட்சியமாகவும் நடந்துகொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தவறுதலாக வழிகாட்டியும் இருக்கிறது. இந்த வன்புணர்வில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாதுகாக்கிற எல்லா வேலைகளையும் கவனமாக செய்து வருகிறது!
நாம் வைத்த குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், காவல்துறை துணை ஆணையர் பதவியில் உள்ள ஒரு அதிகாரியை, இவ்வழக்கு விசாரணையை கண்காணிக்க நியமனம் செய்யும்படி காவல்துறைத் தலைவருக்கு இடைக்கால உத்தரவிட்டுள்ளது. வழக்கினை இரணடு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
ஜெயஸ்ரீயின் வழக்கினை எப்படியாவது ஊத்தி மூடிவிடலாம் என்ற சமூகவிரோதிகளின் சதியினை முதற்கட்டமாக சட்டரீதியாக முறியடித்துள்ள பெண்கள் விடுதலை முன்னணி, ஜெயஸ்ரீயின் சாவுக்கு நீதிகேட்டு போரட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு தீர்வாக சட்டங்களை கடுமையாக்கவேண்டும் என குரல்கள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஜெயஸ்ரீ வழக்கை காவல்துறை பதிவு செய்வதற்கே நீண்ட நெடிய போராட்டம் செய்யவேண்டியிருந்தது! இதுதான் சமூக எதார்த்தம்.
சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளை பாதுகாக்குகிற வேலைகளை செய்யும் பொழுது சட்டங்களை கடுமையாக்கி என்ன செய்ய?
எத்தனையோ ஓட்டுக்கட்சிகள் இருந்தாலும், யாரும் இந்த பிரச்சனையை கையில் எடுக்கவில்லை. இறந்த ஜெயஸ்ரீ ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கேட்பதற்கு நாதியில்லை என்ற உண்மை தான் முகத்தில் அறைகிறது.
புகைப்படத்தில் இருக்கும் ஜெயஸ்ரீயின் மலர்ந்த புன்னகையும், மார்ச்சுவரியில் ரணமாக இருந்த சலனமற்ற உடலும் “மீண்டும் ஒரு ஜெயஸ்ரீயை உருவாக்க விட்டு விடாதீர்கள் அக்கா” என அவளின் குரல் மீண்டும் மீண்டும்  நினைவலைகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது!
தெருவில் இறங்கி போராடாமல் எதுவும் இங்கு சாத்தியமில்லை! பெண்கள் விடுதலை முன்னணி இறந்த ஜெயஸ்ரீயின் சாவுக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடுகிறது! எங்களுடன் கைகோர்த்து இணைந்து போராட வாருங்கள்!
Jayashree
தகவல்:
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை கிளை.
41, பிள்ளையார் கோயில் தெரு,
மதுரவாயல், சென்னை – 95.
பேச : 98416 58457

கருத்துகள் இல்லை: