ஞாயிறு, 1 ஜூன், 2014

கலைஞருக்கு திமுகவின் அடிமட்ட தொண்டனின் கடிதம் : பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேர்வதில்லை !

நல்ல முடிவு எடுங்கள்! தி.மு.க தலைவருக்கு தொண்டன் எழுதிய கடிதம்!
திமுக தொண்டர்கள் கட்சியில் ஒரு பெரும் மாற்றத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளார்கள். தங்கள் கட்சியின் நிர்வாகிகள் மீது பல அதிருப்தியில் தமிழகம் முழுவதும்மே உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு தொண்டன் கட்சி தலைவருக்கு எழுதிய கடிதம். தலைமைக்கு தபால் அனுப்பியவர் நமக்கும் ஒரு நகல் தந்தார்.இதில் இருக்கும் கருத்துக்கள் தமிழகத்தின் திமுக தொண்டர்கள் மனநிலை...
தலைவருக்கு தொண்டனின் கடிதம்...தமிழினத்தின் தன்னிகரில்லாத தலைவர் மாண்புமிகு கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் பார்வைக்கு கழகத் தொண்டன் ......................... பணிவுமிக்க வணக்கத்துடன் எழுதுகிறேன். தி.மு.கழகத்தின் மிகப்பெரிய பலம் தங்களது தலைமை தான் என்பதை நாடறியும். தங்கள் வழியில் இயக்கப்பணியாற்றும் மாண்புமிகு ‘தளபதி’ அவர்களின் உழைப்பும், செயல்திறனும் இயக்கத்திற்கு பலமே  ? ஆகும். உண்மையை சொல்ல துணிந்த தொண்டனே திமுகவின் வீழ்ச்சி ஸ்டாலினின் ஏகாதிபத்தியத்துடன் ஆரம்பகிய உண்மைய சொல்ல உனக்கு ஏன் பயம் ? இந்த  ஸ்டாலின் பயம்உள்ள எந்த தொண்டனாலும் சரி தலைவனாலும் சரி இனி திமுகவின் சரிவை தடுக்க முடியாது,ஒரு வேளை ஜெயலலிதாவின் அடாவடி அளவுக்குமீறி போனால்  வேறு உருப்படியான   கட்சிகளும்  தமிழ்நாட்டில்  இல்லை என்ற முடிவுக்கு வந்தால்  மாத்திரமே  திமுக சரிவில் இருந்து மீள முடியும் , அதற்கும் வாய்ப்பு  இருக்கிறது அந்த  அம்மாவின் குணம் அப்படி , உங்களை போல அதுவும் திருந்தாது ,
16-வது மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தங்களை சந்திக்கும் தி.மு.க.வின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், வாக்களர்களுக்கு அ.தி.மு.க. பணம் கொடுத்ததால்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். நாம் தோற்றுப் போனோம் என்று சொல்வார்கள். சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். மேற்கண்ட நிர்வாகிகள் தப்பித்துக்கொள்ள சொல்லும் சொத்தை காரணம் தான் இது. தோல்விக்கான காரணம் என்ன?< தகுதியற்றவர்கள் வெற்றி பெறுகிறார்கள்! வரலாற்றுச் சிறப்பு மிக்க நமது இயக்கம் தோற்கடிக்கப்படுகிறது எதனால் இப்படி?< தி.மு.க. வின் தோல்வியையும், எதிரிகளால் விமர்சிக்கப்படுவதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் எழுதுகிறேன்.
தலைமைக்கழகத்துக்கு கருத்து சொல்கின்ற தகுதி எனக்கு இல்லை. 30 ஆண்டு கால கழகத் தொண்டன் என்கிற முறையில் எழுதுகிறேன்.

தோல்விக்கான காரணம்………..

1. தொடர்ந்து தி.மு.க.வில் பல ஆண்டு காலம் பதவியில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதிக்கமும் கோஷ்டி அரசியலும் முதல் காரணம். குறுநில மன்னர்களாக வலம் வரும் மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டத்தை தவிர மற்றவர்களை ஓரங்கட்டவும் ஒழிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.

ஒரு காலத்தில் ஒரு மாவட்டத்தில் இரண்டு கோஷ்டிகள் இருந்தாலும். தலைமைக்கு கட்டுப்பட்டார்கள். கட்சிப் பணியாற்றினார்கள் இன்றைய நிலை அப்படி இல்லை மேற்கண்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சிப் பணியை விட கோஷ்டிப்பணியை மட்டுமே செய்கின்றனர். மாவட்டக் கழகம் தொடங்கி கிளைக்கழகம் வரை கோஷ்டி அரசியல் தி.மு.க.வில் உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலை மாற்றப்பட இப்போது உள்ள அனைத்து மாவட்ட அமைப்புகளையும் உடனடியாக கலைத்து விடுங்கள்.

2. மாவட்டச் செயலாளரின் ஆதரவு பெற்றவர்கள் என்றால் கட்சிக்கு துரோகம் செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம். எந்த தவறு செய்தாலும் கட்சிக்கு துரோகம் செய்தாலும் தி.மு.க நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் பாயாது என்பதால் நிர்வாகிகள் தாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்படுகிறார்கள்.

3. கோஷ்டி அரசியலில் சிக்குண்டு தவிப்பவன் சாதாரண தொண்டன் மட்டுமே.

4. தேர்தல் நேரத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. எத்தனை ஊராட்சிகளில் அல்லது வார்டுகளில் தி.மு.க. நிர்வாகிகள் புதிய வாக்காளர்களை சேர்த்தார்கள். எங்கும் இந்தப் பணி நடைபெறவில்லை. ஒன்றிய நகரச் செயலாளர்கள் பணம் எவ்வளவு வரும், எப்போது வரும் என்று மாவட்டச் செயலாளரை பார்ப்பதும், ஊராட்சி வார்டு செயலாளர்கள் பணம் வருமா என்று ஒன்றிய நகரச் செயலாளர்களை பார்ப்பதுதான் தேர்தல் பணி என்கிற அவலமான நிலையும் “ எதிர்பார்ப்பு ” நிலையும் தான் எங்கும் இருந்தது.

5. அ.தி.மு.க.வின் தஞ்சை தொகுதி வேட்பாளர் ஒரு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். எந்த மனமாச்சர்யமும், கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் அ.தி.மு.க.வினர் அவரை அவர்கள் கட்சியின் பிரதிநிதியாக பார்த்து தேர்தல் பணியாற்றினர்.

தி.மு.கவில் திரு. டி.ஆர். பாலு வேட்பாளராக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படுகிறார். திரு. டி.ஆர். பாலுவின் உருவ பொம்மை கொளுத்தப்படுகிறது. அவரது படத்தை செறுப்பால் அடித்தார்கள். தி.மு.க. கரை வேட்டியை கழட்டி எறிந்தார்கள்.

இந்த உணர்வெல்லாம் கட்சியால் தான் நாம் என்கிற நிலைக்கு அப்பால், கட்சிக்கு நாம் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்கிற நிலைக்கு அப்பால், நமக்கு கட்சி கட்டுப்பட வேண்டும். இல்லையேல் துரோகம் செய்வோம் என்கிற ஆதிக்க உணர்வு ஆகும். இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி தேவை. தவறு செய்பவர்கள், கட்சிக்கு கட்டுப்படாதவர்கள், துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் தூக்கி எறியுங்கள்.

6. உட்கட்சி தேர்தல் ஜனநாயகமாக நடைபெறுகிறதா என்றால் அதுவும் இல்லை. தலைமையின் நோக்கம் உயர்ந்ததுதான் கட்சியின் சட்டதிட்டமும் ஏற்புடையதுதான். ஆனால் என்ன நடக்கிறது என்றால் வாக்காளர்கள் கடத்தி வரப்பட்டு வெளியூர்களில் திருமண அரங்குகளில் தங்கவைக்கப்பட்டு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி தங்களது ஆதரவாளர்களை ஒன்றிய, நகர செயலாளர்களாக வெற்றி பெறச் செய்கிறார்கள். பண, படை பலத்திற்கு முன்னால் எதிர்ப்பவர்கள் வெற்றிபெற முடியவில்லை. இம்முறையின் மூலம் தகுதியற்றவர்களும், கட்சி விசுவாசிகளை விட மாவட்டச் செயலாளர்களின் விசுவாசிகளும் பொறுப்புக்களில் வந்து அமர்ந்து விடுகின்றனர். இதில் எங்கே ஜனநாயகம் இருக்கிறது. இந்த கோபம், இங்கு உருவாகும் கோஷ்டி தான் இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு சாமான்யனும் பதவிக்கு வர முடியும் என்கிற நிலை உருவாக்கப்பட வேண்டும். மேற்கண்ட இரண்டாம் கட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் செயற்குழு, நிர்வாகக் குழுக்களில் இடம் பெறட்டும். மாவட்ட ஒன்றிய நகரச் செயலாளர்கள் துடிப்புடன் பணியாற்று பவர்களை நியமிக்க வேண்டும். (கண்டிப்பாக தேர்தல் முறை தவிர்க்கப்பட வேண்டும் )

7. பேசியே ஆட்சிக்கு வந்த இயக்கம்! தி.மு.க. பொதுக்கூட்டங்கள் மாலைநேரப் பல்கலைக்கழகம்! என்று சொல்லப்பட்ட இயக்கத்தில் ஒரு காலத்தில் கிளைக் கழக செயலாளரே பொதுக்கூட்டம் போடுவதற்கு உரிமை இருந்தது. ஆனால் இன்று மாவட்டச் செயலாளர் விரும்பினால் அல்லது அனுமதித்தால் மட்டுமே ஒரு பேச்சாளரால் அந்த மாவட்டத்தில் பேசமுடியும்.

உதாரணம். நான் கழகத்தின் பேச்சாளர் ஆவேன். ஆனால் 5 ஆண்டுகாலமாக மாவட்டச் செயலாளரால் ஒரு கூட்டம் கூட எனக்கு வழங்கப் படவில்லை. தேர்தல் நேரத்தில் கூட எனக்கு பேச வாய்ப்பு இல்லை. வேட்பாளர் விரும்பியும் நிர்வாகிகள் என்னை பயன்படுத்தவில்லை. காரணம் கோஷ்டி அரசியல். எனக்கு மட்டும் அல்ல கழகத்தின் அனைத்து சொற்பொழிவாளர்களுக்கும் இதே நிலை தான் உள்ளது. இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

8. தி.மு.க.வில் கொள்கை விளக்க அணி என்று ஒன்று உள்ளது. தலைவர் கலைஞரின் பிறந்தநாள், தளபதி அவர்களின் பிறந்த நாள் மற்றும் முப்பெரும் விழா கூட்டங்கள் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசும் பேச்சாளர்களை கொள்கை விளக்க அணிதான் முடிவு செய்கிறதா என்று எந்த ஒரு பேச்சாளரையாவது அழைத்து கேளுங்கள்.

விருப்பத்திற்கேற்ப ஒரு சில பேச்சாளர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு முழுவதும் வாய்ப்பு, தகுதியுள்ள பல பேச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த அணியிலும் கோஷ்டி அரசியல். இளைஞர் அணி தளபதி அவர்களால் நேரடியாக நியமிக்கப்பட்ட அணி எந்த ஒரு ஒன்றிய நகரத்திலும் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்களின் அசைவு இன்றி செயல்பட முடியாத நிலை தான் உள்ளது.

விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்த மாவட்டத்தின் எம்.பி.யாக இருந்த திரு.ஏ.கே.எஸ். விஜயன் பெயரே இடம் பெறவில்லை. கழகத்தின் சார்பு அணிகள் அனைத்தும் தந்திரமாக செயல்பட முடியாமல் கோஷ்டி அரசியலில் முடங்கிப்போய் கிடக்கிறது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

9. மறியல் போராட்டத்தை தி.மு.க அறிவித்த போது லட்சக்கணக்கானவர்கள் கைதானார்கள். இதற்கு எந்த நிர்வாகியும் காரணம் அல்ல. தலைமையின் ஆணையை ஏற்ற தொண்டர்களின் எழுச்சி அது. ஆனால் அதே தொண்டர்களால் அப்படி ஒரு எழுச்சியுடன் தேர்தல் பணியாற்ற இயலாத சூழல் நிர்வாகிகளால் ஏற்படுத்தப்படுகிறது. அ.தி.மு.கவில் மாவட்டச் செயலாளர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள். மீதமிருப்பவர்கள் எந்நேரமும் பதவி பறிக்கப்படுமோ என்ற பயத்தில் பணியாற்றுகின்றனர். ஆனால் தி.மு.க.வின் மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்கள் தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்கிற தைரியத்தில் அலட்சியமும், ஆணவத்துடன் கட்சியினரிடத்திலேயே நடந்து கொள்வதால் பெரும்பாலானவர்கள் இத்தகைய நிர்வாகிகளுக்கு எதிராகவே உள்ளனர். எனவே அனைத்து மாவட்ட அமைப்புகளும் உடனடியாக கலைக்கப்பட வேண்டும்.

10. ஒரு காலத்தில் சாதாரண சாமான்ய மக்களின் தோழனாக இருந்த தி.மு.க. இன்று பணம் படைத்த ஆதிக்கவாதிகளின் கைகளில் சிக்குண்டு கிடக்கிறது. இவர்களின் ஆடம்பரவாழ்க்கை, சொகுசுகார், பணபலம், சாதிபலம், இவைகளுக்கு முன்னர் சுயமரியாதை உள்ளவர்களால் சாதாரண சாமான்ய மக்களால் நிற்க முடியவில்லை.

நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. பொது மக்களுக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவைகளை சரிசெய்தால் மட்டுமே எதிர்காலத்தில் தி.மு.க வெற்றி பெற முடியும். தலைவர் அவர்களே! யாராக இருந்தாலும் கட்சியால் தான் நாம் என்கிற உணர்வுடன் மட்டுமே இருக்க வேண்டும். நம்மால் தான் கட்சி என்று நினைக்கின்ற நிர்வாகிகளை தூக்கி எறியுங்கள். தொண்டர்கள் உங்களுக்குப் பின்னால் ‘தளபதி ’ அவர்களுக்குப் பின்னால் என்றும் நிற்பார்கள். மாயாவதியின் முடிவைப்போல் அனைத்து அமைப்புகளையும் கலையுங்கள். இதற்குப்பெயர் சர்வாதிகாரம் அல்ல! கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயமாக இருக்கட்டும்.

ஜீன்-2 உயர்நிலை செயல்திட்டக்குழுவில் முடிவெடுங்கள்.

ஜீன்-3 கழகத்துக்கு புது ரத்தம் பாய்ச்கிற செய்தியை தங்களது பிறந்த நாள் செய்தியாக அறிவியுங்கள். நீங்கள் சுட்டு விரல் நீட்டும் திசையில் பயணிக்கும் எத்தியாகத்துக்கும் தயாரான உங்களின் அன்புத் தொண்டன்.

தலைவர்க்கு நன்றியுள்ள தொண்டனின் கடிதம்.
தொகுப்பு: இரா.பகத்சிங்.  நக்கீரன்.in

கருத்துகள் இல்லை: