செவ்வாய், 23 டிசம்பர், 2014

காவிக் கொடி? ஒவ்வொன்றாக வெளிவரும் அசிங்கங்கள்?

ஆக்ராவிலும் அலிகாரிலும் பிற மதத்தினரை இந்துக்களாக மாற்றம் செய்யத் தொடங்கியபோது ‘இது இந்துத்துவத்தின் ஆட்டம்’ என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. பாராளுமன்றம் முடங்கிய போதும் கூட பெரும்பாலானவர்களுக்கு இந்த மதமாற்றத்தின் பின்னணி தெரியவில்லை. வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருந்த நரேந்திரமோடியும் பட்டும்படாமலும் பதில் சொன்னாரே தவிர அழுத்தமான விளக்கம் எதையும் கொடுக்கவில்லை. பிரதமர் ஏன் பாராளுமன்றத்தில் பேசுவதேயில்லை எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது காவியணிந்த எம்.பிக்கள் மிகக் காட்டமாக பதில் சொன்னார்கள். மோடிக்கு ட்விட்டரில் பதில் சொல்லத்தான் நேரமிருக்கிறது என்ற கிண்டல்களும் எழுந்தன.
எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? குஜராத், டெல்லி என பெரும்பாலான இடங்களில் காவிக் கொடியைப் பறக்கவிடுகிறார்கள். இதுவரை மதச்சார்பற்ற நாடு என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின் தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். எம்பிக்கள் வெறியெடுத்துப் பேசுகிறார்கள்.  திட்டம் திட்டம் போட்டு திருடுற கூட்டம் இது திருடிக்கொண்டே இருக்கும்
அவர்களைக் கட்டுப்படுத்த நரேந்திர மோடி லட்சுமண ரேகை வரைவதாகக் காட்டிக் கொள்கிறார். ஆனாலும் அவர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. இதுவரை மதச்சார்பற்ற நாடு என்ற பெயரில் பிற மதத்தினர்தான் சலுகைகளை அனுபவித்தார்களே தவிர இந்துக்கள் எந்தப்பலனையும் அனுபவிக்கவில்லை என்று எதிர்த்துப் பேசுபவர்களிடம் சண்டைக்கு வருகிறார்கள்.
இந்த தேசம் முழுவதிலும் இருக்கும் இசுலாமியர்களையும் கிறித்துவர்களையும் மத மாற்றம் செய்துவிட முடியுமா என்ன? அதற்கு வாய்ப்பே இல்லையென்று அவர்களுக்கும் தெரியும்; நமக்கும் தெரியும்.
வேறு என்ன காரணம்? 
இப்பொழுது அமித்ஷா உள்ளிட்டவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பூனைக்குட்டி வெளியே வருகிறது. ‘அப்படின்னா சட்டம் கொண்டு வந்துடலாம்’ என்கிறார்கள். இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்ததைப் போல ‘நீங்களும் மாற்ற வேண்டாம் நாங்களும் மாற்ற வேண்டாம்’ என்கிறார்கள். கிறித்துவர்களையும், இசுலாமியர்களையும் இந்துக்களாக மாற்றம் செய்வதைவிடவும் பிற மதத்தினர் இந்துக்களை மதம்மாற்றுவதை தடுப்பதற்காக பெரிய பாறாங்கல்லைப் தூக்கிக் கொண்டு நிற்கிறார்கள். Anti conversion Law. ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உள்ளிட்ட இன்னபிற இந்துத்துவ அமைப்புகள் வெகு காலமாகக் கேட்டுக் கொண்டிருந்த சட்டம் இது. ஆனால் காங்கிரஸூம் இடதுசாரிகளும் வலுவாக இருந்த காலத்தில் அவர்களால் சாத்தியப்படுத்தவே முடியவில்லை. இப்பொழுது துள்ளுகிறார்கள். பா.ஜ.க பெரும்பான்மையுடனான ஆட்சியை அமைந்திருக்கிறது. தங்களின் கொள்கைகளுக்கு எல்லாவிதத்திலும் ஒத்துப் போகும் பிரதமர் அமைந்திருக்கிறார். தங்களின் செயல்களை இதழோரம் மென்புன்னகையுடன் ஆசிர்வதிக்கும் மத்திய அரசு அமைந்திருக்கிறது. வேறென்ன வேண்டும்? 
இனியும் இந்துத்துவ தலைகள் தொடர்ந்து மதமாற்ற ஏற்பாடுகளில் ஈடுபடுவார்கள். அப்படித்தான் தினந்தோறும் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களை நிறுத்தச் சொன்னால் ‘அவனை நிறுத்தச் சொல்லு; நான் நிறுத்துகிறேன்’ என்பார்கள். அவர்களுக்கு இப்போதைய தேவை அதுதான். இனி பாராளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கினால் ‘சரி மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துவிடலாம்’ என்று பா.ஜ. அரசு சொன்னால் கற்களோடு சேர்த்து அரிசியை அள்ளி வாய்க்குள் போட்ட கதிதான் எதிர்கட்சிகளுக்கு ஏற்படும். மெல்லவும் முடியாது; துப்பவும் முடியாது.
ஆட்சியும் அதிகாரமும் தங்களின் கைக்கு வரும் போது தமது கொள்கைகளை அமல்படுத்துவது நடக்கத்தான் செய்யும். ஆனால் காலங்காலமாக இதையெல்லாம் சற்று நிதானமாகச் செய்தார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரைக் கேட்டால் நேரு, காந்தியைத்தான் சொல்வோமே தவிர நிறையப்பேர்களை மறந்துவிட்டோம். அதை மறந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. மறக்கடிப்பட்டோம் அல்லது மறைக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட எழுபதாண்டு கால சுதந்திர வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக ஆளும்வர்கத்திற்கு தேவையான படி ட்யூன் செய்யப்பட்டது என்பதுதான் நிதர்சனம். அப்படி எழுபதாண்டு காலமாக சிறுகச் சிறுக செய்யப்பட்ட ட்யூனிங்கை பா.ஜ.க அரசு ஆறே மாதத்தில் தனக்கு வாகாக புரட்டிப் போடும் வேகத்தில் செயல்படுவதைப் பார்ப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது. 
பாடங்களில் இந்துத்துவ கருத்துக்களை புகுத்துவதிலிருந்து கிறிஸ்துமஸ் தினத்தை நல்லாட்சி தினம் என்று அறிவிப்பது வரை இந்த வேகம் ஆபத்தானதாகத் தெரிகிறது. இனிமேல் ஆசிரியர் தினம் குரு உத்சவ் என்று அழைக்கப்படும் என அவசர அவசரமாக என அறிவித்தார்கள். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து எழுந்த எதிர்ப்புக்குரல்களால் ‘இது ஒன்றும் கட்டாயமில்லை’ என்று ஸ்மிரிதி இரானி பின் வாங்கினார். 
அதேபோல துரதிர்ஷ்டவசமாக சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமும் இந்திராகாந்தியின் மறைவு தினமும் ஒரே நாளில் வந்து தொலைகிறது. காலங்காலமாக பட்டேல் இருட்டடிப்பு செய்யப்பட்டார் என்று சொல்லி இந்த வருடம் அவரது பிறந்த நாளன்று ‘ஒற்றுமைக்கான ஓட்டத்தை’ கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர் இந்திராவின் மறைந்த தினம் என்பதை டீலிங்கில் விட்டுவிட்டார். காங்கிரஸார் கதறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கதறல் அடங்குவதற்குள்ளாகவே ஏசு பிறந்தநாளிலேயே வாஜ்பாய் பிறந்த தினம் வந்துவிட்டது. 
காலங்காலமாக கிறிஸ்துமஸ் என்று கொண்டாடப்பட்ட தினத்தை ‘நல்லாட்சி’ தினம் என்று அறிவித்திருக்கிறார்கள். அன்றைய தினத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறந்திருக்கும் என்று செய்திகள் கசிந்தன. எதிர்ப்பு பலமாக இருக்கிறது என்பதால் ‘சும்மா பேசிட்டு இருந்தோம் மாமா’ என்கிற ரீதியில் ‘அப்படியெல்லாம் சொல்லவே இல்லை’ என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க எம்.பிக்கள் அன்றைய தினம் தங்களது தொகுதிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்களாம். அதனால் உள்ளூர் அதிகாரிகள் அவர்களோடு இருப்பார்கள். மந்திரிகள் நல்லாட்சி தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வார்கள். அடுத்த நாள் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்களைவிடவும் நல்லாட்சி தினக் கொண்டாட்டங்கள் செய்திகளில் முக்கியத்துவம் பெறும். காந்தி பிறந்த தினத்தன்று மோடியும் இன்னபிற அமைச்சர்களும் விளக்குமாறைப் பிடித்துக் கொண்டு எடுத்துக் கொண்ட நிழற்படங்கள் செய்தித்தாள்களை ஆக்கிரமித்த மாதிரி.
இதுவரையிலும் அரசியல் அல்லது மத ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த தினங்கள் ஒவ்வொன்றிலும் வரிசையாக வேறொரு அஜெண்டாவைப் புகுத்திக் கொண்டிருப்பது நிச்சயமாக தற்செயலானது இல்லை. இதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட அரசியல் இருக்கிறது. தங்களின் கொள்கைகளையும் விருப்பங்களையும் வரலாறாக மாற்றும் ஆழமான ஆசை இருக்கிறது. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 
சுதந்திரத்திற்குப் பிறகான ஒவ்வொரு காலத்தையும் ஏதாவதொரு புரட்சியை வைத்து அடையாளப்படுத்துவார்கள். வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி மாதிரி இப்பொழுது காவிப்புரட்சி நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் என எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு காவி அரசியலை அடையாளப்படுத்திவிட முடிகிறது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் நிறைவுற்றிருக்கின்றன. அதற்குள் எவ்வளவு நுண்ணரசியல்? எவ்வளவு மாறுதல்கள்? இன்னமும் நான்கரை ஆண்டுகாலம் இருக்கிறது. எவ்வளவோ நடக்கக் கூடும். 
எதற்காக இவ்வளவு வேகமும் வெறியும்? மத ரீதியிலான அரசியலை கை கட்டி வேடிக்கைப் பார்ப்பதும் குற்றம்தான்; அதே மதத்தை வைத்து அரசியலை நடத்துவதும் குற்றம்தான். இதுவரையிலான காங்கிரஸ் அரசுகள் முன்னால் சொன்ன குற்றத்தைச் செய்தன என்றால் இரண்டாவது குற்றத்தை பா.ஜ.கவும் வெட்கமேயில்லாமல் முன்னெடுக்கிறது. 
மத ரீதியிலான அஜெண்டாக்களில் நீங்கள் வென்றுவிடுவிடக் கூடும். ஆனால் அதற்காக இலட்சக்கணக்கான மக்களின் விருப்பங்களையும் கொண்டாட்டங்களையும் குழி தோண்டி புதைக்க வேண்டியிருக்கும். எளிய மனிதர்களின் பிஞ்சு இதயங்களை எந்தவிதக் கருணையுமில்லாமல் காலடியில் போட்டு மிதிக்க வேண்டியிருக்கும். அவர்களின் எதிர்ப்புக் குரல் கசியாதபடிக்கு குரல்வளை மீது கத்தியை இறக்க வேண்டியிருக்கும். வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். வரலாறு என்னும் ஈவு இரக்கமற்ற காட்டாற்று வெள்ளத்தின் போக்கை உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் சாமானியர்களிடம் எதுவும் இல்லை. அவர்களின் இரத்தத்தையும் எலும்பையும் பயன்படுத்தி காட்டாறின் மீது அணை கட்டத் தொடங்கியிருப்பதாகவே புரிந்து கொள்கிறேன்.
நன்றி: விகடன்.காம்

கருத்துகள் இல்லை: