திங்கள், 2 ஜூன், 2014

தமிழகம் முழுவதும் மேலும் 360 அம்மா உணவகங்கள் !


தமிழகம் முழுவதும் மேலும் 360 புதிய அம்மா உணவகங்களை திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் திறக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் இந்த உணவகங்கள் திட்டம் உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. பிற மாநிலங்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த உணவகங்களின் பயன் பிற நகர்ப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, அடுத்த கட்டமாக சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வார்டுகளில் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் வீதம் 200 அம்மா உணவகங்கள், ஏற்கெனவே அம்மா உணவகம் உள்ள மதுரை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி தவிர்த்து, ஏனைய மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசுப் பொது மருத்துவமனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள், திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் தலா ஒன்று வீதம் 2 உணவகங்கள், கோவை, மதுரையில் தலா ஒரு உணவகம் மூலம் 2 உணவகங்கள் என மொத்தம் 360 புதிய அம்மா உணவகங்களைத் திறக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த அம்மா உணவகங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுடன் இவற்றையும் சேர்த்து மொத்தம் 654 அம்மா உணவகங்கள் மக்களின் தேவையை நிறைவு செய்யும்.
இந்த நடவடிக்கை பல லட்சம் ஏழை, எளிய மக்கள் மலிவான விலையில் தரமான உணவை உண்ண வழிவகுக்கும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை: