ஞாயிறு, 13 ஜூலை, 2014

நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும் மருத்துவமனைகள்

நோயாளிகளுக்கு பொருத்தும் மருத்துவ சாதனங்களான ஸ்டென்ட்ஸ்(ட்யூப் வடிவிலான குழாய்), இம்ப்ளான்ட்ஸ்(பிளேட்டுகள் மற்றும் இதர சாதனங்கள்), பேஸ் மேக்கர் போன்றவைகளுக்கு மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் விலை கேட்டாலே மாரடைப்பு ஏற்பட்டுவிடும். அதன் வழக்கமான விலையை இரண்டு முதல் மூன்று மடங்கு விலை உயர்த்தி மருத்துவர்கள் கொள்ளை லாபம் பார்ப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சாதனங்கள் வெளிச்சந்தையில் கிடைக்காததால், நோயாளிகளும் இந்த விலைகளை சரிபார்க்க முடியாது. அதனால் பணயக்கைதி நிலையில் உள்ள நோயாளி மருத்துவர்கள் கேட்கும் தொகையைத் தான் கட்டவேண்டி இருக்கிறது. அநேக மருத்துவமனைகளில் இந்த சாதனங்கள் அன்றாடம் பல நோயாளிகளுக்கு பொருத்தப்படுவதால் மருத்துவமனையின் ஒட்டுமொத்த லாபத்தில் 30 சதவிகித தொகையை இச்சாதனங்கள் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.


அந்த நோயாகளிடம் அளவுக்கதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது. இப்படித்தான் கொச்சியில் ஒரு வழக்கறிஞர், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை "தொண்டு செய்யும்" மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழக்கறிஞரிடம் அவரது தந்தைக்கு மூன்று டிரக் எலுட்டிங் ஸ்டென்ட்ஸ் பொருத்தவேண்டும். அதன் விலை தலா ரூ. 95000 ஆகும்.

ஆக மொத்தம் மூன்று சாதனங்களுக்கு மட்டும் 285000 ரூபாய் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளனர். அந்த வழக்கறிஞர் கொஞ்சம் விவரமானவர், அதிலும் மருத்துவ சாதனங்கள் குறித்து தெரிந்து வைத்துள்ளவர் என்பதால், அச்சாதனத்தை சப்ளை செய்பவரிடம் போய் அதன் விலையை கேட்டுள்ளார். அவர் ஒரு சாதனத்தை 40000 ரூபாய்க்கு தருவதாக கூறியுள்ளார். அவரும் கூட மருத்துவமனைக்கு சப்ளை செய்யும் விலையை விட சிறிது அதிகமாக தான் கூறியுள்ளார். ஏனென்றால் மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் அச்சாதனங்களை வாங்குவதால் அவர்களுக்கு ஒரு சாதனத்தின் விலையாக ரூ.30000-ம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு வழியாக மூன்று சாதனங்களையும் 1,20,000 ரூபாய் கொடுத்து வாங்கிய வழக்கறிஞர் அவற்றை கொண்டு போய் அந்த "தொண்டு செய்யும்" மருத்துவமனையில் கொடுத்த போது அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு சாதனத்தின் விலை 87000 ரூபாய் என்று நிர்ணயித்த மருத்துவமனை நிர்வாகம், இரண்டு சாதனங்களை வாங்கினால் ஒன்றை இலவசமாக தருவதாக கூறியுள்ளது.

வழக்கறிஞரும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டு பணத்தை செலுத்தியுள்ளார். வழக்கறிஞர் ஒருவரே மூன்று சாதனங்களுக்கு தலா ரூ 58000 என்று பணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும் போது, ஒன்றுமே தெரியாத அப்பாவி மக்களின் நிலையை என்னவென்று சொல்வது. ஆக 30000 ரூபாய்க்கு வாங்கிய சாதனத்தை 58000 ரூபாய்க்கு விற்ற "தொண்டு செய்யும்" மருத்துவமனையின் சேவை நமக்கு வியப்பளிக்கிறது.

ஒவ்வொரு மருத்துவமனையும் சாதனங்கள், மருந்துகள் மற்றும் நோய் கண்டறியும் சோதனைகள் போன்றவற்றில் 70 சதவகித அளவுக்கு லாபம் பார்ப்பதாக பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்களே தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஒரு சில நல்லவர்கள் இருந்தாலும் பெரும்பாலானோர் கொள்ளை லாபம் பார்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். இதற்கு கடிவாளம் போட அரசு முயற்சி செய்தால் தான் அப்பாவி மக்கள் ஏமாறாமல் இருக்கமுடியும்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: