வெள்ளி, 6 ஜூன், 2014

சசி தரூர் பாஜக பக்கம் சாய்கிறார் ! மோடியின் நடவடிக்கைகள் இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம் !

புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின்
நடவடிக்கைகள் ‘இன்ப அதிர்ச்சி’யாக உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் கூறினார். அது அவரது சொந்த கருத்து என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.< இன்ப அதிர்ச்சி முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–
இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், தேர்தலுக்கு பின்னர் அவர் தன்னை வழிநடத்திச் செல்லும் விதம், பேசும் விதம் ஆகியவை தான். வெற்றி பெற்றதில் இருந்து அவர் அன்பாகவும், உதவி செய்யும் குணமுள்ளவராகவும், குறிப்பாக அவர் பேசும் வார்த்தைகள், அவர் பேசும் தொனி போன்றவை ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது.


உதாரணத்துக்கு, அவர் பேசும்போது தனக்கு ஓட்டு போடாதவர்கள் உள்பட அனைவருக்குமே தான் பிரதமர் தான் என்றார். இது அவர் அனைத்து இந்தியர்களுக்கும் சேவை செய்ய விரும்புவதை காட்டுகிறது. இது அவரை புகழ்வதற்காக சொல்லவில்லை. அதற்காக நான் அவரது விசிறியும் அல்ல.

காங்கிரஸ் எதிர்க்கும்

அதேசமயம் மக்கள் நலனுக்கு விரோதமாக அவர் நடவடிக்கைகள் எடுத்தால் காங்கிரஸ் உறுதியுடன் எதிர்க்கும். என்னைப் பொருத்தவரை எதிர்க்கட்சியின் கடமை என்பது தேச நலனுக்காக குரல் கொடுப்பது தான்.

எதிர்க்கட்சி என்பதற்காக அரசு சொல்லும் எல்லாவற்றையும் அல்லது அரசு செய்யும் எல்லாவற்றையும் எதிர்ப்பது என்பது அல்ல.

இவ்வாறு சசிதரூர் எம்.பி. கூறினார்.

காங்கிரஸ் மறுப்பு

அதேசமயம் காங்கிரஸ் இதில் இருந்து வேறுபட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சோபா ஓஜா கூறும்போது, ‘‘சசிதரூர் மத்திய அரசு பற்றியோ பிரதமர் பற்றியோ கூறிய கருத்துகள் அனைத்தும் அவரது சொந்த கருத்துகள். காங்கிரசை பொருத்தவரை இதுபோன்ற கருத்துகளை கூறுவதற்கு இது உரிய காலம் அல்ல. நரேந்திர மோடி தேர்தலின்போது கூறியவற்றை எல்லாம் செயல்வடிவில் கொண்டுவரும் வரை காங்கிரஸ் கட்சி காத்திருக்கும். நான் கூறியவைகள் தான் காங்கிரஸ் கட்சியின் கருத்து’’ என்றார்.

இதற்காக சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, அவர் பதில் அளிக்காமல் மழுப்பிவிட்டார். ஆனால் ஷோபா ஓஜா ‘டுவிட்டர்’ வலைதளத்தில், ‘அரசு மீது கருத்து தெரிவிக்க இந்த குறுகிய காலம் போதாது. நீங்கள் சொல்லுங்கள், என்ன மாறிவிட்டது?’ என்று கூறியிருக்கிறார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: