வியாழன், 5 ஜூன், 2014

2ஜி வழக்கு: ஆ.ராசா உள்பட 10 பேர் ஜாமீன் மனு மீதான வக்கீல் வாதம் முடிந்தது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்காக டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியது தொடர்பான 2–வது வழக்கில் மத்திய அமலாக்கப்பிரிவு சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதில் ஆ.ராசா, கனிமொழி சரத்ரெட்டி உள்ளிட்டோருடன் தயாளு அம்மாள் பெயரும் இடம் பெற்றுள்ளது. தயாளு அம்மாள் தவிர குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். உடல் நலக்குறைவு காரணமாக தயாளு அம்மாளுக்கு கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் அவர் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 9 பேர் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். இன்று கடைசியாக 9–வதாக ஆ.ராசா தரப்பு வாதம் முடிந்தது.
தயாளு அம்மாள் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யாததால் அவரது வக்கீலையும் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஓ.பி.சைனி கூறினார்.
இதைத் தொடர்ந்து தயாளு அம்மாள் தரப்பில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வக்கீல் வாதமும் உடனே தொடங்கி முடிந்தது. இந்த வழக்கில் 10 பேரது ஜாமீன் மனு வாதம் முடிந்துவிட்டதால் விரைவில் இதில் தீர்ப்பு கூறப்பட உள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: