சனி, 27 டிசம்பர், 2014

தமிழகத்தில் பறிபோகும் வேலைவாய்ப்புகள்! Nokia Foxconn... மூடுவிழா!

சென்னை ஸ்ரீபெரும்புதுார் - பெங்களூர் சாலையில் இருமருங்கிலும் காணப்பட்ட பெருமளவு தொழிற்சாலைகள், ஒன்றன்பின் ஒன்றாக மாயமாகி வருகின்றன.இதன் எதிரொலியாக, தமிழகத்தில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை, கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.அதன்படி, இப்பகுதிகளில் செயல்பட்டு வந்த, மோட்டோரோலா, பீ.ஒய்.டி., ஜபில் மற்றும் நோக்கியா நிறுவனங்கள் ஏற்கனவே மூடுவிழா கண்டுள்ள நிலையில், தற்போது, பாக்ஸ்கான் நிறுவனமும் தன் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.இதன் காரணமாக, கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும், 35 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்; நோக்கியா, மோடோரோலா போன்ற நிறுவனங்கள் Smartphone பயன்பாட்டுக்கு வந்தவுடனே முற்றாக தங்க சந்தையை இழந்து விட்டன. மூடாமல் என்ன செய்வார்கள். சாம்சுங் நிறுவனத்தின் போட்டிக்கு ஆப்பிள் நிறுவனமே ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறது.
இதில், பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் மட்டுமின்றி, புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களும், இந்த தொழிற்சாலை மூடலால் வேலை வாய்ப்பை இழந்து நிற்கதியில் உள்ளனர்.எனவே, இது போன்று, திடீர் திடீரென்று தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் வெளியே துரத்தப்படும் அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க, தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தொழிலாளர் நல அமைப்புகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு எச்சரிக்கையால் பலன் என்ன?
ஸ்ரீபெரும்புதுார் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள பாக்ஸ்கான் ஆலை, தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராக மூடப்பட்டு உள்ளது. எனவே, அந்த ஆலை மீது, சட்ட நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான எச்சரிக்கையை, இருங்காட்டுக் கோட்டை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில், நேற்று நடந்த முத்தரப்பு பேச்சின்போது, ஆலை நிர்வாகத்துக்கு, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தொழிலாளர் நல சட்ட மூத்த வழக்கறிஞர் கூறியதாவது:தொழிற் தகராறு சட்டத்தை மீறி, பாக்ஸ்கான் ஆலை நிர்வாகம் செயல்பட்டு உள்ளதால், அந்நிறுவனத்தின் மீது, அபராதமோ, சிறை தண்டனையோ அல்லது இந்த இரண்டையும் சேர்த்தோ விதிக்க முடியும்.ஆனால், இந்த தண்டனை மிக சொற்பமாக இருக்கும். பொதுவாக, தொழிற் தகராறு சட்டப்படி, ஆலை நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்துவதே நோக்கம்.முடியாத பட்சத்தில், தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஊதியம், போனஸ், விடுப்பு சரண் தொகை மற்றும் எஞ்சிய கால பணிக்கு இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை பெற்றுத் தருவது.இவற்றை, எவ்வளவு விரைவில் பெற்றுத் தர முடியோ, அது தான் தொழிலாளர்களுக்கு பயன் தரும். வழக்கு தொடர்வது, தொழிலாளர்களுக்கான பணப் பயனை, உடனடியாகப் பெற்றுத் தர ஏதுவாக இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: