சனி, 27 டிசம்பர், 2014

ஆலடி அருணா கொலையாளி ! சென்னையில் பட்டா கத்தியை காட்டி பட்டப்பகலில் வழிப்பறி செய்தவன்...

சென்னை துரைப்பாக்கத்தில் பட்டப் பகலில் பட்டாக் கத்தியைக் காட்டி ஆசிரியையிடம் வழிப்பறி செய்த கொள்ளையன் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலையாளி என்று தெரியவந்துள்ளது. துரைப்பாக்கம் எம்.சி.என். நகர் 2 ஆவது சந்து பகுதியை சேர்ந்தவர் வேலம். தனியார் பள்ளி ஆசிரியையான இவர் கடந்த 21ஆம் தேதி பணி முடிந்து, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி சென்றார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த 2 பேர் ஆசிரியையின் வண்டி மீது மோதினர். இதில் நிலைதடுமாறி, வேலம் கீழே விழுந்தார். பைக் பின்னால் அமர்ந்து வந்த இளைஞர், பட்டாக் கத்தியை காட்டி மிரட்டி, தாலி செயின் உள்ளிட்ட 14 சவரன் நகைகளை வேலத் திடம் இருந்து பறித்துக் கொண்டு பைக்கில் தப்பினார்.  இந்த சம்பவத்தை அந்தப் பகுதியின் மாடி வீட்டில் இருந்த ஒரு பெண், செல்போன் மூலமாக வீடியோ எடுத்து தனது தோழிகளுக்கு அவர் வாட்ஸ் அப் மூலமாக அனுப்பினார். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலும் இந்த கொள்ளை வீடியோ பரவத் தொடங்கியது. சென்னையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர், வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர். வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ வில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை புகைப்படமாக எடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது. தனிப்படை போலீஸார் கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதே கொள்ளையர்கள்தான் வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற இடங்களில் கத்தி முனையில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் உறுதியானது. இதையடுத்து தனிப்படைப் போலீஸார் விரைந்து சென்று தூத்துக்குடி அண்ணாநகரில் பதுங்கியிருந்த வழிப்பறி கொள்ளையன் ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள நீராவி முருகன் என்ற மற்றொரு கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர். போலீசாரிடம் ஹரிகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தில்,"தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த நீராவி முருகனும், நானும் சேர்ந்துதான் துரைப்பாக்கத்தில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்தோம். நீராவி முருகன் வழிப்பறி செய்வதில் கில்லாடி. திமுகவை சேர்ந்த ஆலடி அருணா கொலை வழக்கு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட் டுள்ளார். தூத்துக்குடி, மதுரையில் இருமுறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருக்கிறார். வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுடன் தங்கியுள்ளார். அவர் வைத்திருக்கும் பையில் கத்தி மற்றும் மாற்று உடை இருக்கும். கொள்ளை அடித்துவிட்டு, உடனே வேறு உடையை மாற்றி விடுவார். இவர் 100 சவரன் நகைகளுக்கு மேல் கொள்ளை அடித்துள்ளார்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து வழிப்பறி கொள்ளையன் நீராவி முருகனைப் பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: