மறைந்த பிரபல கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி பட்டோடிக்கும் இந்தி நடிகை ஷர்மீளா தாகூருக்கும் மகனான இந்தி நடிகர் சையப் அலி கான் இந்தி நடிகை கரீனா கபூரை திருமணம் செய்திருக்கிறார். தனது வாழ்க்கையில் மதங்கள் வகிக்கும் பங்கு பற்றியும், இந்தியாவில் மதம் அரசியல் ஆக்கப்படுவதை விமர்சித்தும் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில்  எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.
சையபின் தந்தை பட்டோடி
நான் ஓர் விளையாட்டு வீரரின் மகன். இங்கிலாந்து, போபால், பட்டோடி, டில்லி மற்றும் மும்பையில் வளர்ந்தேன். எனக்கு தெரிந்த எந்த ஒரு இந்து அல்லது முஸ்லிமை விடவும் சற்று அதிகப்படியான இந்தியன் என்று தான் என்னை நான் சொல்வேன். ஏனெனில், நான் இந்துவும், முஸ்லிமும் ஆனவன். மக்களுக்கு எதையும் அறிவிக்கின்ற அல்லது இந்தியா மற்றும் அதன் கிராமங்களில் இருக்கின்ற வகுப்புவாதத்தின் தீமைகள் குறித்து சொல்கின்ற நோக்கத்தில் இந்த கட்டுரையை எழுதவில்லை. ஆனால், எனது நண்பர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை என்ற வகையில் இதைப் பற்றி பேசுகிறேன்.

எனது பெற்றோர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போதும் அதை சுமூகமான முறையில் ஏற்றுக் கொண்டவர்கள் அப்போது யாருமில்லை. அரச குடும்பத்தினருக்கு அவர்களது பிரச்சினைகள் இருந்தன; பிராமணர்களுக்கு அவர்களது பிரச்சினைகள் இருந்தன. இரு மதங்களை சார்ந்த தீவிரவாதிகள் கொலை மிரட்டல்கள் விடுத்துக் கொண்டிருந்தனர். இருந்தும் திருமணம் நடைபெற்றது.
பட்டோடி - ஷர்மிளா
பட்டோடி – ஷர்மிளா
எனது பாட்டியும், தனது தகுதிக்கு நிகரற்ற, வசதி குறைந்த பட்டோடி நவாபை மணப்பதற்கு போராடிய முந்தைய வரலாறு அவர்களுக்கு உதவியிருக்கலாம். காதலுக்காக கவுரவத்தை பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்து கொண்டவர்கள் பற்றிய உண்மை காதல் கதைகளை பார்த்தும், கேட்டும் நாங்கள் வளர்ந்தோம். மேலும், நாங்கள் கடவுள் என்பவர் பல பெயர்களுடன் அழைக்கப்படுகின்ற ஒருவர் என்ற நம்பிக்கையுடன் வளர்ந்தோம்.
கரீனாவும், நானும் திருமணம் செய்து கொண்ட போதும் அதே போன்ற கொலை மிரட்டல்களும், இணையத்தில் பலரின் லவ் ஜிகாத் பற்றிய முட்டாள்தனமான வசவுகளும் வந்தன. நாங்கள் நம்புகிற எந்த ஒரு மதத்தையோ ஆன்மீக முறைகளையோ நாங்கள் கடைப்பிடிருக்கிறோம். அதைப் பற்றி உரையாடி, ஒருவர் மற்றொருவரின் கருத்தை மதிக்கிறோம். எங்கள் குழந்தைகளும் இதையே செய்வார்கள் என்று நம்புகிறேன்.
நான் கரீனாவுடன் தேவாலாயத்தில் ஜெபித்து விட்டு ஆராதனையில் கலந்து கொண்டிருக்கிறேன். அதே போல, கரீனாவும் தர்காக்களில் தலை குனிந்து வணங்கவும், மசூதிகளில் பிரார்த்தனையும்  செய்துள்ளார். எங்கள் புது வீட்டை தூய்மைப்படுத்திய போது வேள்வியும் இருந்தது, குரான் ஓதுவதும் நடந்தது, பாதிரியார் ஒருவர் புனித நீர் தெளித்ததும் நிகழ்ந்தது.
கரீனா கபூர்
கரீனா கபூர்
எது மதம் ? எது நம்பிக்கை ? இவற்றுக்கு மிகச்சரியான வரையறைகள் இருக்கின்றனவா? எனக்குத் தெரியவில்லை. ஆனால், சந்தேகம் இருக்கிறது என்று எனக்குத் தெரிகிறது. சந்தேகத்தின் அரசியல் என்னை ஈர்க்கிறது.  சந்தேகம் நம்பிக்கையை ஊட்டுகிறது. நம்மை உயிரோடு வைத்திருப்பது எது என்று கேள்வி கேட்க வைக்கிறது, அந்த சந்தேகமே. நாம் ஒரு விஷயத்தை பற்றி உறுதியான நம்பிக்கை கொள்வோம் எனில், வெறி பிடித்தவர்களாக மாறி விடுகின்ற அபாயம் இருக்கிறது.
மதம் பல்வேறு பிடிகளிலிருந்து பிரிக்கப்பட வேண்டியிருக்கிறது. நமது மதங்கள் பயத்தின் மேல் கட்டப்பட்டு இருப்பவை. விவிலியத்தின் பழைய ஏற்பாடு ஒரு பிரிவு மக்களுக்கான வாக்களிக்கப்பட்ட தேசம் பற்றி பேசுகிறது. ஆனால், அந்த இடத்தில் ஏற்கனவே வேறு மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அந்த பிரச்சினை இன்றும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கடவுளின் பெயரால் அளவு கடந்த கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன.
தங்கள் பெண்களை முஸ்லிம்களுக்கு மணம் முடித்து கொடுப்பதில் நல்ல மனிதர்களுக்கு இருக்கின்ற அச்சத்தை நான் அறிவேன். மதமாற்றம், உடனடியான விவாகரத்து, பலதார மணம் என்று அடிப்படையில் பெண்களை விடவும், பையன்களுக்கு சாதகமாக இருப்பது குறித்து அவர்கள் பயப்படுகின்றனர். ஆனால், இவை அனைத்தும் காலாவதி ஆகிப் போனவை. இஸ்லாம் காலத்துக்கு ஏற்ப பொருந்துவதற்கு அதன் பல கூறுகள் நவீனமடைந்து, புனரமைக்கப்பட வேண்டி உள்ளது. நல்லதையும், கெட்டதையும் பிரித்துப் பார்ப்பதற்கான ஒரு வலுவான மிதவாதக் குரல் நமக்கு தேவைப்படுகிறது. இஸ்லாம் இன்று வேறெப்போதும் இல்லாத கெடு புகழை எய்தி இருக்கிறது.
சையிப் அலி கான்
சையப் அலி கான்
நிலா, பாலைவனம், வரைகலை எழுத்து, பறக்கும் கம்பளம், ஆயிரத்து ஓர் இரவுகள் இவைதான் இஸ்லாம் என்று எப்போதுமே கருதி வந்த எனக்கு இது மிகவும் அவமானகரமாக இருக்கிறது. நான் இஸ்லாத்தை எப்போதும் அமைதி மற்றும் பணிவின் மதமாகவே கருதி வந்தேன். நான் பெரியவன் ஆன பிறகு மதம், மனிதர்களால் திரிக்கப்பட்டு தவறாக பயன்படுத்தப்படுவதை கண்டு, மனிதன் உருவாக்கிய எல்லா மதங்களிலிருந்தும் என்னை அந்நியமாக்கிக் கொண்டேன். அதே நேரத்தில், என்னால் முடிந்த அளவுக்கு ஆன்மீகத்தை பின்பற்றினேன்.
சரி, நான் சொல்ல வந்ததிலிருந்து விலகி விட்டேன். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் திருமணம் செய்து கொள்வதற்காக யாரும் மதம் மாற வேண்டாம். சிறப்பு திருமணச் சட்டம், பொருந்தக் கூடிய இடங்களில் நம் நாட்டின் மிக முக்கியமான சட்டம். இந்த சட்டத்தின் படி நீங்கள் திருமணம் செய்து கொண்டால் எந்த மதச்சட்டமும் உங்களை கட்டுப்படுத்தாது. அது உண்மையிலே மதச்சார்பற்ற சட்டம்.
இந்தியாவின் கட்டுமானம் பல்வேறு இழைகளால் நெய்யப்பட்டது. ஆங்கிலேயர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் இன்னும் பலரால் உருவானது. ஆனால், நாம் நமது கடந்த காலத்தை அழித்து வருவது இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எந்த பாத்திரமும் இல்லை என்பது அவர்களின் முக்கியத்துவத்தையும், பங்களிப்பையும் மறுக்கின்ற செயலாகும். இந்தியாவின் உருவாக்கத்தில் பெண்களுக்கு எந்த பாத்திரமும் இல்லை என்று சொல்வதற்கு ஒப்பானது அது.
ஏன் நாம் இஸ்லாத்தை மறுக்க வேண்டும்? நாம் இன்று அதனால் உருவாகி இருக்கிறோம். நாம் நமது கலவைகளின் தொகுப்பாக இருக்கிறோம். இதை மறுப்பது நமது பாரம்பரியத்தை மறுப்பதாகும். எனக்கு லவ் ஜிகாத் என்றால் என்னவென்று தெரியாது. அது இந்தியாவில் கட்டியமைக்கப்பட்டிருக்கும் பிரச்சனை. மதம் கடந்த திருமணங்கள் பற்றி எனக்குத் தெரியும். மதம் கடந்த திருமணத்தின் குழந்தை நான்; எனது குழந்தைகள் அத்தகைய திருமணத்தில் பிறந்தவை. மதம் கடந்த திருமணம் என்பது லவ் ஜிகாத் அல்ல. அந்த மணம் தான் இந்தியா. இந்தியா கலவைகளின் தேசம். சாதி ஒழிய ஒரே வழி மத மறுப்புத் திருமணங்கள் தான் என்றார், அம்பேத்கர். அத்தகைய மணங்களால் மட்டுமே நாளைய இந்தியாவின் புதல்வர்கள் சரியான கண்ணோட்டத்துடன் நமது தேசத்தை முன்னேற்றி செல்வதற்கான  திறமையை வழங்க முடியும்.
சையிப் - கரீனா
சையப் – கரீனா
அத்தகைய ஒரு கலப்பு மணத்தின் விளைபொருள் நான். ஈகைப் பெருநாள், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளால் நிறைந்தது, எனது வாழ்க்கை. நாங்கள் சமமான மரியாதையுடன் நமஸ்தே மற்றும் அடாப் – ஐ (வலது கரத்தை நெஞ்சுக்கு மேலே, தலைக்கு கீழாக உயர்த்தி முஸ்லிம்கள் செலுத்தும் வணக்கம்) செய்ய கற்றுக் கொண்டிருக்கிறோம்.
மனிதநேயத்துக்கும், அன்புக்கும் இடம் தராமல் மதத்துக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் அளிப்பது வருத்தத்துக்கு உரியது. முஸ்லிமாக பிறந்த எனது குழந்தைகள் இந்துக்களை போல (பூஜை அறையுடன் கூடிய வீட்டில்) வளர்கிறார்கள். அவர்கள் புத்த மதத்தை தழுவ விரும்பினால் அதற்கும் எனது ஆசி உண்டு. அப்படித்தான் நாங்கள் வளர்க்கப்பட்டோம்.
நாம், நமது இந்த பெரிய நாடு  கலப்பு இணைவு. நமது வேறுபாடுகளே நம்மை உருவாக்கியிருக்கின்றன. வெறும் சகிப்புத்தன்மை நிலையை கடந்து நாம் பண்பட வேண்டியுள்ளது. நாம் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு மரியாதை செலுத்தவும், அன்பு காட்டவும் வேண்டும்.
நமது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் மதச்சார்பின்மையாக இருந்தாலும் நாம் நிச்சயமாக ஒரு மதச்சார்பற்ற நாடல்ல. அத்தகைய நோக்கத்தை அடைவதற்கு தேவையான அனைத்து சட்டகங்களும் அரசமைப்புசட்டத்தில் உள்ளன. ஆனால், ஆறு பத்தாண்டுகள் கடந்த பின்னரும் நம்மால் மதத்தை சட்டத்திலிருந்து பிரிக்க இயலவில்லை. இருப்பதை மேலும் சிக்கலாக்கும் வண்ணம் வேறுபட்ட மக்களுக்கு வேறுபட்ட சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இது நாம் அனைவரும் ஒன்று என்பதற்கு எதிராக உள்ளது. இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வேறுவேறு சட்டங்கள் இருப்பது பிரச்சினையை மேலும் வளர்க்கக் கூடியதாக இருக்கிறது.
இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே சட்டம், ஒரு பொது சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. நாம் அனைவரும் நம்மை ஒரே தேசமாக உணர வேண்டும். அனைத்து மதங்களும் அதற்கு பின்னால், பக்கவாட்டில்தான் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கடவுளையும் அவன் ஆயிரம் பெயர்களையும் சொல்லிக் கொடுங்கள். ஆனால், அதற்கு முன்பு சக மனிதனை நேசிக்கவும், மரியாதை செலுத்தவும் கற்றுக் கொடுங்கள். அது மிக முக்கியம்.
நான் விழுந்த பல்லை புதைத்து வைத்தால் காசு கிடைக்கும் என்ற கதையை நம்புவதை முதலில் கைவிட்டேன். பிறகு கிறிஸ்மஸ் தாத்தா மீதான நம்பிக்கை இல்லாமல் ஆனது. இப்போது தனிப்பட்ட கடவுள் என்ற கருத்து பற்றிய எனது உணர்வை சொல்ல தெரியவில்லை. ஆனால், அன்பானவனாகவும், மற்றவர்களுக்கு உதவுபவனாகவும் இருக்க வேண்டும் என்பதில் உண்மையாக இருக்கிறேன். இதில், எல்லா நேரங்களிலும் நான் வெற்றி பெறுவதில்லை. அத்தகைய நேரங்களில் நான் வருந்துகிறேன். எனது மனசாட்சியே எனது கடவுள் என்று நம்புகிறேன். பட்டோடியில் என் தந்தையை புதைத்த இடத்திற்கு அருகில் நிற்கும் மரம் – ஒரு கோவில், தேவாலயம், மசூதியை விடவும் கடவுளுக்கு நெருக்கமாக இருக்கிறது என்று அது எனக்கு சொல்கிறது.
Saif Ali Khan: Intermarriage is not jihad, it is India
தமிழில்,
சம்புகன். vinavu.com