ஞாயிறு, 26 அக்டோபர், 2014

அடகுகடை அதிபர் கொலை: கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கம்போல் போலீஸ்...

விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் அடகு கடை அதிபர் ஹீராராமை கொலை செய்து 100 பவுன் நகைகளை கொள்ளையடித்த கொலையாளிகள் யார்? என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
கடந்த 22–ந் தேதி தீபாவளி அன்று மாலை 5 மணி அளவில் ஹீராராமின் கடையில் புகுந்த கொள்ளையர்கள் அவரை கொன்று விட்டு 15 பெட்டிகளில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இரவு 8 மணிக்கு பின்னரே ஹீராராம் ரத்த வெள்ளத்தில் கடைக்குள் கிடப்பது தெரியவந்தது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொலை சம்பவம் குறித்து தி.நகர் துணை கமிஷனர் பகலவன் மேற்பார்வையில் அசோக் நகர் உதவி கமிஷனர் ஆறுமுகம், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 6 தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

ஹீராராமின் நகை கடையில் 2 அடகு ரசீதுகள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு ரசீதில் நகையை பெற்றுக் கொண்டதற்கான கையெழுத்து போடப்பட்டிருந்தது. இன்னொரு ரசீதில் அதுபோன்ற கையெழுத்து எதுவும் இல்லை.
இந்த 2 ரசீதுகளையும் கைப்பற்றிய போலீசார் அதனை வைத்து துப்பு துலக்கினர். அப்போது, கையெழுத்துப் போட்டு நகையை வாங்கிச் சென்றது ஓய்வு பெற்ற உதவி என்ஜீனியர் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தனர். ஹீராராம் கொலைக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியான பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
கைெழுத்துப் போடாமல் இருந்த ரசீதில் கோயம்பேடு அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதி முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஒருவரது பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து அந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6 வீடுகள் இருந்தன.
ரசீதில் உள்ள பெயரில் யாராவது வசிக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அதுபோன்று அங்கு யாரும் இல்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த போலீசார் ரசீதில் அதே பெயரில், பக்கத்து ஏரியாக்களில் யாராவது வசிக்கிறார்களா? என்று விசாரித்தனர். அப்போது முறுக்கு வியாபாரி ஒருவர் சிக்கினார்.
இவர் வீட்டில் வைத்து முறுக்கு, சீடை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்பவர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால், அவர் நான் அந்த அடகு கடைக்கு சென்றதே இல்லை என்றும், எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார். அவர், சொல்வது உண்மைதானா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
கொலை நடந்த அன்று அடகு கடையில் இந்த ரசீதுகள் கிடைத்ததும், போலீசார் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதை வைத்து எப்படியும் குற்றவாளிகளை உடனடியாக பிடித்து விடலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால், அது நடக்க வில்லை. போலீசை குழப்புவதற்காகவே கொலையாளிகள் போலி பெயர் மற்றும் முகவரியை கொடுத்து கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அடகு ரசீதுகள் கைகொடுக்காத நிலையில், புதிய கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை நடந்த அன்று அடகு கடை இருக்கும் பகுதியில் சுற்றித்திருந்த அத்தனை பேரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அவர்கள் திட்ட மிட்டுள்ளனர்.
இதற்காக ஐ.டி.நிறுவனங்களில் நல்ல அனுபவம் பெற்றவர்களை வைத்து, செல்போன் டவர்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன் நம்பரை எளிதில் கண்டு பிடித்து அவர்களை கைது செய்ய முடியும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ஹீராராம் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் தவறானது என்றும், இன்னும் சில தினங்களில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்றும் தெரிவித்தார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: