புதன், 29 அக்டோபர், 2014

swiss கருப்பு பண பட்டியல் வெறும் கோயிந்துகள் மட்டுமே?

கருப்புப் பணம்ருப்பு பண விவகாரத்தில் குரங்குகளே வெட்கப்படும் அளவுக்கு பல்டி மேல் பல்டி அடித்து வருகிறது பாரதிய ஜனதா கும்பல். தேர்தல் பிரச்சார காலத்தில் தாங்கள் வென்று ஆட்சிக்கு வந்து நூறே நாட்களில் மொத்த கருப்பு பண குவியலையும் வாரி வந்து கொட்டுவோம் என்று பீற்றினார்கள். ஆட்சிக்கு வந்ததில் இருந்து வளைந்து நெளிந்து நெம்பி குனிந்து – பதஞ்சலி முனிவரே யோசித்திராத கோணத்தில் தலை எது வால் எது என்று தெரியாத ஒரு ’ஸ்திதியில்’ காட்சி தந்து கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கும்பல். கருப்பு பணம் தொடர்பான வழக்கில் சில நாட்களுக்கு முன் தங்கள் தரப்பை முன்வைத்த பாரதிய ஜனதா அரசு, அவ்வாறு பெயர்களை வெளியிடுவது தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், இந்தியா செய்து கொண்டிருக்கும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறுவதாவும் இருக்கும் என்று தெரிவித்திருந்தது.

இணையவாசிகள் ஒருபக்கம் காரி உமிந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம், காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் காவி பிளேடு பக்கிரிகளின் பேச்சு மாத்து செயலை கழுவி ஊற்றினர். பிள்ளைப் பூச்சி காங்கிரசே ஏறி அடித்ததில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பயிற்சி பெற்ற பாரதிய ஜனதாவுக்கு மகா கேவலமாக போய் விட்டது (எருமை மாதிரி இருந்துகிட்டு… இதெல்லாம் அடிவாங்கற பாடியா பாஸ்?)
லேசாக சொரணை வந்ததும் “கருப்பு பணத்தைப் பதுக்கியவர்கள் பெயர்களை வெளியிடுவோம்…. ஆனால் இரகசியமாகத் தான் வெளியிடுவோம்” என்றார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. ’இது சரியான போங்காட்டமாக இருக்கிறதே’ என்று அடுத்த சுற்று கொந்தளிப்புகளுக்குப் பின் மீண்டும் வாயைத் திறந்த அருண் ஜேட்லி, “பெயர்களை வெளியிட்டால் காங்கிரசுக்குத் தான் தர்ம சங்கடம் ஏற்படும்” என்றார். அதாவது காவியும் கதரும் வேறு வேறல்ல என்பதை மோடியை நம்பிய நடுத்தர வர்க்க அப்பாவிகளின் பொடனியில் தட்டி உணர வைத்தார்.
இந்த மொத்த விளையாட்டின் விதிகளையும், போக்குகளையும் நன்கு உணர்ந்திருந்த பரம்பரை திருடனான காங்கிரசு களத்தில் இறங்கி விழி பிதுங்கிக் கிடக்கும் புது திருடன் பாரதிய ஜனதாவை போட்டு சாத்த தொடங்கியது. ”சொம்மா பூச்சி காட்டாத மாமூ.. நெஞ்சுல கீறது மஞ்சா சோறா இருந்தா, தில்லு இருந்தா பேரைச் சொல்லு நைனா” என்று லோக்கலாக இறங்கி அடித்தார் திக் விஜய் சிங். அதே கருத்தை கொஞ்சம் ‘மானே தேனே பொன் மானே’ சேர்த்து அறிவுஜீவி மொழியில் உரைத்தார் ப.சிதம்பரம்.
கருப்புப் பணம் - காங்கிரஸ், பாஜக
“ஸ்விஸ் வங்கியிலிருந்து எல்லா கருப்புப் பணத்தையும் கொண்டு வருவோம்”
“என்னோட பணத்தை எல்லாம் ஒதுக்குவதற்கு போதுமான நேரம் கொடுப்பீங்கன்னு சொல்லுங்க, பிளீஸ்”
கரடியே காறி துப்பி விட்ட துர்பாக்கிய நிலைக்கு ஆளான பாரதிய ஜனதா, தற்போது இறுதியாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. மேற்படி பிரமாண பத்திரத்தில் சுமார் எட்டு பேர்களின் பெயர்களை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. டாபர் குழுமத்தின் முன்னாள் தலைவர் பிரதீப் பர்மன், ராஜ்கோட்டைச் சேர்ந்த தங்க வர்த்தகர் பங்கஜ் சிமன்லால் லோதியா மற்றும் கோவாவைச் சேர்ந்த டிம்ப்ளோ என்கிற சுரங்க குழுமத்தைச் சேர்ந்த ஐவரின் பெயர்களும் இந்தப் பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன.
பிரமாணப் பத்திரம் பற்றி கருத்து தெரிவித்துள்ள டாபர் குழுமம், தங்கள் குழுமத்தின் முன்னாள் செயல் அலுவலர் ப்ரதீப் பர்மன் முன்னர் வெளிநாடு வாழ் இந்தியராக இருந்த போது சட்டபூர்வமான நடைமுறைகளுக்கும் வருமான வரித்துறையினரின் விதிகளுக்கும் உட்பட்டே மேற்படி சுவிஸ் வங்கி கணக்கைத் துவங்கியதாகவும், அதன் வரவு செலவு விவரங்கள் அவரால் சொந்த முறையில் முன்வந்து முன்னரே வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேற்படி நடவடிக்கைகளில் தாங்கள் எந்த விதத்திலும் சட்டவிரோதமாக செயல்படவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.
பங்கஜ் லோதியாவோ தனக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்கே இல்லை என்று சொல்லி விட்டார். மற்றொரு நிறுவனமான டிம்ப்ளோவுக்கு பாரதிய ஜனதாவுடனும் காங்கிரசுடனும் நெருக்கமான தொடர்புகள் இருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் பாரதிய ஜனதாவுக்கு ஒன்பது முறைகளுக்கும் காங்கிரசுக்கு மூன்று முறையும் இந்நிறுவனம் தேர்தல் நன்கொடை அளித்துள்ளதாக தெரிவிக்கிறது தேர்தல் கண்காணிப்பகம் (Election Watchdog) என்கிற தன்னார்வ குழு.
இவ்வளவு அளப்பறைகளுக்குப் பின்னும் பாரதிய ஜனதா அளித்துள்ள பெயர் பட்டியலில் பெரிய முதலாளிகளின் பெயர்களோ அரசியல்வாதிகளின் பெயர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தில் மதிப்பு என்னவென்பதைப் பற்றி அதிகாரப்பூர்வமான மதிப்பீடுகள் ஏதும் இல்லாத நிலையில், வாஷிங்டனைச் சேர்ந்த சர்வதேச நிதி ஒருங்கிணைவு (Global Financial Integrity) என்கிற சிந்தனைக் குழாமின் கணிப்புப் படி 1948-ல் இருந்து 2008 வரையிலான காலகட்டத்தில் உலகெங்கிலும் உள்ள வரியில்லாச் சொர்க்கங்களில் சுமார் 462 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான செல்வம் பதுக்கப்பட்டிருக்கிறதாம்.
ஏழை இந்தியாவும் - கருப்புப் பணமும்இந்நிலையில் சுவிஸ் வங்கியில் இரகசிய கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியல் ஒன்று இந்திய அரசுக்கு கிடைத்துள்ளது. கணக்கு வைத்துள்ளவர் பெயர், அவரது கடவுச்சீட்டு எண், மொத்த முதலீடு உள்ளிட்ட விவரங்கள் தற்போது அரசிடம் உள்ளன. ஆனால் இந்த விவரங்கள் உண்மை என்றோ அது கருப்புப் பணம் தான் என்றோ அந்த வங்கியோ, அந்நாட்டு அரசோ சாட்சியமளிக்காது. திருட்டு உண்மை என்றானால், திருடிய பொருளை மறைத்து வைக்க உதவியவனும் குற்றவாளி என்றல்லவா முடிவு செய்ய வேண்டியிருக்கும். எனவே, நீதிமன்றத்தில் ”சட்டப்படி” குற்றத்தை நிரூபிக்க முடியாது.
சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துக் கொள்வதே கிரிமினல் குற்றம் என்று இந்தியச் சட்டம் சொல்லவில்லை. சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்துக்கு வருமானவரி கட்டவில்லை என்பதுதான், அந்தக் கறுப்புப் பணம் தொடர்பாக இந்திய அரசு சாட்டுகின்ற குற்றம். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுடைய சுவிஸ் வங்கிக் கணக்கை இந்திய அரசால் முடக்க முடியாது. ஏனென்றால் சுவிஸ் நாட்டின் சட்டப்படி, வரிஏய்ப்பு என்பது குற்றமல்ல. அது மட்டுமல்ல, உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, அந்நியச் செலாவணி தொடர்பான மோசடிகளை கிரிமினல் குற்றமாகக் கருதிய இந்தியாவின் பெரா (FERA) சட்டத்துடைய பல்லைப் பிடுங்கி, அதனை 1999-ல் பெமா (FEMA) என்ற உரிமையியல் சட்டமாக மாற்றிவிட்டது பா.ஜ.க அரசு. எனவே, அதை வைத்தும் எதுவும் செய்ய இயலாது.
ஆக, செய்யக் கூடியதெல்லாம் பெயர்களின் பட்டியலை வைத்து நாக்கு வழிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்டவர்களுடைய கையில் காலில் விழுந்து கழிவு பெறலாம். ஒருவேளை பெரிய அரசியல் தலைவர்களின் பெயர்கள் மேற்படி பட்டியலில் இருந்தால் அதை வைத்து அரசியல் கொடுக்கல் வாங்கல்களில் பிளாக் மெயில் செய்து கொள்ளலாம். ஆனால் இதை அப்படி சுலபமாக செய்யமுடியாபடிக்கு காங்கிரசு, பாஜக இரண்டு கட்சிகளுமே கருப்புப் பணத்தில்தான் அரசியல் செலவுகளை மேற்கொள்கின்றன.
கருப்புப் பணம் - அரசியல்வாதிகள்இது ஒருபக்கம் இருக்க, தற்போது வெளிவந்துள்ள பெயர்களே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இருக்கிறது. இருப்பதிலேயே அப்பாவி கோயிந்துகளின் பெயர்களாக பார்த்து நேர்த்தியாக தயாரிக்கப் பட்ட ஒரு டுபாக்கூர் பட்டியலை இந்தியாவின் கையில் சுவிஸ் வங்கி கொடுத்திருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு அது அரசியல் அரங்கில் பாரிய தாக்கங்களை செய்யத் துவங்கியிருந்த ஒரு காலகட்டத்தின் பின்னணியிலேயே சுவிஸ் வங்கி தனது இரகசியத் தன்மையை தளர்த்திக் கொள்வதாக காட்டிக் கொண்டது.
சூதாட்டக் குமிழிப் பொருளாதாரத்தின் விளைவாக உலகம் முழுவதும் முதலாளித்துவ கட்டமைவு உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்த நிலையில், மொத்த அமைப்பு முறையின் மேலும் மக்கள் பரவலாக அதிருப்தியுற்றிருந்த சமயம் மக்களின் கோபாவேசத்தை தனிப்பட்ட ஆளும் வர்க்க ஊழல் பேர்வழிகளின் மேல் திருப்பி விடும் வண்ணப் புரட்சிகள் சமீபத்தில் தான் நடந்தேறின. அதே காலகட்டத்தில் தான் இந்தியாவிலும் ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் கிளைக்கத் துவங்கின. இடையில் புகுந்த பாரதிய ஜனதா தனது சவடால் முழக்கங்களால் அதிருப்தியுற்ற மக்களில் கணிசமானோரை கவர்ந்திழுக்க முடிந்ததை நாம் சென்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் கண்டோம். தடுப்பணைகளை உடைத்தெறியும் ஆவேசத்திற்கான வடிகாலாக அமைந்தார் மோடி. முதலாளித்துவ உலகம் தகுந்த சமயத்தில் குப்பையை கோபுரத்தில் ஏற்றியது.
ஆக, அரசிடம் “இரகசியமாக” இருப்பதாகச் சொல்லப்படும் பெயர்களும் தற்போது வெளியானதை ஒத்த கோயிந்துகளின் பெயர்களாக இருப்பதற்கே சாத்தியங்கள் அதிகம். ஏற்கனவே முதலாளித்துவ ஊடகங்கள் மற்ற பெயர்களைப் பற்றி “அதில் காங்கிரசின் துணை அமைச்சர் ஒருவர் பெயர் இருக்கிறதாம், மகாராஷ்டிரத்தின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பெயரும் இருக்கிறதாம்” என்று கிசுகிசுக்கத் துவங்கி விட்டன. ஏனெனில், பலரும் சொல்வதைப் போல் கருப்புப் பணம் என்பது சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட செல்வம் மட்டுமில்லை – அதில் பெரும் பகுதி சட்டப்பூர்வமான முறையிலேயே முதலீடுகளாக வரியில்லா சொர்க்கத் தீவுகளுக்குச் சென்று திரும்புகிறது. நாட்டின் உள்ளும் வெளியும் சென்று திரும்பிப் புழங்கும் ஊக பேர வர்த்தகச் சூதாட்ட சந்தையின் பணத்தில் எது வெள்ளை எது கருப்பு என்பது அந்த ’ஆண்டவனுக்கே’ தெரியாது என்பதே உண்மை. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் பாலில் வெண்ணை போல் ஒன்று கலந்து ஓருடலாகி பல பத்தாண்டுகளாகின்றன.
மோடி மற்றும் காவி கும்பலின் சவடால்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே என்பதை தாமதமாகவேனும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை ஏமாறுவதை அப்பாவித்தனம் எனலாம், தெரிந்தே எப்போதும் ஏமாந்து கொண்டிருப்பதை அயோக்கியத்தனம் என்றல்லவா சொல்ல வேண்டும்?
கருப்பு பணம் குறித்து விரிவாக புரிந்து கொள்ள கீழே பட்டியலிடப்பட்டுள்ள புதிய ஜனநாயக கட்டுரைகள் உதவும். இவற்றைப் படித்து நாம் தெளிவு பெறுவதோடு நமது நட்பு வட்டத்தில் இருக்கும் அப்பாவி மோடி பக்தர்களையும் தெளிவடையச் செய்வது நம் கடமை. வினவு.com

கருத்துகள் இல்லை: