திங்கள், 14 ஜூலை, 2014

தணிக்கை குழுவில் போதிய உறுப்பினர்கள் இல்லை ! கியூவில் படங்கள் தாமதம் !

சென்னை: சென்சார் போர்டில் உறுப்பினர்கள் பற்றாக்குறையால் சான்றிதழுக்காக தமிழ் படங்கள் காத்திருக்கின்றன.இம்மாத வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட பல தமிழ் படங்கள் ரிலீஸ் தேதி முடிவு செய்ய முடியாமல் காத்திருக்கின்றன. இதற்கு காரணம் அப்படங்கள் சென்சார் ஆகாததுதான். சென்சார் குழுவில் சான்றிதழ் வழங்கும் உறுப்பினர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 2 படங்கள் மட்டுமே சென்சார் செய்யப்பட்டது. இன்னும் பல படங்கள் சென்சாருக்காக நீண்ட கியூவில் காத்திருக்கிறது. சான்றிதழ் பெற்ற பிறகுதான் அரசின் வரி சலுகைக்கும் விண்ணப்பிக்க முடியும் என்பதால் தயாரிப்பாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவில் உள்ள திரைப்பட தணிக்கை குழு அமைப்பில் 2வது பெரிய அமைப்பு சென்னையில் அமைந்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை 380 படங்கள் சென்சார் செய்யப்பட்டது.


வாரத்துக்கு 5 அல்லது 6 படங்கள் சென்னை அலுவலகத்தில் சென்சார் செய்யப்பட்டது. தற்போது உறுப்பினர் பற்றாக்குறை நிலவுகிறது.  தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி படம் வரும் 18ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் சென்சாருக்காக இன்னமும் படம் காத்திருக்கிறது. அதேபோல் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூலோகம், கார்த்தி நடித்துள்ள ‘மெட்ராஸ், விஜய் ஆண்டனி நடித் திருக்கும் ‘சலீம் போன்ற படங்களும் வெயிட்டிங்கில் உள்ளது.இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சென்சார் அமைப்பில் ஏற்பட்டுள்ள உறுப்பினர்கள் பற்றாக்குறை பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்படும் என குறிப்பிட்டிருக்கிறார். - .tamilmurasu.org

கருத்துகள் இல்லை: