புதன், 4 ஜூன், 2014

2ஜி: அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகையில் ஸ்டாலின் பெயர்-ஆ.ராசா பேட்டி

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை இயக்குனரகம் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் தமிழக முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலினின் பெயர் இடம் பெற்றிருப்பது தொடர்பாக கருத்து கூறியுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 2ஜி ஊழலில் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உடலை பரிசோதனை செய்ததில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


2ஜி ஊழலில் நடைபெற்ற பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரனை நடத்திய மத்திய அமலாக்கத் துறை கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் மு.க.ஸ்டாலினின் பெயரையும் சேர்த்துள்ளது. ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா உயிருடன் இருந்த போது அளித்த பேட்டியின்படி, ஸ்வான் டெலிகாம் பிரதிநிதி ஷாகித் பல்வாவுடன் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசியதாக அந்த குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆ.ராசாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

’ஷாகித் பல்வாவுக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் அதைப் போன்றதொரு சந்திப்பு ஒருபோதும் நடந்ததே இல்லை. இது, அமலாக்கத் துறை உருவாக்கிய கட்டுக்கதை. ஸ்டாலினுக்கு இருக்கும் நற்பெயரை களங்கப்படுத்த அரசியல் நோக்கத்தோடு இந்த கட்டுக்கதை உருவாக்கப்பட்டுள்ளது’ என்று அவர் பதில் அளித்தார்.

அப்படிப்பட்ட அரசியல் நோக்கம் யாருக்கு உண்டு? என்ற கேள்விக்கு ’ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சிக்கு’ என்று கூறிய ராசா, காங்கிரஸ் கட்சிக்கா? என்ற இடைக் கேள்விக்கு ‘ஆம்’ என்று பதில் அளித்தார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: