முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கும் அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-ஆம் தேதி தேதி உத்தரவிட்டது. மேலும், அணையைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும், மத்திய நீர்வளத் துறையின் கீழ் கண்காணிப்புக் குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் எல்.ஏ.வி. நாதன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழக அரசின் சார்பாக பொதுப் பணித் துறையின் முதன்மைச் செயலாளர் சாய்குமாரும், கேரளத்தின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளரும், கேரள நீர்ப்பாசனத் துறையின் முதன்மைச் செயலாளருமான வி.ஜே.குரியனும் நியமிக்கப்பட்டனர்.
வியாழக்கிழமை காலை மூவர் குழுவின் தலைவர் எல்.ஏ.வி. நாதன் தலைமையில் மத்திய நீர்வள ஆணையத்தின் இணை இயக்குநர் சுனில் ஜெயின், தமிழக அரசின் பிரதிநிதி சாய்குமார் உள்பட தமிழக அதிகாரிகள் தேக்கடியிலிருந்து கண்ணகி படகில் முல்லைப் பெரியாறு அணைக்கு வந்தனர். அதேபோல, கேரள அரசின் பிரதிநிதி வி.ஜே.குரியன் தலைமையில், கேரள அதிகாரிகள் கேரள சுற்றுலாத் துறை படகில் தேக்கடியிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு வந்தனர்.
பின்னர், அணையில் மூவர் குழுவினர் இணைந்து பிரதான அணை, பேபி அணை, மண் அணை, கேலரி பகுதியில் உள்ள 10 அடி, 45 அடி கேலரிக்கும் சென்று ஆய்வு நடத்தினர். இறுதியாக அணையிலிருந்து உபரி நீராக கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றக் கூடிய 13 ஷட்டர்களையும் பார்வையிட்டனர்.
இதற்கிடையே, 13 ஷட்டர்களையும் பாதி இறக்கி தயார் நிலையில் வைத்திருந்த தமிழக பொதுப் பணித் துறையினர், உடனடியாக, மூவர் குழுவினர் முன்னிலையில் 13 ஷட்டர்களையும் கீழே இறக்கி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தனர். இதன்மூலம், 35 ஆண்டுகளுக்குப் பிறகு அணையில் தண்ணீரைத் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்துவது உறுதி செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது, தமிழகத்தின் சார்பில் காவேரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர், கேரளத்தின் சார்பில் கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பரமேஸ்வர நாயர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மூவர் குழு கூட்டத்தில் முடிவு: உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட மூவர் குழு தேக்கடியில் நடத்திய கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அணையில் தண்ணீரைத் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் எனத் தெரிவித்தது. இதை அக் குழுவின் தலைவர் அறிவித்தார்.
மூவர் குழுவினர் தலைமையில், வியாழக்கிழமை மாலை தேக்கடியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக-கேரள அதிகாரிகளுக்கிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர், மூவர் குழுவின் தலைவர் எல்.ஏ.வி. நாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அணையில் தண்ணீரைத் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கு கேரள அரசின் சார்பில், அணையில் தண்ணீரைத் தேக்கும் அளவை உயர்த்தினால் சுற்றுச் சூழலுக்கும், வன விலங்குகளுக்கும், பழங்குடியினர் வாழ்வாதாரமும் பாதிக்கும் என்று தெரிவித்தனர்.
தண்ணீரைத் தேக்கும் அளவை உயர்த்தும்போது, கண்காணிக்கும் வகையில் மூவர் குழுவின் தலைமையில் தமிழக கேரள அரசு அதிகாரிகள் தலா 2 பேர் அடங்கிய துணைக் குழு அமைக்கவும், அந்தக் குழு வாரந்தோறும் அணைப் பகுதியில் கண்காணித்து அறிக்கை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது என்றார் நாதன்.dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக