புதன், 29 அக்டோபர், 2014

ஹரியாணா: 125 அடி ஆழத்தில் சுரங்க பாதை அமைத்து வங்கியில் 77 லாக்கர்கள் உடைக்கப்பட்டு திருட்டு !

ஹரியாணாவில் 125 அடி நீள சுரங்கம் அமைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் 77 லாக்கர்களை உடைத்து நூதன முறையிலான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
ஹரியாணாவின் சோனிபட் என்ற மாவட்டத்தின் கோஹானா பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் இந்த அதிர்ச்சிகரமான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
வார இறுதி விடுமுறை தினங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை அன்று வங்கி திறக்கப்பட்டபோது இந்த திருட்டுச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனை கண்ட வங்கியின் கிளை மேலாளர் தேவேந்திர மாலிக் இது குறித்து கோஹானா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரூ. 40 லட்சம் ரொக்கப் பணமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறு இரவு வங்கியை ஒட்டிய பகுதயில் உள்ள ஆள் இல்லா வீடு ஒன்றினுள் சுமார் 125 அடி ஆழத்துக்கு சுரங்க பாதை தோண்டிய மர்ம கும்பல் அந்த பாதை வழியாக வங்கிக்குள் புகுந்துள்ளது. அதன்பின் வங்கியின் அறையில் அமைக்கப்பட்டிருந்து 350 லாக்கர்களில் 88 லாக்கர்களை உடைத்து, அதிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து அவர்கள் அமைத்து வைத்த வழியே தப்பித்துள்ளனர்.
சோனிபட் மாவட்ட காவல் ஆணையர் அருண் நேக்ரா தலைமையிலான உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுரஙக பாதை அமைக்கப்பட்டிருந்த வழி மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திவரும் போலீஸார், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாகவும் அருண் நேக்ரா கூறியுள்ளார்.
இது குறித்து வங்கி மேலாளர் மாலிக் கூறும்போது, "வங்கியில் அனைத்து பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகட்ளும் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளின்படியே உள்ளது. வங்கியின் தரை எட்டு ஒன்பது அங்குல ஆழத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. சுவர்கள் திட கான்கிரீட்டால் ஆனது. கட்டப்பட்டது. எனவே இந்த கொள்ளைச் சம்பவம் பல நாள் திட்டம்தீட்டப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.” என்றார். tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: