வெள்ளி, 6 ஜூன், 2014

மீண்டும் 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம் ?

புதுடில்லி: சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானிய தொகையை, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக சேர்க்கும், 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தை, மீண்டும் தொடர வேண்டும் என, தாண்டே குழு, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அரசின் பல்வேறு மானிய உதவிகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, நேரடியாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2013ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி, 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் 1 முதல், இத்திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானிய தொகையை, நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. பின், இத்திட்டம், 291 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தில், 'ஆதார்' அட்டை வைத்துள்ளோரின் வங்கிக் கணக்கில், மானியம், வரவு வைக்கப்பட்டது. இத்தொகையுடன், பயனாளிகள் எரிவாயு சிலிண்டரை சந்தை விலையில் வாங்கி வந்தனர்.
இதன்படி, 2.80 கோடி குடும்பத்திற்கு, 5,400 கோடி ரூபாய், மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. எனினும், 'ஆதார்' அட்டை இருந்தால் மட்டுமே, மானியத் தொகையை பெற முடியும் என்பதால், இந்த அட்டை அல்லது வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு, சமையல் எரிவாயுவிற்கான மானியம் கிடைக்கவில்லை. இது குறித்த புகார்களை தொடர்ந்து, நடப்பாண்டு, மார்ச் 7ம் தேதி, 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, முந்தைய அரசு அறிவித்தது. இதையடுத்து, இத்திட்டம் குறித்து மறுஆய்வு மேற்கொள்ள, கான்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர் எஸ்.ஜி.தாண்டே தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மத்திய அரசுக்கு அளித்துள்ள ஆய்வறிக்கையில், 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம், கண்டிப்பாக தொடர வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.அறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சமையல் எரிவாயு வினியோகத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பதற்காக, இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது என்பது, முதற்கட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரை, வேறு பயன்பாட்டிற்கு திருப்புவது குறைந்துள்ளது; போலி இணைப்புகள் ஒழிக்கப்பட்டு, சுலபமாக சமையல் எரிவாயு கிடைக்க, இத்திட்டம் வழி செய்துள்ளது. அதே சமயம், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் காட்டிய வேகமும், குறைந்த அளவில் 'ஆதார்' அட்டைகளை கொண்டுள்ள மாவட்டங்களை தேர்வு செய்ததும், நுகர்வோரின் புகார்களுக்கு காரணமாக அமைந்து விட்டது. நுகர்வோர், குறிப்பாக எழுத்தறிவற்றோர் 'ஆதார்' அட்டை பெறுவதிலும், வங்கிக் கணக்கை துவக்கி, சமையல் எரிவாயு பயனாளிகளின் பட்டியலில் இடம்பெறவும், சிரமப்படுகின்றனர். இக்குறைபாடுகளை தீர்க்கும் நோக்கில், பொதுவான குறைதீர்ப்பு மையம் அமைக்க வேண்டும். இத்திட்டத்தை மீண்டும் துவக்கும் முன், 'ஆதார்', வங்கிக் கணக்கு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, மூன்று மாதங்களுக்கு தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.<தபால் அலுவலகம்:

வங்கிகள் இல்லாத கிராமப் புறங்களில், கூட்டுறவு வங்கி கிளைகள், தபால் அலுவலகங்கள் ஆகியவை, வங்கி செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பு வசதி மூலம், சிறிய ஏ.டி.எம்.,களை அமைக்கலாம். சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான, 'வாட்' வரியை குறைக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. முந்தைய அரசின் இத்திட்டம், மீண்டும் உயிர் பெறுவது, தற்போதைய அரசின் கையில் உள்ளது.  dinamalar.com

கருத்துகள் இல்லை: